Ad

வெள்ளி, 23 ஜூன், 2023

பரளதரததல பணகள மனனற வணடம!

சர்வதேச அளவில் பாலின சமத்துவ இடைவெளி குறித்த குறியீட்டை (Index) உலகப் பொருளாதார மையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நாம் சற்று ஆழமாக உற்றுநோக்கினால், இந்த விஷயத்தில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் பின்தங்கி இருக்கப்போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது.

சர்வதேச பாலின இடைவெளி எப்படி இருக்கிறது என்பது குறித்து 146 நாடு களில் ஆய்வு செய்து, ஒவ்வொர் ஆண்டும் அறிக்கை வெளியிடப்படுகிறது. பாலின சமத்துவ இடைவெளி குறித்த குறியீட்டில் நம் நாடு கடந்த ஆண்டில் 135-வது இடத்தில் இருந்தது. ஆனால், ஒரே ஆண்டில் 8 இடங்களுக்கு முன்னேறி, தற்போது 127-வது இடத்தை அடைந்திருப்பது, ஓரளவுக்கு வளர்ச்சிதான்!

நம் நாட்டில் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதில் இருக்கும் இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது. கல்வியைப் பொறுத்தவரை, பாலின இடைவெளி 64.3% அளவுக்குக் குறைவாக இருப்பது ஆரோக்கியமான விஷயம் என உலகப் பொருளாதார மையம் சுட்டிக் காட்டியிருக்கும் அதே நேரத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்பதில் இருக்கும் இடைவெளி 36.7% என்கிற அளவில் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதாவது, 36% பெண்களே வேலைக்குச் சென்று பொருளீட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பு மிக மிக அவசியம் என்பதை இனிவரும் காலத்திலாவது புரிந்துகொண்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு அரசுத் தரப்பில் இருந்து சில நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் மட்டுமன்றி, தனியார் அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். நிர்வாகம் உட்பட எல்லா நிலைகளிலும் பெண்கள் பங்கேற்பது அவசியம் என்பது உணரப்பட்டு, அதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதே சமயம், தங்களின் எதிர்காலத்தைத் தாங்கள்தான் நிர்ணயித்துக் கொள்ளப்போகிறோம் என்பதை எல்லாப் பெண்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இன்றைக்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்கள், படித்து முடித்த பின் வேலைக்குச் செல்லும்போது மூன்றில் ஒரு பெண்ணாகக் குறைவது ஏன், நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இது அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்திப்பது அவசியம். இன்றைக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் இல்லாத கிராமங்கள் இல்லை. ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என்று தொடங்கி, சிறு தொழில்கள் நடத்துவது எனப் பல விஷயங்களைச் செய்யலாம். இதற்கு வங்கிகளும் கடன் தரத் தயாராக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெண்கள் சரியாகப் பயன்படுத்தினால், அவர்களின் பொருளாதார நிலை நிச்சயம் உயரும்!

பாலின சமத்துவ இடைவெளி குறித்த குறியீட்டில் 8 இடங்களுக்கு முன்னேறி விட்டோம் என்று நிற்காமல், உலகின் முதல் 50 இடங்களுக்குள் வரத் தேவையான நடவடிக்கைகளை நாம் முதலில் எடுக்க வேண்டும். அடுத்து, முதலிடம் நோக்கி முன்னேற வேண்டும். பாலின சமத்துவ இடைவெளி முற்றாகக் குறைய வேண்டுமெனில், பெண்களை அடக்கி வைக்க நினைப்பவர்கள் அடங்க வேண்டும். பெண்களும் அடங்கியிருக்க நினைக்கக் கூடாது!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/business/economy/the-gender-equality-gap-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக