கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வெளியான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் தலைமை குறித்த சிறு சலசலப்பை உண்டாக்கியிருந்தது. இந்தநிலையில், `கட்சியில் ஒற்றைத் தலைமை தேவை என தலைமை முடிவு செய்தால் அதையும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அது காலத்தின் கையில்' என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது கருத்துத் தெரிவித்திருப்பது இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
தமிழகத்தில் 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்வரை அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கௌரவமான வெற்றியைப் பெற்ற போதிலும், உள்ளாட்சித் தேர்தல்களில் மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்து வருவது கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது. `கட்சியில் தலைவர்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் மட்டும் அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்தி ஐம்பதுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனால், கீழ்மட்ட, நிர்வாகிகள், தொண்டர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்களை கட்சித் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. அதனால்தான் கட்சி அதளபாதளத்துக்குச் சென்றுவிட்டது' என முணுமுணுக்கிறார்கள் முன்னணி நிர்வாகிகள் சிலர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னணி நிர்வாகிகள் சிலர் ,
``தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு சகஜமான ஒரு விஷயம்தான். அதிமுகவும் படுமோசமான தோல்விகளைச் கடந்த காலத்தில் சந்தித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் அம்மா. வேட்பாளர் தேர்வு தொடங்கி, தேர்தலுக்கான செலவுவரை ஏற்பாடுகள் மிகச் சரியாக இருக்கும். அனைத்தையும் செய்து, மோதிப்பார்த்து தோற்பது என்பது வேறு. ஆனால், திமுக பெரும் பலத்தோடு களத்தில் நிற்கும்போது, நாங்கள் பலவீனமாக நின்றுகொண்டு, அவர்களை எதிர்த்து தோற்றுப் போவதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. திமுகவினரே மிகவும் பரிதாபமாக பார்க்கும் நிலையில்தான் நாங்கள் இப்போது இருக்கிறோம்.
சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏக்களுக்கு கட்சி சார்பில் பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட கீழ்மட்டத் தொண்டர்களை கட்சி கைவிட்டுவிட்டது. பண உதவி செய்யாமல் போனது ஒருபுறம் என்றால், மாவட்ட, ஒன்றியச் செயலாளர்களின் முறையான சப்போர்ட் கிடைக்காமல் போனதுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. அதிலும் சென்னையில் எல்லாம் சொல்லவே வேண்டாம். சட்டமன்றத் தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் சரி சென்னையை ஒரு பொருட்டாகவே இரண்டு தலைமைகளும் கருதவில்லை. இங்குள்ள மாவட்டச் செயலாளர்களும் கண்டுகொள்ளவில்லை.
இரட்டைத் தலைமைகள் இரண்டு பேருமே தங்களின் பணத்தை கடைசிவரை வெளியில் எடுக்கவே இல்லை. அவர் செய்யட்டும் என இவரும் இவர் செய்யட்டும் என அவரும் ஒதுங்கிக் கொண்டார்கள். அதுமட்டுமில்லை, ஓ.பி.எஸ்ஸிடம் ஒரு விஷயத்துக்குப் போனால், இ.பி.எஸ்ஸுக்குப் பிடிக்காது. இவரிடம் போனால் அவருக்குப் பிடிக்காது. அதனால், நிர்வாகிகள் யாரும் எந்தப் பிரச்னைகளையும் தீர்க்கமுடியாமல், அப்படியே காலத்தைக் கழித்து வருகின்றனர். கடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கட்சி நிர்வாகிகள் யாராவது அவரிடம் உதவிக்குப் போனால், `உனக்கு செஞ்சா, அவர் ஏதாவது நினைச்சுக்குவார்' என அதே மாவட்டத்தில், பகுதியில் உள்ள வேறு யாரையாவது கைகாட்டி எதுவுமே செய்யாமல் தட்டிக் கழித்துவிடுவார்.
ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறார் கடம்பூர் ராஜூ. உண்மையைச் சொன்னால் அதற்கான காலம் தற்போதுதான். இவர்கள் இருவரில் மட்டுமல்ல, கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருக்கும் யாரையும் தங்களின் ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொள்ள தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை. இவர்களில் யார் ஒருவர் வந்தாலும் துணிச்சலாக சவால்களை எதிர்கொள்வார்களா, தாராளமாகச் செலவு செய்வார்களா என்பது சந்தேகம். அதனால், கட்சியின் ஒற்றைத்தலைமையாக சசிகலா வரவேண்டும் என்பதுதான் கட்சியிலுள்ள பெரும்பான்மையான நிர்வாகிகளின், தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அம்மா இருந்த காலத்திலேயே, வேட்பாளர் தேர்வில் தொடங்கி, முறையான வியூகங்களை வகுத்து, துணிச்சலாக செலவு செய்து கட்சியை தேர்தலில் வெற்றி பெற வைத்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. இந்த நேரத்தில், அவரைப் போன்ற ஒருவர்தான் கட்சித் தலைமைப் பொறுப்புக்கு சரியாக இருப்பார்.
அதுமட்டுமல்ல, வழக்குகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு எப்போதும் பயந்துகொண்டே இருப்பவர்களை தலைமையாக ஏற்பதா இல்லை சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டாலும் துணிச்சலாக அதை எதிர்கொள்பவர்களை ஏற்பதா என்றால் நிச்சயமாக அனைவரின் விருப்பமும் இரண்டாவதாகத்தான் இருக்கும். அந்தவகையில் சசிகலாதான் தலைமைக்கு ஏற்றவராக இருக்கிறார். ஒருசிலர் தினகரனைக்கூட தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவராக நினைக்கிறார்கள். ஆனால், சசிகலாதான் அனைத்து விதத்திலும் பொருத்தமானவராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராகவும் இருக்கிறார். விரைவில் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும். எங்கள் கட்சிக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்'' என்கிறார்கள்.
நிர்வாகிகளின் இந்த எதிர்பார்ப்பு குறித்து, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,
`` ஓ.பி.எஸ்&இ.பி.எஸ் முறையாகத் தலைமைப் பொறுப்பு தேர்வு செய்யப்பட்டவர்கள். கட்சிக்குள் ஒற்றைத் தலைமைக்கான குரல் எதுவும் எழவில்லை. வெளியில் இருந்து ஒருவர் வந்து எங்களைக் காப்பாற்றும் நிலையில் எங்கள் கட்சியும் இல்லை'' என்பதோடு முடித்துக் கொண்டார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-admk-internal-politics-and-sasikala-re-entry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக