Ad

புதன், 25 மே, 2022

பி.கே-வுக்கு பதில் சுனில்... 2024-ல் புதிய டீமுடன் பாஜக-வை வீழ்த்துமா காங்கிரஸ்?!

2014, 2019 என அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, 2024-ல் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. இந்த நிலையில்தான், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு ஆர்வம் காட்டினார்.

பிரசாந்த் கிஷோர்

அது தொடர்பான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டிருந்தார். காங்கிரஸில் மிகப்பெரிய பதவியை அவர் எதிர்பார்த்ததாக செய்திகள் வெளியாகின. கடந்த மாதம் சோனியா காந்தியை அவர் சந்தித்தார்.

அப்போது, காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஒரு திட்டத்தை சோனியா காந்தியிடம் அவர் அளித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவதை கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் தாம் சேரப்போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரப்போவதில்லை என்று தெளிவான சூழலில், சுனில் கனுகோலுவின் இருப்பு காங்கிரஸில் உறுதியானது. இந்த நிலையில்தான், அகில இந்திய அளவில் ‘சிந்தனை அமர்வு’ மாநாட்டை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி நடத்தியது. 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற அந்த மாநாட்டில் அரசியல், விவசாயம், இளைஞர்கள், சமூகநீதி உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. கட்சியின் மறுசீரமைப்பு, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டு, சோனியா காந்தியிடம் அறிக்கைகள் அளிக்கப்பட்டன.

ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்துக்கு தேர்தலில் போட்டியிட ஒரு டிக்கெட் என பல முக்கிய முடிவுகள் சிந்தனை அமர்வு மாநாட்டில் எடுக்கப்பட்டன. மேலும், அரசியல் விவகாரக் குழு, டாஸ்க் ஃபோர்ஸ் 2024, அகில இந்திய பாதயாத்திரை ஒருங்கிணைப்புக்குழு என மூன்று குழுக்கள் காங்கிரஸ் கட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார்.

ராகுல் காந்தி

அப்போது, பா.ஜ.க-வுக்கு பிரசாந்த் கிஷோர் வியூகங்களை வகுத்துக்கொடுத்தார். அவரின் அணியில் இணைந்து பணியாற்றியவர்தான் சுனில். தற்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பணிக்குழுவில் தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் இடம்பெற்றுள்ளார்.

ஒரு காலத்தில் பா.ஜ.க-வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்தவர் என்றாலும், தற்போது பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை பிரசாந்த் கிஷோர் எடுத்திருக்கிறார். எனவே, காங்கிரஸில் சேரப்போவதில்லை என்று முடிவெடுத்த அவர், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. அதை மறுத்த பிரசாந்த் கிஷோர், பீகாரில் 3,000 கி.மீ-க்கு பாதையாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக மே மாதம் முதல் வாரத்தில் அறிவித்தார்.

காங்கிரஸ் அறிவிப்பு

அவர் தனிப்பாதையில் தன் பயணத்தைத் தொடங்கும் நிலையில், பா.ஜ.க-வின் பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சியை வரக்கூடிய தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்கான பொறுப்பு சுனிலிடம் வந்து சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே, பல தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் சுனிலுக்கு இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு கட்சிகளுக்குமே அவர் வேலை செய்திருக்கிறார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் `நமக்கு நாமே' பிரசாரத்தை சுனில்தான் வடிவமைத்தார். அந்த தேர்தலில் தி.மு.க வெற்றிபெறவில்லை என்றாலும், சுனில் வகுத்துக்கொடுத்த வியூகம் ஸ்டாலினின் இமேஜை உயர்த்தியது. அடுத்ததாக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அவர் பணியாற்றினார். அந்த தேர்தலில், 38 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரை தி.மு.க நாடிச்சென்றது. சுனில், அ.தி.மு.க-வுக்கு வியூகங்கள் வகுத்துக்கொடுத்தார்.

நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

தற்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகங்களை வகுப்பதற்கான குழுவில் சுனில் இடம்பெற்றுள்ளார். ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ள ‘டாஸ்க்ஃபோர்ஸ் - 2024’ குழுவில் சுனில் கனுகோலுவும் இடம்பெற்றிருக்கிறார்.

விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் இருந்தாலும், பிரதமர் மோடியின் செல்வாக்கு பெரியளவுக்கு சரிந்துவிடவில்லை. பா.ஜ.க பலமிழந்துவிட்டதா என்பதைக்காட்டிலும், சரிந்த செல்வாக்கை காங்கிரஸ் கட்சி எந்தளவுக்கு மீட்டெடுக்கப்போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. தற்போதைய சூழலில், மத்தியில் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சுனில் கனுகோலு என்ன வியூகங்களை வகுத்துக்கொடுக்கப்போகிறார்... டாஸ்க்ஃபோர்ஸ் என்ன ஆலோசனை வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்துத்தான், தனக்கு எதிரான சவால்களை காங்கிரஸால் முறியடிக்க முடியும்.!



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-congress-defeat-bjp-in-2024-election-with-help-of-sunil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக