Ad

வியாழன், 7 ஏப்ரல், 2022

கிரிப்டோகரன்சிக்கு 30% வரி; விலகி ஓடும் முதலீட்டாளர்கள்; என்ன நடந்தது?

கிரிப்டோகரன்சிக்கு கடந்த காலத்தில் வரி விதிப்பு வரைமுறை எதுவும் இல்லாமல் இருந்தது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இந்த கிரிப்டோகரன்சிக்கு வர்த்தகத்துக்கு மத்திய அரசாங்கம் வரி விதித்திருக்கிறது. இந்த வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில், கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 1-ம் தேதி முதல் கணிசமாகக் குறைய ஆரம்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிப்டோ கரன்சி

எவ்வளவு வரி?

கிரிப்டோகரன்சியை வாங்கும்போது 1% டி.டி.எஸ் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு கிரிப்டோகரன்சியை வாங்குகிறீர்கள் எனில், 1,000 ரூபாயை டி.டி.எஸ் வரியாகக் கட்டியாக வேண்டும்.

அது மட்டுமல்ல, கிரிப்டோகரன்சியை வாங்கிய பிறகு அதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் 30% வரியாகக் கட்ட வேண்டும். உதாரணமாக, ஒருவர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ரூ.1 லட்சம் அவருக்கு லாபமாகக் கிடைக்கிறது எனில், ரூ.30,000 வரியாகக் கட்ட வேண்டும்.

மிரட்டும் ஜி.எஸ்.டி...

மேலே பார்த்த இந்த இரண்டு வரிகளும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், கிரிப்டோகரன்சியை வாங்குவதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்கிற பேச்சும் தற்போது எழுந்துள்ளது.

இதற்கு சிலர் 18% வரி விதிக்க வேண்டும் எனவும், இன்னும் சிலர் 28% வரி விதிக்க வேண்டும் எனவும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் எனில், கிரிப்டோகரன்சிக்கு விதிக்கப்படும் மொத்த வரியானது 59 சதவிகிதமாக இருக்கும்.

அன்று சந்தோஷம், இன்று துக்கம்!

கிரிப்டோகரன்சி வர்த்தகமானது 2012 முதலே நம் நாட்டில் நடந்துவருகிறது. ஆரம்பத்தில் மிகச் சிலர் மட்டுமே கிரிப்டோகரன்சியில் பணம் போட்டு வந்தனர். பிறகு பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளின் விலை ஏகத்துக்கு உயரத் தொடங்கியதைப் பார்த்து பலரும் இதில் பணம் போடத் தொடங்கினர். எக்கச்சக்கமாக லாபம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட சிலர், இதில் உள்ள ரிஸ்க்கைப் புரிந்து கொள்ளாமல் நிறைய பணம் போடுவதைப் பார்த்து, ஆர்.பி.ஐ-யும் மத்திய அரசாங்கமும் கவலைப்பட ஆரம்பித்தது.

கிரிப்டோகரன்சி வர்த்தகம் நம் நாட்டில் வேகமாக வளருவதைத் தடுக்க அந்த வர்த்தகத்தில் பணம் போட வங்கிகளுக்குத் தடை விதித்தது ரிசர்வ் வங்கி. ஆனால், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சை நடத்துபவர்கள் ஆர்.பி.ஐ-யின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். உச்ச நீதிமன்றமும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீண்டும் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தது. அதிலும் கோவிட் காலத்தில் பிட்காயின், எத்திரியம் போன்ற கிரிப்டோகரன்சி களின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது.

FM Nirmala Sitharaman

இந்த நிலையில், கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு மீண்டும் தடை வருமா அல்லது மத்திய அரசாங்கம் அதற்கு வரி விதித்து அங்கீகாரம் தருமா என்கிற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிற மாதிரி, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு வரி விதித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கிரிப்டோகரன்சிக்கு வரி விதிக்கப்பட்டதைக் கண்ட முதலீட்டாளர்கள் முதலில் அளவில்லா சந்தோஷம் அடைந்தனர். காரணம், கிரிப்டோகரன்சிக்கு வரி விதித்திருப்பதால், இனி அதற்கு மத்திய அரசாங்கம் தடை விதிக்காது என்று நினைத்தனர். ஆனால், வரி விதிப்பு இந்த அளவுக்கு இருக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால், தற்போது பெரும் துக்கம் அடைந்துள்ளனர்.

விலகி ஓடும் முதலீட்டாளர்கள்...

கிரிப்டோகரன்சிக்கு இவ்வளவு வரி விதித்தால், அதில் லாபம் பார்க்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த முதலீட்டாளர்கள் அதை வர்த்தகம் செய்வதில் இருந்து விலகி நிற்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாகச் சில கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் பிரதிநிதிகளிடம் பேசினோம்.

தற்போது முன்னணியில் இருக்கும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஸ்ஞ்சைச் சேர்ந்த ஒருவர் இப்படிச் சொன்னார்:

``கடந்த மாதம் கடைசியிலேயே 55% அளவுக்கு வர்த்தகம் குறைந்துவிட்டது. வர்த்தகம் செய்ய நினைப்பவர்களின் எண்ணிக்கையும் 40% அளவுக்கு குறைந்திருக்கிறது. இந்த மாதத்தின் முதல் ஐந்து தினங்களில் 20% - 30% வரை குறைந்துள்ளது’’ என்று சொன்னார்.

Cryptocurrency

இன்னும் சிலர், ``கடந்த மூன்று மாதங்களாகவே கிரிப்டோகரன்சியில் பணம் போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஏப்ரலில் விற்றால் வரி கட்ட வேண்டும் என்று பயந்துதான் பலரும் மார்ச் மாதத்திலேயே விற்றுவிட்டுச் சென்றுவிட்டார்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் 1.31 கோடி பேர் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில் கிரிப்டோகரன்சியில் ஈடுபடுகிறவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேராகக் குறைந்துள்ளதைப் பார்த்தாலே இதற்கு மத்திய அரசு விதித்த புதிய வரிதான் இதற்குக் காரணம் என்பது சட்டெனப் புரியும்’’ என்கிறார்கள் அவர்கள்.

தமிழக முதலீட்டாளர்கள் எப்படி?

சென்னையிலிருந்து செயல்படும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தமிழகத்தில் உள்ள கிரிப்டோகரன்சி கரன்சி முதலீட்டாளர்கள் முதன்மையாக முன்நிறுத்தி செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் சி.ஓ.ஓ-வுமான அர்ஜுன் விஜயிடம் பேசினோம். ``கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் வால்யூம் 40 - 50% குறைந்திருக்கிறது. கடந்த காலத்தில் பல்வேறு சமயங்களில் இந்த மாதிரி வால்யூம் குறைந்துள்ளது.

அர்ஜுன் விஜய்

ஆனால், மீண்டும் பழையபடி வால்யூம் அதிகரிக்கவே செய்துள்ளது. வால்யூம் குறைந்ததற்குக் காரணம், வரி விதிப்பு ஒரு முக்கியமான காரணம் என்றாலும், அதைவிட முக்கியமான காரணம், இப்போது கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்ற, இறக்கம் இல்லாமல், ஒரே நிலையில் இருப்பதுதான். விரைவில் முக்கியமான கிரிப்டோகளான பிட்காயின் மற்றும் எதிரியம் போன்றவற்றின் மதிப்பு உயரும்போது மீண்டும் பலரும் பணம் போடத் தொடங்கிவிடுவார்கள்.

தவிர, இப்போது அதிகபட்சம் வரியை மத்திய அரசாங்கம் விதித்துவிட்டது. இந்த வரி விகிதமானது காலப்போக்கில் குறையவே செய்யும். தவிர, கிரிப்டோ வர்த்தகத்துக்கு இவ்வளவு பெரிய வரி நம் நாட்டில் விதிக்கப்பட்டிருப்பதால், பலரும் சிங்கப்பூர், துபாய் நாடுகளில் உள்ள எக்ஸ்சேஞ்சுகள் மூலம் கிரிப்டோவில் பணம் போடுகிறார்கள். அதிகாரபூர்வமாக ரூ.2 கோடி வரை ஒருவர் வெளிநாட்டில் உள்ள எக்ஸ்சேஞ்சுகள் மூலம் கிரிப்போடோவில் பணம் போட முடியும். அப்படிச் செய்யும்போது இந்திய அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய வரி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வரி வருமானம் வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசாங்கம் இதற்கு வரி விதித்திருக்கிறது. வரி இழப்பு ஏற்படும் எனில், இனிவரும் காலத்தில் இதற்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்கத் தயங்காது’’ என்றார்.

புதிய வரி விதிப்பானது கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிர்ச்சி தரும் ஓர் அடியாக இருந்தாலும், காலப்போக்கில் அதிலிருந்து அவர்கள் மீண்டு வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் இனிவரும் காலத்தில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு விதித்துள்ள வரியைக் குறைக்க பரிசீலனை செய்யவும் வாய்ப்புண்டு என்பதே இப்போதுள்ள நிலை!



source https://www.vikatan.com/business/finance/cryptocurrency-witnesses-a-drop-in-investors-as-govt-levies-higher-tax

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக