Ad

வெள்ளி, 27 மே, 2022

உலகின் டெக்னாலஜி தலைநகரமாக வளர்ந்த குட்டி பாலைவன நாடு! - இஸ்ரேல் ரகசியம்

அமெரிக்கா உட்பட உலகின் மிக பெரும் வல்லரசுகள் அனைத்தையும் தற்போது தங்கள் கண்ணசைவில் ஆட்டி வைப்பது குட்டி நாடான இஸ்ரேல் என்பது நம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. 9.61 மில்லியன் மக்கள் தொகை மட்டுமே கொண்ட இஸ்ரேல் ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்ட நிலப்பரப்பைக் கொண்ட 22,145 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள ஒரு சிறிய பாலைவன நாடு. ஒரு நீண்ட கடலோர சமவெளி, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் தெற்கில் நெகேவ் பாலைவனம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு குட்டி பாலைவன நாடுதான் இஸ்ரேல். இந்த குட்டி பாலைவன நாடுதான் இன்று உலகின் டெக்னாலஜி தலைநகரமாக உருவெடுத்து இருக்கிறது.

Israel

அதற்கு சான்றான சில தரவுகள் இங்கே :

1) மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்டெல், பிலிப்ஸ், டெஸ்லா போன்ற உலகின் 300 மிகப்பெரும் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்கள் தங்களின் முக்கிய பணிகளை இஸ்ரேலின் தலைநகரான Tel Aviv-ல் இருந்து நடத்துகின்றன.

2) சுமார் ஐந்தாயிரம் Technology Startup நிறுவனங்கள் இஸ்ரேலில் இருக்கின்றன. அதனால் உலக நாடுகள் இஸ்ரேலை Startup Nation என்றுதான் அழைக்கின்றன.

3) சுமார் 1000 நன்கு வளர்ச்சி அடைந்த வேறு பல டெக்னாலஜி நிறுவனங்கள் இஸ்ரேலில் இருக்கின்றன.

4) Venture Capitalist எனப்படும் டெக்னாலஜி தொழிலில் முதலீடு செய்யும் உலகளாவிய முதலீட்டாளர்கள் 100 பேருக்கு மேல் இஸ்ரேலில் அலுவலகம் வைத்து இருக்கிறார்கள்.

5) உலகில் உள்ள சைபர் செக்யூரிட்டி சேவை தரும் நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பங்கு இஸ்ரேலில்தான் இருக்கின்றன.

6) ஒப்பீட்டுத் தரவுகளின் அடிப்படையில் மற்ற நாடுகளின் வளர்ச்சி விகிதங்களுடன் ஒப்பிடும் போது இஸ்ரேலின் தொழில் நுட்ப வளர்ச்சி விகிதம் (147%) அமெரிக்கா (93%), இங்கிலாந்து (119%), சிங்கப்பூர் (100%), ஸ்வீடன் (144%), அயர்லாந்து (108%) போன்ற உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப மையங்களை முறியடித்து, தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. (Source : PitchBook, Jan 2022)

7) இஸ்ரேலிலின் டெக்னாலஜி ஏற்றுமதி ஆண்டுக்கு 18.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது.

இஸ்ரேலின் இத்தகைய அசுரதனமான டெக்னாலஜி வளர்ச்சிக்கு காரணம் அந்த நாட்டில் இருந்து உருவாக்கப்பட்ட ஏராளமான தொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களின் அசுரத்தனமான உழைப்பு மட்டுமே. வெற்றிகரமாக நாடெங்கும் ஏராளமான தொழில்முனைவோர்களை எப்படி உருவாக்குவது என்பதை இஸ்ரேலை பார்த்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

Israel - Tel aviv

புதிய கண்டுபிடிப்புகளை (Innovations) உருவாக்க தேவையான மிதமிஞ்சிய யோசிக்கும் திறமை, கூட்டு உழைப்பு கலாச்சாரம் (Collaborative Culture ), இஸ்ரேலியர்கள் உருவாக்கும் சங்கிலிதொடர் போன்ற அவர்களுடைய வெளியுலக தொடர்புகள், இயல்பாகவே அவர்களிடம் இருக்கும் எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்கும், விவாதம் செய்யும் குணம், இஸ்ரேல் அரசாங்கம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க செய்யும் எக்கச்சக்கமான நிதி உதவிகள் இவையே இஸ்ரேல் தொழில்துறையின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றால் அது மிகையில்லை.

தொழில் முனைவோர்களை உருவாக்குதல் மட்டுமின்றி, மாணவர்களை வெறும் புத்தக புழுக்களாக மட்டுமே வைக்காமல், செய்முறைகள் நிறைந்த கல்விமுறைக்கு உட்படுத்தி, அவர்களின் சிந்திக்கும் திறமையை சிறுவயது முதலே நன்றாக வளர்த்து அதன் மூலம் மட்டுமே இஸ்ரேல் என்ற இந்த குட்டி நாடு சர்வதேச டெக்னாலஜி அரங்கில் இன்று ஒரு அசுரன் போல வளர்ந்து இருக்கிறது. நாட்டின் இளைய தலைமுறை முழுக்க ஒரு புள்ளியில் இணைந்து, வளர்ச்சி என்ற ஒரு குறிக்கோளை நோக்கி மட்டுமே பயணிக்கின்றனர் என்பதை பற்றி படிக்கும்போது உண்மையில் வியப்பாக இருக்கிறது.

Tel aviv

இந்த இளைஞர்களை இப்படி ஒரு புள்ளியில் இணைத்து வைப்பது அங்கு குடிமக்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள ராணுவ பணி. ஒவ்வொரு இஸ்ரேலிய ஆணும் 32 மாதங்களும், ஒவ்வொரு இஸ்ரேலிய பெண்ணும் 24 மாதங்களும் கண்டிப்பாக இஸ்ரேலிய ராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்பது இஸ்ரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள சட்டம். இந்த ராணுவப்பணியின் மீது இளைஞர்களின் சிந்திக்கும் திறமை, கூட்டு உழைப்பு போன்றவை பட்டை தீட்டப்பட்டு கூர் தீட்டப்படுகின்றன. கட்டாய ராணுவப்பணி முடிந்து பொதுவாழ்க்கைக்கு வரும் ஒவ்வொரு இளைஞனுமே ஒரு புதிய தொழில் முனைவராக உருவாகும் அளவுக்கு சிறப்பான பயிற்சிகளை கொடுத்து அவர்களை வெளியில் அனுப்புகிறது இஸ்ரேலிய ராணுவம். இது உலகின் எந்த ஒரு ராணுவமும் இதுவரை செய்யாத புதுமை. இன்று இஸ்ரேலில் உள்ள வெற்றிகரமான தொழில் முனைவோர்களில் பெரும்பான்மையோர் இஸ்ரேலிய ராணுவத்தில் பணி புரிந்தவர்களே.

நம் ஊரில் கிண்டர் கார்டன் படிக்கும் குழந்தைகள் சறுக்கு மரம் விளையாடிக்கொண்டு இருக்கும் அந்த மிக சிறும் வயதில் இஸ்ரேலிய குழந்தைகள் ஓட்டை உடைசல், பழைய பொருள்கள் இவற்றை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, ஒன்றாக அணி சேர்ந்து வேலை செய்ய ஆசிரியர்களால் பயிற்சி கொடுக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான இஸ்ரேலிய சிறார் பள்ளிகளில் சறுக்கு மரம் போன்ற விளையாட்டு பொருள்களுக்கு பதிலாக குவியல் குவியலாக ஓட்டை உடைசல், பழைய பொருள்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதை நாம் காண முடியும் . இது எப்படி கல்வியை புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சிறந்த ஆயுதமாக சிறு வயதில் இருந்தே இஸ்ரேலியர்கள் பயன்படுகிறார்கள் என்பதற்கு அருமையான ஒரு உதாரணம்.

Tel aviv

இஸ்ரேல் என்ற நாடு மிகுந்த சர்ச்சைகளுக்கு நடுவிலும், சுற்றி உள்ள அத்தனை அரேபிய நாடுகளின் பகைக்கு நடுவிலுமே உருவாக்கப்பட்டது என்ற உண்மை நம் அனைவருக்கும் தெரியும். இன்று வரை இஸ்ரேல் எப்போதும் போர் பதட்டம் நிறைந்த ஒரு நாடாகவே உள்ளது. அதனால் இஸ்ரேலியர்கள் அனைவருக்கும் எப்போதும் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்கி இருக்கும் . அந்த பாதுகாப்பற்ற உணர்வும், எப்போது வேண்டுமானாலும் போர் மேகங்கள் சூழக்கூடிய அரசியல் களமும் மட்டுமே அவர்களை மிகவும் யோசிக்கும் திறன் உள்ளவர்களாக, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக மாற்றி டெக்னாலஜி உலகின் தலைவர்களாக மாற்றியுள்ளது என்பது என்னுடைய பார்வை.

இஸ்ரேலியர்கள் அனைவருமே சிறு வயதில் இருந்தே அபாயகரமான சூழ்நிலைகளை சமாளிக்கவும், சிக்கலான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் காண யோசிக்கவும், தனியாக செயல்படவும்,ஒரு அணியாக இணைந்து செயல்படவும் பள்ளி பருவத்தில் இருந்தே பயிற்றுவிக்கப்படுகின்றனர். உலகளாவிய அவர்களின் நட்பு சங்கிலி, மற்றும் தொழில் தொடர்புகள் மிகவும் நீண்டது மற்றும் உறுதியானது. உலகம் முழுக்க பரவியுள்ள இஸ்ரேலிய குடிமகன்களான யூதர்கள் அனைவரும் மிக பெரும் அறிவாளிகளாகவும், பெருத்த செல்வந்தர்களாகவும் அறியப்படுகிறாற்கள். குறிப்பாக அமெரிக்க அரசியலில் இவர்களின் ஆதிக்கம் எந்த அளவிலானது என்பதை அனைவரும் அறிவார்கள்.

Tel aviv

இஸ்ரேலியர்களின் கீழ்கண்ட நம்பிக்கைகள் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடங்கள்:

1) தோல்வியில் துவள கூடாது , தோல்வியை ஒருபோதும் ஒப்புக்கொள்ளக்கூடாது

2) நீங்கள் சந்திக்கும் சவால்கள் நீங்கள் முன்னோக்கி செல்வதை பாதிக்க விடாதீர்கள்

3) சாதனை புரிய வெளிப்படைத்தன்மை (Transparency) முக்கியம்

4) நம் சமூகம் தான் நமக்கு எல்லாம்

5) கீழ்ப்படியாமை என்பது தோல்வி கிடையாது . அது நம்மை கேள்வி கேட்கவும் நம் அறிவை பெருக்கிக்கொள்ளவும் தயார்படுத்தும்

6) உங்களுக்கு இயற்கை வளங்கள் இல்லாத போது, ​​அறிவை பெருக்குவதில் முதலீடு செய்யுங்கள்.

7) உங்கள் நம்பிக்கையை வலுவாக வைத்திருங்கள், உங்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் உழையுங்கள், உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

8) உங்கள் மக்களுக்கு வாழ்க்கையை நேசிக்கவும், அதை முழுமையாக வாழவும் கற்றுக்கொடுங்கள்

9) ரிஸ்க் எடுக்க பயப்பட கூடாது. தோல்வியை பற்றி கவலைப்படாது துணிந்து பெரிய ரிஸ்குகள் எடுங்கள்

10) கூட்டு முயற்சியும், உங்களின் சிறந்த நட்பு மற்றும் வியாபார தொடர்புகள் உங்களின் சாதனை பயணத்தை எளிதாக்கும்

இந்தியா உட்பட முன்னேற விரும்பும் ஒவ்வொரு உலக நாடும் இஸ்ரேலிடமிருந்து பாடம் படிக்க வேண்டும் என்றுதான் நான் சொல்லுவேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-israel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக