Ad

சனி, 5 மார்ச், 2022

1600 இந்திய மாணவர்கள்; 16 கிலோமீட்டர்! - உயிரை காக்க வெடிகுண்டுகளுக்கு நடுவே நள்ளிரவில் நடை பயணம்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் நகரங்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் தாயகம் திரும்புவதற்காக நடைபயணமாகவோ, டாக்ஸி, பஸ் மூலமாகவோ பக்கத்து நாட்டின் எல்லைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்திய அரசு மாணவர்களை பிசோச்சின் நகருக்கு செல்லும்படியும், அது பாதுகாப்பான நகரம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதனால், மாணவர்கள் உடனடியாக கார்கிவ் நகரத்திலிருந்து இரவோடு இரவாக நடந்தே பிசோச்சின் நகரத்திற்கு செல்ல ஆரம்பித்தனர். 1,600 மாணவர்கள் இரவில் தொடங்கி அதிகாலை வரை நடந்திருக்கின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவிகளும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடந்திருக்கின்றனர். பிசோச்சின் நகருக்கு சென்ற இந்திய மாணவர்கள் முதியோர் இல்லம் மற்றும் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

கார்கீவ் நகர ரயில் நிலையத்தில் மாணவர்கள்

இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்டு, அழைத்து செல்வோம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால், பிசோச்சின் நகருக்கு சென்றபோது அங்கும் ரஷ்ய படைகள் குண்டுகளை வீச ஆரம்பித்தது. இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், ``இந்திய தூதரகம் உண்மையிலேயே எங்களை கொலை செய்ய முயற்சிக்கிறதா என்று தெரியவில்லை. பிசோச்சின் நகரில் எந்த வித பதுங்கு குழிகளும் இல்லை. தாக்குதலில் இருந்து மறைந்து கொள்ள வாய்ப்பே இல்லை. தாக்குதல் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இங்கும் தாக்குதல் நடக்கிறது. எங்களால் இங்கு அதிக நாட்கள் பாதுகாப்புடன் இருக்க முடியாது: என்றார்.

டெல்லியை சேர்ந்த மாணவி நிமீஷா லும்பா இது குறித்து கூறுகையில், ``நாங்கள் பிசோச்சின் நகரை நோக்கி நடந்த போது எங்கள் அருகில் சில மீட்டர் தூரத்தில் ஏவுகனைகள் வெடிகுண்டுகளை வீசின. எங்களுக்கு போக்குவரத்து வசதியை செய்து கொடுக்கும்படி எங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து உதவி கேட்டோம். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. வேறு வழியில்லாமல் நடந்தே வந்தோம். பிசோச்சின் நகரம் கார்கீவ் நகரை விட பாதுகாப்பானதாக இருக்கிறது. நீண்ட நேரம் நடந்ததால் பெரும்பாலான மாணவர்களுக்கு கால் வீங்கிவிட்டது. என்னாலும் நடக்க முடியவில்லை. ஆனால் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தோம். அதிகமான மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எங்களை இந்திய அரசு விரைவில் அழைத்து செல்ல வேண்டும் என்று காத்திருக்கிறோம்” என்றார்.

30 நிமிடங்களுக்கு ஒரு முறை தாக்குதல்

உக்ரைனின் மற்றொரு நகரமான சுமி நகரில் தங்கி இருக்கும் மாணவர்கள் தங்களை இந்திய அரசு விரைந்து மீட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாகவும், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சுமி நகரின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர். மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதாகவும், வெளியில் சென்று ஐஸ் கட்டியை எடுத்து வந்து அதனை சூடுபடுத்தி தண்ணீராக்கி பயன்படுத்துவதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். சுமி நகரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விடுதிகளில் தங்கி இருக்கின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் சாலைகள், மேம்பாலங்கள் சேதம் அடைந்திருப்பதால் வாகனங்களை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர். விடுதியில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுதியில் முடங்கி கிடப்பதாகவும், தங்களை விரைவில் மீட்க வேண்டும் என்று வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சட்டீஷ்கரை சேர்ந்த அகமத் என்ற மாணவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``சுமி நகரில் இருந்து யாரும் மீட்கப்படவில்லை. இங்கிருந்து ஹங்கேரி எல்லைக்கு செல்வதாக இருந்தால் 12 மணி நேரம் பிடிக்கும். அதனை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/ukraine-war-1600-indian-students-walk-16-kilometres-from-night-to-dawn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக