Ad

ஞாயிறு, 11 ஜூன், 2023

தி.மலை: ``காப்பாற்றுங்கள் ஐயா..!" - ராணுவ வீரரின் உருக்கமான வீடியோ; மறுக்கும் எஸ்.பி; விவரம் என்ன?!

காஷ்மீரில் வேலை செய்யும் இந்திய ராணுவ வீரர் பிரபாகரன் என்பவர் பேசும் வீடியோ பதிவொன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோ பதிவில் பேசும் அவர், "நான் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்திற்கு உட்பட்ட படவேடு கிராமத்தை சேர்ந்தவன். காஷ்மீரில் வேலை செய்து வருகிறேன். படவேடு கிராமத்தில், ரேணுகாம்பாள் கோயில் அருகே எனது மனைவி கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. சுமார் 120 பேருக்கு மேல் சேர்ந்து அந்த இடத்தெல்லாம் அடித்து உடைத்து, எனது மனைவியும் அடித்து காதில், மூக்கில் எல்லாம் ரத்தம் வந்து, இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன ஏதானதென்றே தெரியவில்லை. எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை எஸ்.பி அவர்களுக்கு எங்களுடைய அதிகாரி தனிப்பட்ட முறையில் பேசினார்கள். 'புகார் எழுதி அனுப்புங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்' என தெரிவித்திருக்கிறார்கள். அதன்படி நானும் புகார் எழுதி அவர்களுக்கு அனுப்பி இருக்கிறேன். லோக்கல் போலீஸில் சொன்ன போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போன இடமெல்லாம் அடிக்கிறார்களாம். டி.ஜி.பி ஐயா அவர்களே எப்படியாச்சும் காப்பாற்றுங்கள். அரை நிர்வாணமாக்கி என் மனைவியை அடித்திருக்கிறார்கள். இது எந்த உலகத்தில் நியாயம் பாருங்கள். காப்பாற்றுங்கள் ஐயா. நான் ஒரு ராணுவ வீரனாக இருந்து கீழே விழுந்து கேட்கக்கூடாது... இருந்தாலும் கேட்கிறேன். வேறு வழி இல்லை, காப்பாற்றுங்கள் ஐயா... காப்பாற்றுங்கள் ஐயா..." என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஆனால், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், "படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோவில் அருகே, ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குன்னத்துர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டடம் கட்டியிருக்கிறார். அதனை, படவேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வமூர்த்தி என்பவரிடம் ரூ-9.50 லட்சம் பெற்றுக்கொண்டும், மாத வாடகையாக ரூ.3000-க்கு வாடகையாகவும் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு விட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு குமார் இறந்துள்ளார். எனவே, அவரது மகன் ராமு... கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி செல்வமூர்த்தியிடம் கேட்டிருக்கிறார். இது குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி செல்வமூர்த்திக்கு ரூ.9.50 லட்த்தை ராமு கொடுத்துவிடுவது என்றும், அதனைப் பெற்றுக் கொண்டு 10.02.2023-ம் தேதியன்று செல்வமூர்த்தி கடையை காலி செய்வதென்றும் எழுத்து மூலமாக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன்பின்னர், செல்வமூர்த்தி ஒப்பந்தப்படி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமலும், கடையையும் காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார்.

திருவண்ணாமலை எஸ்.பி ஆபீஸ்

இந்த நிலையில் தான், நேற்று முந்தினம் (10.06.2023) காலை சுமார் 10 மணிக்கு ராமுவும், அவரது குடும்பத்தினரும் அந்த கடையருகே சென்றிருக்கின்றனர். பின், செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கடையை காலி செய்யக் கூறியுள்ளனர். அப்போது செல்வமூர்த்தியின் மகன் ஜீவா, கத்தியால் ராமு-வின் தலையில் தாக்கியுள்ளார். அப்போது ராணுவ வீரரின் மனைவியும், செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தியும், அவரது தாயாரும் அங்கு இருந்துள்ளனர்.  ராமு-விற்கு ஏற்பட்ட இந்த காயத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், ராமு-விற்கு ஆதரவாக ஓடிவந்து, `ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்ய மறுத்துள்ளீர்கள், கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள்’ என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள். ஆவேசப்பட்ட அந்த பொதுமக்கள், பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர கீர்த்தியையோ அவரது தாயாரையோ தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. 

மேலும், இந்த விஷயம் முற்றிலும் மிகைப்படுத்தி கூறியுள்ள தகவல் என தெரியவருகிறது. இருப்பினும், இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை எஸ்.பி

ஆனால், இந்த சம்பவம் குறித்து படவேடு பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்த போது, "கோயிலுக்கு சொந்தமான இடத்தை குமார் குத்தகைக்கு எடுத்து கட்டடம் கட்டி, செல்வமூர்த்தி குடும்பத்தாருக்கு வாடகை விட்டிருக்கிறார். குமார் இறப்பை தொடர்ந்து அந்த கடையை தங்களிடமே ஒப்படைக்கும்படி, குமாரின் மகன் ராமு தரப்பினர் கேட்டிருக்கின்றனர். அதில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வரவேதான் அங்கு 50-க்கும் மேற்பட்ட ஆட்களுடன் சென்றுள்ளனர் ராமு தரப்பினர். செல்லும் வழியில் இருந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை அவர்களே உடைத்துள்ளனர் என தெரிய வருகிறது. ராணுவ வீரரின் மனைவியுடைய தாயாரை தவிர இருதரப்பிலும் இப்போது ஊரில் வேறு யாரும் இல்லை. ராணுவ வீரரின் மனைவியும் வேலூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்கின்றனர்.



source https://www.vikatan.com/crime/a-video-posted-by-an-army-soldier-from-tiruvannamalai-district-has-shocked

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக