Ad

செவ்வாய், 6 ஜூன், 2023

கிருஷ்ணகிரி: `சிப்காட் நிலப் பிரச்னைக்கு தீர்வு வேண்டும்’ - 150 நாள்களாக போராடிய விவசாயி மரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளி கிராமத்தில், 5-வது சிப்காட் வளாகம் அமைக்க, கடந்த 2022, ஏப்ரல் மாதம் மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்தன. இதற்காக, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளில், 3,034 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தத் திட்டமிட்டதுடன், வருவாய்த்துறை இதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடங்கியது.

போராட்டம் நடத்தும் பெண்கள்.

கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலத்தில், நெல், கேரட், தக்காளி என, பலவகை பயிர்கள் சாகுபடி செய்யும் விளைநிலங்களாக, மூன்று போக சாகுபடியும் முழுமையாக நடக்கும் அளவுக்கு நீராதாரமுள்ள விளைநிலங்களாக உள்ளன. இதனால், நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஆடு, மாடுகளுடன் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது, சாலைமறியல் எனப்பல போராட்டங்கள் நடத்தியதுடன் கடந்த ஜனவரி, 6-ம் தேதி முதல், காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இறந்த விவசாயி அன்னையப்பா.

இப்படியான நிலையில், 150 நாட்கள் போராட்டத்தை நிறைவு செய்த விவசாயிகள், நேற்று முந்தினம் முதல், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், 150 நாள்கள் தொடர்ந்து போராட்ட களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்த, மூத்த விவசாயி அன்னையப்பா (60), நேற்று முந்தினம், இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சிய அரசு...

இது குறித்து,  ‘சிப்காட் நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குழு’ ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் நம்மிடம், ‘‘தொடர்ந்து, 150 நாட்களை கடந்து போராட்டம் நடத்துகிறோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளை செவிமடுக்காமல், பிரச்னைக்கு தீர்வு காணாமல் அலட்சியமாக உள்ளது.

சத்திய நாராயணன்.

150 நாள்களாக தொடர்ந்து போராட்ட களத்துக்கு வந்த, அன்னையப்பா, நேற்று முந்தினம் காலை, போராட்ட களத்துக்கு வருவதற்கு தனது வீட்டில் தயாரான போது, உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். தனது நிலம் பறிபோகுமென்ற அச்சத்தில், இத்தனை நாட்களாக மன உளைச்சலில், போராட்ட களத்துக்கு வந்த அன்னையப்பா இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. நேற்று காலை கூட, உண்ணாவிரத போராட்டத்தில், 3 பேர் மயங்கி விழுந்துள்ளனர். அலட்சிய அரசு விரைவில், சிப்காட் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார், வருத்தத்துடன்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/krishnagiri-farmer-who-fought-for-150-days-dies-sipcot-land-issue-should-be-resolved

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக