Ad

வெள்ளி, 20 மே, 2022

குறைவான பணவீக்கம்... விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா... சாத்தியமானது எப்படி?!

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்க புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் கீழ் இயங்கும் `தேசிய புள்ளியியல் அலுவலகம்' (NSO). அந்தப் புள்ளிவிவரப் பட்டியலில், குறைந்த அளவிலான பணவீக்கம் கொண்ட மாநிலங்களில், முதல் இரண்டு இடங்களைக் கேரளாவும், தமிழ்நாடும் பிடித்திருக்கின்றன. இது சாத்தியமானது எப்படி?

பணவீக்கம்

தேசிய சாரசரியைவிட குறைவான பணவீக்கம்!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் 7.8 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பணவீக்க விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைவாக இருக்கிறது. கேரளாவின் பணவீக்கம் 5.1 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.4 சதவிகிதமாகவும் இருக்கிறது.

இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்களில் பணவீக்கமானது 9 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது.ஏப்ரல் மாதத்தின் பணவீக்க பட்டியலில், மேற்கு வங்கம் (9.1%), மத்தியப் பிரதேசம் (9.1%), ஹரியானா (9.0%), தெலங்கானா (9.0%) ஆகிய மாநிலங்கள்தான் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன.

விலைவாசி உயர்வு!

இந்தப் பட்டியல் வெளியான பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அத்தியாவசியப் பொருள்களுக்கான விலைவாசி என்பது குறைந்த அளவிலேயே உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சில பொருள்களின் விலை குறைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதாரணத்துக்குத் தமிழ்நாட்டில், கடந்த ஓராண்டில் அரிசியின் விலை 5 ரூபாய் குறைந்திருக்கிறது. உளுத்தம்பருப்பின் விலை 128 ரூபாயிலிருந்து 102 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. பிற மாநிலங்களில் கடலை எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடலை எண்ணெய்யின் விலை 187 ரூபாய் என்ற நிலையிலேயே நீடிக்கிறது.

என்ன காரணம்?

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் விலைவாசி உயர்வு குறைவாக இருப்பதற்கான காரணம் குறித்து பொருளாதார நிபுணர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார்கள். ``இந்தியா முழுவதுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருள்களில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழ்நாடு, கேரளாவைப் பொறுத்தவரை ஓமைக்ரான் தொற்று, அதாவது கொரோனா மூன்றாம் அலை பரவலுக்குப் பின்னர், அத்தியாவசியப் பொருள்களின் நுகர்வு குறைந்திருப்பதாகத் தெரிகிறது. இது, விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பான காலகட்டத்தில், இதே புள்ளிவிவரப் பட்டியலில், இந்தியாவின் தேசிய சராசரியைவிடக் கேரளா, தமிழ்நாட்டின் பணவீக்க சராசரி அதிகமாக இருந்தது. தற்போது அது தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், இந்தப் பணவீக்க புள்ளிவிவரம் ஏப்ரல் மாதத்துக்காதுதான். ஒவ்வொரு மாதமும் இந்த விகிதமானது மாறிக் கொண்டேயிருக்கும். எனவே, பணவீக்க விகிதம் குறைவதற்கான நடவடிக்கைகளில் கேரள, தமிழ்நாடு அரசுகள் தொடர்ந்து கவனம் செலுத்துவது அவசியம்!'' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/how-tamil-nadu-and-kerala-recorded-low-inflation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக