Ad

செவ்வாய், 2 மே, 2023

திரைப்பட பாணியில் திருட்டு: ஓடும் லாரியிலிருந்து ஆடுகளை கீழே தூக்கிப்போட்டுவிட்டு காரில் தப்பிய நபர்

எதைச்செய்தாலும் அந்த செயல்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் அனைத்துப் பகுதியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பிறகு, எந்த செயல் செய்தாலும் அவை உடனே கேமராவில் பதிவாகிவிடுகிறது. இது பின்னர் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் களவாணி படத்தில் நடிகர் விமல் உரமூட்டையை திருடுவது போல் ஆடுகளை திருடிய வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் ஆடுகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, அதிலிருந்து வேகவேகமாக ஒருவர் ஆடுகளை ரோட்டில் தூக்கிப் போட்டபடிச் சென்றார். அந்த லாரிக்கு அருகில் கார் ஒன்றும் பின் தொடர்ந்து வந்தது. லாரியிலிருந்து மொத்தம் 10 ஆடுகள் கீழே தூக்கிப்போடப்பட்டது. ஆடுகளை தூக்கிப்போட்ட பிறகு, லாரிக்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் மெதுவாக லாரியின் பின்னால் சென்றது. காரின் மேல் பகுதி அப்படியே திறந்து கொண்டது.

அதில் லாரியிலிருந்து ஆடுகளைத் திருடிய நபர் குதித்துவிட்டார். உயிரைப் பணயம் வைத்து நெடுஞ்சாலையில் ஆடுகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடுகள் இருந்த லாரியில் திருடன் எப்படி ஏறினார் என்று தெரியவில்லை. லாரிக்கு பின்னால் வந்த ஒரு காரில் இருந்த நபர், இந்த சம்பவத்தை அப்படியே தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அது இப்போது வைரலாகி இருக்கிறது.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இகத்புரி மற்றும் கோடி இடையேயான நெடுஞ்சாலையில் நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. கோடி நெடுஞ்சாலைப் பகுதியில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை இருக்கிறது. அந்தச் சந்தையில் ஆடுகளை விற்பனை செய்ய எடுத்து சென்ற போது, இத்திருட்டு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. லாரியில் இருந்து கீழே தூக்கிப்போடப்பட்ட ஆடுகள் பலத்த காயத்துடன் அப்படியே எழுந்து நின்ற காட்சி அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/man-flees-in-the-car-after-throwing-sheep-from-moving-truck

திங்கள், 1 மே, 2023

இரு ஆடியோக்கள்; இருமுறை சந்திப்பு... ஸ்டாலின் - பி.டி.ஆர் சந்திப்பும் அரசியலும்!

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியதுபோல் இரு ஆடியோக்கள் வெளியானது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் பற்றி பேசுவது போல் சில தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இது திமுக-வினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ஆர் உதயநிதி ஸ்டாலின்

இதற்கிடையே, பிடிஆர் குறித்த ஆடியோக்களை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக-வினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோதும் இதே கோரிக்கையை முன் வைத்தார். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரண்டாவது ஆடியோ வெளியான மாலையே முதலமைச்சர் வீட்டுக்கு சென்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரிடம், ‘ரிசைன் பண்ணிட்டு விளக்கம் கொடுங்க’ என முதல்வர் கோபமாக பேசியதாக எல்லாம் தகவல்கள் வெளியானது. அதற்கு மறுநாளே வீடியோ வடிவில் விளக்கம் கொடுத்தார் நிதியமைச்சர்.

பி.டி.ஆரிடம் முதல்வர் கோபமாக பேசியதை சமாதானப்படுத்தும் விதமாக மூத்த அமைச்சர்கள் சிலர், ‘பிடிஆரை ரிசைன் பண்ண வச்சா, அது பாஜக-வுக்கு வெற்றியாகாதா. இன்னும் சில ஆடியோக்களை அவர்கள் வெளியிட்டால் அந்த அமைச்சர்களும் ரிசைன் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுமே’ என பேசி சமாதானம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து பிடிஆர்-மீது சற்று கோபம் தனிந்த முதல்வர் நேற்று (மே-1) காலை அவரை வீட்டுக்கு வரச் சொல்லி சந்தித்திருக்கிறார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

முதல்வர், பிடிஆர் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்புத்தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், “ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக தொடுக்காது. ஆடியோ போலியானது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் புகார் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்” என்று கூறியவரிடம்,

‘நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் எனச் சொல்லப்படுகிறதே’ என்ற கேள்விக்கு, “நிதியமைச்சர் முதல்வரிடம் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நான் அங்கு இல்லை என்பதால் எனக்கு அதுகுறித்துத் தெரியாது” என்று தெரிவித்திருக்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்.

இந்த சந்திப்பு, பிடிஆரின் அடுத்த நகர்வுகள் குறித்து நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், “திமுக-வினரது மனதில் புழுங்கி கிடக்கும் விஷயங்களைத்தான் பிடிஆர் பேசி இருக்கிறார். மற்றவர்களால் பேச முடியவில்லை. ஏனென்றால் பிடிஆர் போல் பதவி போனாலும் பரவாயில்லை என்று செயல்பட கூடியவர்கள் இங்கில்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பிடிஆர் டெல்லி சங்கரி லால் ஹோட்டலில் தங்கியிருந்த போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போது டெல்லி சென்றாலும் தமிழ்நாடு இல்லத்தில் தங்காமல் இந்த ஹோட்டலில்தான் அதிகம் தங்குவார். அங்கு ஊடகத்துறையினர், மாற்று அமைப்பை சார்ந்தவர்கள் என பலரையும் சந்திக்கும் பிடிஆர் தன் மனதில் பட்டதை பேசுவார். அதுதான் இப்போது அவருக்கு நெருக்கடியாக வந்து நிற்கிறது.

இன்று டி.கே.எஸ்.இளங்கோவன், ‘ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக தொடுக்காது’ என்று, கட்சிக்கும் பிடிஆர் ஆடியோக்கும் தொடர்பில்லை என்பது போல் தான் பேசி இருக்கிறார். அதுவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

அதே நேரம் நடைப்பெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்க வேண்டிய சில அஜெண்டாக்கள் தொடர்பாக ஆலோசிக்கத்தான் முதல்வர் பிடிஆரை அழைத்திருக்கிறார் என்ற தகவலும் ஓடுகிறது” என்கிறார்கள்.

இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தொலைபேசி ஆடியோ விஷயத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எந்த தவறும் செய்யவில்லை. அவர் தந்துள்ளது ஒப்புதல் வாக்குமூலம்தான். ஒருவேளை அந்த ஆடியோ தவறானது என்று என் மீது வழக்கு தொடர்ந்தால் நிதி அமைச்சரின் தொலைபேசி உரையாடல் குறித்த ஒரிஜினல் ஆடியோவை வெளியிட நான் தயார். எந்த ஆய்வகத்திற்கும் அதை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

அண்ணாமலை

இன்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் ஸ்டாலின் இந்த ஆடியோ விவகாரம் குறித்து பேசியிருப்பதும் கவனிக்கத்தக்கது. ``ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் அளிக்க விரும்பவில்லை. ஆடியோ குறித்து அமைச்சரே இரண்டு முறை விளக்கம் அளித்துள்ளார்” என பதிலளித்துள்ளார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ptr-met-stalin-at-his-residence-what-is-the-politics-behind

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்ட உடனே சளி பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீமோ, கூல் டிரிங்ஸோ சாப்பிட்டால் உடனே சளி பிடிப்பது ஏன்? இரவு நேரத்திலும், மழைநாள்களிலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸை பொறுத்தவரை அவற்றின் டெம்ப்ரேச்சரை விடவும் அவை எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கும்போது, அதில் ஐஸ்கட்டிகள் சேர்ப்பார்கள். அந்த ஐஸ்கட்டி எவ்வளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டது என்பது கேள்விக்குரியதே. தெருவோரங்களில் சுகாதாரமற்ற முறையில் அடுக்கி வைத்து உடைக்கப்பட்டு, இதுபோன்று ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் குறித்த வீடியோ மற்றும் படங்களை நாம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பார்க்கிறோம்.

அதுவே வீட்டில் நாம் ஃப்ரெஷ்ஷாக ஜூஸ் தயாரித்துக் குடிக்கும்போது, அது குளிர்ச்சியாக இருந்தாலும் பிரச்னை வராது. வெளியிடங்களில் தயாரிக்கப்படும் ஜூஸில் பயன்படுத்தப்படும் பழம், ஐஸ், தண்ணீர், கிளாஸ், கையாள்பவர் என எல்லாவகையான சுத்தமும் கவனிக்கப்பட வேண்டும்.

மற்றபடி எப்போதுமே அளவுக்கதிக சூடாகவோ, அளவுக்கதிக குளிர்ச்சியாகவோ எதையும் சாப்பிடுவதைத் தவிர்த்து, மிதமான சூடு அல்லது குளிர்ச்சியில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் சரியானது. சாப்பிடும்போது எந்த உணவையும் சில நொடிகள் வாயில் வைத்திருந்து, மென்று, ரசித்துச் சாப்பிட வேண்டியதும் மிக முக்கியமானது.

ஐஸ்க்ரீமோ, கூல் டிரிங்ஸோ சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பதால் சளியே பிடிக்காது என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. இதற்கான அறிவியல்ரீதியான காரணங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்படும் உணவுகளால் ஏற்படும் தொற்றை, வெறும் வெந்நீர் குடிப்பதால் குணப்படுத்திவிட முடியாது. குளிர்ச்சியாகச் சாப்பிடும்போது தொண்டையில் ஏற்படும் ரத்த ஓட்டக் குறைவை பேலன்ஸ் செய்யுமே தவிர, வெந்நீரால் வேறு ஒன்றும் செய்யாது.

சளித்

பொதுவாகவே வெயில்நாள்களில் தொற்று பாதிப்பு குறைவாகவும், மழை மற்றும் குளிர்காலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகவும் இருக்கும். மற்றபடி மழையிலோ, குளிரிலோ ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாது என்று எதுவும் இல்லை. ஆனால் இந்த நாள்களில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதைத் தவிர்க்கும்படி பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-why-do-some-people-get-cold-immediately-after-eating-ice-cream-and-cool-drinks

Mann Ki Baat 100: ரேடியோ உரையால் பிரதமர் மோடி சாதிப்பதுதான் என்ன?!

பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் மன் கி பாத் உரையின் 100-வது நிகழ்ச்சியை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு முதன் முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, `மன் கி பாத்' (மனதின் குரல்) எனும்பெயரில் நாட்டு மக்களுடன் ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அதன் 100-வது உரை நிகழ்ச்சி ஏப்ரல் 30-ம் தேதி, ஐ.நா முதல் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான இடங்களில் பிரதமர் மோடியின் 100-வது உரை ஒளிபரப்பப்பட்டது.

`மன் கி பாத்' (மனதின் குரல்)

இந்த நிலையில், பிரதமர் மோடியின் `மன் கி பாத்' உரையால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன... இதனால் என்ன சாதிக்கிறார் பிரதமர் மோடி... உள்ளிட்டக் கேள்விகளை பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசனிடம் முன்வைத்தோம். நம்மிடம் பேசியவர், ``பிரதமரின் மனதில் உதித்த ஒரு புதுமையானத் திட்டம் மன் கி பாத். வடகிழக்கு மாநிலங்கள் முதல் தார் பாலைவனம் வரை, கார்கில் பனிப்பிரதேசம் முதல் கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வரை அனைத்துப் பகுதி மக்களையும் ரேடியோ மூலம் சென்றடைந்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த உரையின் வாயிலாக சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் செய்யும் நல்ல விஷயங்களைக்கூட பொதுவெளியில் பாராட்டிப் பேசுகிறார். பொதுவாக தேசத்தின் பெருமையை சமூக அடுக்கின் மேல்தட்டில் இருப்பவர்களைப் பற்றி பேசியே மாய்ந்துபோகிறோம். ஆனால் பிரதமர் மோடி சமூக அடுக்கின் கீழே இருக்கும் மக்கள் எப்படி சிறப்பாக இருக்கின்றார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறார்.

ஒரு மண்பானை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளி, மரம்வைக்கும் மூதாட்டி, வாழைநாரில் கைவினைப்பொருள்கள் செய்யும் பெண்மணி என எளிய மக்களைப் பற்றிப் பேசுகிறார். ஜனநாயகத்தின் வளர்ச்சி என்பது தவறுசெய்பவர்களை தட்டிக்கேட்பது மட்டுமல்ல, நன்மை செய்பவர்களை தட்டிக்கொடுப்பதும்தான் என்றவகையில் பிரதமர் மோடி நன்மை செய்யும் எளிய மக்களைத் தட்டிக்கொடுக்கிறார். இது அந்த மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் வேர்களுக்கு இருக்கின்ற பெருமை வெளி உலகுக்கு தெரிந்திருக்கிறது. பிரதமரின் ஆளுமைக்கு இருக்கும் வசீகரம் மக்களை ஈர்த்திருக்கிருக்கிறது. இதற்கெல்லாம் மன் கி பாத் உரையின் மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இராம ஸ்ரீனிவாசன்

அதேபோல பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கருத்து கேட்டோம். ``பிரதமர் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு தன் கருத்துகளைக் கூற மன் கி பாத்தை பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் பல கருத்துகளைக் கூறிவருகிறார். ஆனால், அவரது உரையின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்மந்தமே கிடையாது. மக்களுக்காகப் பேசுகிறார் என்றால், டெல்லியில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஓராண்டாக விவசாயிகள் போராடினார்களே... அவர்களைச் சந்தித்து, `உங்களின் பிரச்னை என்ன?' என்று கேட்டாரா பிரதமர் மோடி. குறைந்தபட்சம் வேளாண்துறை அமைச்சரையாவது அங்கு அனுப்பிவைத்தாரா... இல்லை;

இப்போதும் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்னையை காதுகொடுத்து கேட்கக்கூட பிரதமர் மோடி தயாராக இல்லை! ஆனால் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் கேட்டனர். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் பிரச்னையைக் கேட்டு ஆறுதல்சொல்லி ஆதரவளித்தனர்.

கோபண்ணா

1977-ல் பீகார் மாநிலம், பெல்சியில் 10-க்கும் மேற்பட்ட தலித் மக்கள், மாற்றுச் சாதி நிலபிரப்புகளின் அடியாள் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது கனமழை, ஆற்றில் வெள்ளம், சேரும் சகதியுமான பாதை என பல்வேறு தடைகளைத்தாண்டி 10 கி.மீட்டருக்குமேல் யானைமீது அமர்ந்துசென்று பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் இந்திரா காந்தி!

அந்த மக்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித்தந்தார். ராஜீவ் காந்தியும் அதைத்தான் செய்தார். அந்த வரிசையில் பாரத் ஜோடோ யாத்திரையின்மூலம் நாட்டு மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. அவர் மக்களோடு உரையாடினார் அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். இதற்கெல்லாம் மூலக்காரணம், `எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்குசென்று மக்களுக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்கவேண்டும்' என்கிற நேரு குடும்பத்தின் பாரம்பர்யம்தான்.

ராகுல் காந்தி - மோடி

ஆனால், பிரதமர் மோடியோ தொலைக்காட்சியிலும் மன் கி பாத் ரேடியோவிலும் பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர மக்களை நேரில் சந்திக்கத் தயாராக இல்லை. ஒரு நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஜனநாயக உணர்வு இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் தேவைக்கு அதிகமாகவே எம்.பி-க்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அவர் ஒரு `நாடாளுமன்ற ஜனநாயகவாதி'யா என்றால் இல்லை! மோடிமீது மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. காரணம் மோடி ஒரு ஜனநாயகவாதி இல்லை! மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரி!" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mann-ki-baat-100-episode-celebration-what-modi-achieved

பெண்கள், திருமாங்கல்யச் சரடை மாற்றுவதற்கு உகந்த நாள் எது?


செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில், பகல்வேளையில் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நூல் அறுந்துவிட்டது எனில், அப்போது நேரம் காலம் பார்க்காமல், உடனே மாற்றிக்கொள்வது சிறப்பு.

திருஷ்டி கழிக்கும் உப்பை என்ன செய்யலாம்?

கற்பூரம், பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை கொண்டு திருஷ்டி சுற்றுவது வழக்கம். இந்த வரிசையில் உப்பும் உண்டு. வீட்டில் திருஷ்டி சுற்றப்படும் உப்பை நீர்நிலைகளில் சேர்க்கலாம். அருகில் நீர்நிலை இல்லையெனில், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் சேர்த்து, உப்பு கரைந்ததும் அந்தத் தண்ணீரை மற்றவர் கால் படாத இடத்தில் கொட்டலாம்.

திருஷ்டி கழிக்க உகந்த நாள்கள் என்ன?

திருஷ் - பார்வை. `பார்வை மூலம் ஏற்படும் பாதிப்பே திருஷ்டி' என்கின்றன ஞான நூல்கள். சம்பிரதாயம் சார்ந்து பல்வேறு முறைகளில் திருஷ்டி கழிக்கும் வழிமுறைகள் உண்டு. அவ்வாறு திருஷ்டி கழிப்பதற்கு ஞாயிறு, அமாவாசை ஆகிய நாள்கள் ஏற்றவை.

சுபகாரியங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டிய நாள்கள் எவை?

நாள்களில் சனி, செவ்வாய்; நட்சத்திரங்களில் கேட்டை, பூராடம்; திதிகளில் அஷ்டமி, நவமி; யோகங்களில் மரண யோகம் ஆகியவை சுபகாரியங்களில் விலக்கப்படும்.எல்லா காரியங்களுக்கும் கால-நேரம் பார்ப்பது அவசியமா?

கடமையைச் செய்வதற்கு காலம் பார்க்க வேண்டாம். காலம் வரும் வரை காத்திருந்து, கடமைகளைத் தள்ளிப் போடக் கூடாது என்கின்றன ஞானநூல்கள். தாய்- தந்தை கவனிப்பு, நமது காலைக் கடன்கள், குடும்பப் பராமரிப்பு, அரசாங்க உத்தரவு, அலுவலக வேலைகள், கடவுள் வழிபாடு, கொடை வழங்குதல், பிறருக்கு உதவி செய்தல் இவற்றுக்குக் கால- நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

வீட்டில் நவகிரக படங்களை வைத்து பூஜிக்கலாமா?

நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் சகல இடங்களிலும் இறை சாந்நித்தியத்தைப் பெற முடியும். ஆகவே, வீட்டிலேயே நவகிரகத்தை ஆராதிக்கலாம். நமது நல்லது- கெட்டதை வரையறுப்பதில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகளுக்குப் பங்கு உண்டு. காலத்துடன் இணைந்தவை இவை. காலத்தை இயக்கும் இறையின் அருளைப் பெற நவகிரக வழிபாடு துணை செய்யும்.

மங்கல ஆரத்தி ஏன் தெரியுமா?

மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் சிவப்பாக மாறிவிடும். இந்த நீரை தட்டில் ஏந்தி ஆரத்தி எடுப்பர். புதுமணத் தம்பதியிடம் திருஷ்டி தோஷம் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக ஆரத்தி எடுப்பது உண்டு. நிகழ்வின் நிறைவைக் குறிப்பது ஆரத்தி. இதேபோல், என்றும் மங்கலம் பொங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடவுள் துதியுடன் மங்கல ஆரத்தி எடுப்பது உண்டு

ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா?

பிறக்கும் நேரத்தால் எந்தக் கெடுதலும் குழந்தைக்கும் இல்லை; பெற்றோருக்கும் இல்லை. ஆக, ராகு காலம் - எமகண்டம் என்று எவ்வித தருணமாயினும் குழந்தை பிறப்பு குறித்து நெருடல் தேவையில்லை. சித்திரை அப்பன் வீதியிலே, மூலத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது... இப்படியெல்லாம் ஆராயாமல் சிலரால் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. பிறப்பு நேரம் குறித்து எவ்வித நெருடலும் தேவையில்லை.

அஷ்டமி என்றாலே கஷ்டமா?

நடைமுறையில் பெரும்பாலானோர் அஷ்டமியை விலக்குவதால், அதுகுறித்து மன நெருடல் உண்டாவது இயற்கை. தேய்பிறை அஷ்டமியில் திருமணம் செய்யலாம் எனும் வழக்கம் கேரளப் பகுதியில் உண்டு. அஷ்டமி, துவாதசி போன்றவை பேச்சு வார்த்தைகளில் வெற்றி பெற ஏற்புடையவை. அம்பாள் பூஜைக்கு அஷ்டமி சிறப்பு. கோகுலாஷ்டமி, பைரவாஷ்டமி வழிபாட்டுக்குரியவை.



source https://www.vikatan.com/spiritual/astrology/astrological-remedies-2

02.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May - 2 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/02052023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சோஷியல் மீடியா மூலம் 34 பேரின் தற்கொலைகளைத் தடுத்த மும்பை சைபர் பிரிவு போலீஸ்; எப்படித் தெரியுமா?

இன்றைக்கு சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொள்கின்றனர். சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டு சிலர் தற்கொலையும் செய்கின்றனர்.

அது போன்று சோஷியல் மீடியாவில் தங்களது துக்கத்தைப் பகிர்ந்துகொண்ட பிறகு தற்கொலை செய்துகொள்பவர்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து, அதைத் தடுத்துவருகின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரக்கூடிய தகவல்களை அந்த நிறுவனங்கள் உடனுக்குடன் மும்பை சைபர் பிரிவு போலீஸாருக்குப் பகிர்கின்றனர்.

இதற்காக சைபர் பிரிவு போலீஸார் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை வைத்திருக்கின்றனர். சந்தேகத்துக்கிடமான முறையில் தற்கொலை மனநிலையில், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் யாராவது தேடினாலோ அல்லது தகவல்களைப் பகிர்ந்துகொண்டாலோ உடனே சம்பந்தப்பட்ட நிறுவனம் மும்பை சைபர் பிரிவுக்குச் சம்பந்தப்பட்ட நபரின் இ-மெயில், போன் நம்பர் போன்ற விவரங்களை அனுப்பிவைக்கும். அவர்களுடன் சோஷியல் மீடியாவில் போலீஸார் சாட்டிங் செய்து அவர்களின் தற்கொலை மனநிலையை மாற்றுகின்றனர்.

போன் நம்பர் இருந்தால் அந்த நம்பரில் தொடர்புகொண்டு கவுன்சிலிங் கொடுக்கின்றனர். இதற்காக மும்பை சைபர் பிரிவு போலீஸார் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிடமிருந்து தகவல்களைப் பெறும் இன்ஸ்பெக்டர் பாட்டீல் இது குறித்து, ``சில நேரங்களில் அதிகாலை 3 மணிக்குக்கூட எங்களுக்குத் தகவல் வரும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் வரக்கூடிய பதிவுகளை அப்படியே எடுத்து எங்களுக்கு அனுப்புவார்கள். சம்பந்தப்பட்ட நபரின் போன் நம்பர் இருந்தால், உடனே அவரைத் தொடர்புகொண்டு பேசுவோம்.

போன் ஆஃப் ஆகியிருந்தால் அவரின் சோஷியல் மீடியா கணக்கை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து ,அந்தத் தகவல்களை உள்ளூர் போலீஸாருக்கு அனுப்பிவைப்போம். எங்களுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரம் மட்டுமல்லாது, நாடு முழுவதுமிருந்து இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் பற்றிய விவரங்கள் வந்துகொண்டிருக்கும். இந்த ஆண்டில் மட்டும் அது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 34 பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம். மது பழக்கத்தால் அதிக அளவில் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது.

சமூக வலைதளம்

ஒருவர் தன்னுடைய மனைவி, அவரின் காதலனுடன் வெளியேறிவிட்டார் என்று கவலை தெரிவித்திருந்தார். உடனே நாங்கள் அந்தப் பெண்ணின் குழந்தைகளின் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டோம். அதைப் பார்த்து அந்தப் பெண் திரும்ப வந்துவிட்டார். இதன் மூலம் அந்த நபரின் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டது'' என்றார்.



source https://www.vikatan.com/crime/mumbai-cyber-police-have-stopped-34-people-from-committing-suicides-through-24-hour-online-monitoring