Ad

புதன், 2 மார்ச், 2022

தேனி: ``அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும்!'’ -ஓபிஎஸ் வீட்டில் அதிமுக-வினர் தீர்மானம்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 -ம் தேதி நடைபெற்றது. இதில் சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக போட்டியிட்டது. அதிமுக தனது கூட்டணி கட்சியான தமமுக உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளுடன் மட்டும் சேர்ந்து போட்டியிட்டது. இதேபோல பாஜக, அமமுக, மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

கூட்டம்

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி இருந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றதில் பெரும்பான்மையான இடங்களில் வென்று உள்ளாட்சியை தன் வசமாக்கியது திமுக. மாநகராட்சியில் திமுக 43.59 சதவிகிதமும், அதிமுக 24 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன. நகராட்சியில் திமுக 43.49 சதவிகிதமும், அதிமுக 26.86 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன. இதேபோல பேரூராட்சியில் திமுக 41.91 சதவிகிதமும், அதிமுக 25.56 சதவிகிதமும் வாக்குகளை பெற்றன.

ஓபிஎஸ் பண்ணை வீடு

தமிழத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோரின் சொந்த மாவட்டங்களிலேயே அதிமுக தனது செல்வாக்கை இழந்தது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் பின்னடைவுக்கு அதிமுக பிளவுபட்டு கிடப்பதே காரணம் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

மாவட்ட செயலாளர் சையதுகான்

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர், சட்டப்பேரவை தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் எனக் கூறப்பட்டது. கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றால் பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். சசிகலா மற்றும் டி.டி.விதினகரன் ஆகியோர்களை கட்சியில் சேர்த்து அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று ஓ.பி.எஸ்ஸிடம் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.‌

ஓ.பி.எஸ்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், ''எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயா - ஜானகி அணியாக பிரிந்ததால் தான் அதிமுக தோல்வியடைந்தது. அதே போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சி பிளவுபட்டதால் தான் தற்போது தோல்வியைச் சந்தித்து வருகின்றோம்.‌ எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட அதிமுகவினரின் விருப்பமாக உள்ளது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கி உள்ளோம்.‌ அதனை பெற்றுக் கொண்ட ஓ.பி.எஸ். விரைவில் நல்ல தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

அமமுகவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம்தேனியில் நிறைவேற்றப்பட்டது போல தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது தொடரும். மேலும் மார்ச் 5 ஆம் தேதி தேனி மாவட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைத்த ஊழியர் கூட்டத்தைக் கூட்டி அமமுகவை அதிமுகவுடன் ஒருங்கிணைப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/politics/sasikala-should-be-included-in-the-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக