Ad

வியாழன், 15 ஜூன், 2023

வழகளல அலல மனதல வணடம வளசசம!'- 120 கடமபஙகளன நமபகக மனதன சகய தஙகய!

``உள்ளபோன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளிய உள்ள அத்தன பேரும் புத்தன், காந்தி இல்லீங்க....
வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்
மனுசன இன்னும் பாக்கலயே..."

கோவை ஆர்.எஸ்.புரம் சாலையில் அன்றைய வெயிலின் அனலைத் தாண்டி மக்களை சில நிமிடங்கள் கவனிக்க வைத்தது சகாய தங்கையாவின் குரல். மினி டெம்போ ஒன்றில், ஸ்பீக்கர், மைக் சகிதம் `அதிசய ராகம் இசைக்குழு' என பேனர் கட்டி பாடிக்கொண்டிருந்தவரை சந்தித்துப் பேசினோம். காற்றில் கைகள் துழாவி வணக்கம் வைத்து வரவேற்றனர் சகாய தங்கையா - ருக்மணி தம்பதியினர். இருவரும்தான் அந்த நகலிசைக்குச் சொந்தக்காரர்கள். சகாய தங்கையா முழுமையாக விழித்திறன் இழந்தவர்.

சகாய தங்கையா - ருக்மணி

ருக்மணிக்கு தட்டுத் தடுமாறி நடக்கும் அளவுக்கு பார்வைக் குறைபாடும் இருந்தது. 50 வயதைக் கடந்த இந்த தம்பதி, வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாது இந்த வாடகை வண்டியில் கோவை முழுக்க பாடிச் செல்கின்றனர். கிடைக்கும் வருமானம் முழுக்க தங்களைப் போலவே விழித்திறனற்ற 120 குடும்பங்களுக்கு வழங்குகிறார்கள்.

அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். உற்சாகத்துடன் பேசத் தொடங்கிய சகாய தங்கையா ``நான் பிறக்கும்போது கண் பார்வையோடு தான் பிறந்தேன். பிறந்த எட்டு மாசத்துல அம்மை நோயால பாதிக்கப்பட்டேன். நான் பிறந்த காலத்துல மூடநம்பிக்கை மிக அதிகம். சாமி ஆடிகிட்ட கூட்டிட்டு போய்  மஞ்சள் துணியை மந்திரிச்சு கண்ணில் கட்டினார்கள்.

சகாய தங்கையா

அந்த சாமியாடி, எட்டு நாள் கழிச்சு வந்து கண் கட்டை அவிழ்த்து விட்டார். அப்போ, என் இடது கண் அழுகி கீழே விழுந்தது. வலது கண்ணும் பார்வை இழந்துருச்சு. இப்படித்தான் இப்போது இருக்கிற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் மூடநம்பிக்கையால பார்வை இழந்திருக்க வாய்ப்பு அதிகம்.

நான் இரண்டு M.A டிகிரி வாங்கிருக்கேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல  M.A தமிழ் மற்றும் வரலாறு படிச்சேன். B.Ed டிகிரியும் படிக்க ஆசைப்பட்டேன். வசதி இல்லாததால வீட்ல படிக்க வைக்க முடில. ஹாஸ்டல்ல தங்கிப் படிச்ச அந்த காலத்துல நிறைய விஷயத்த அனுபவத்துல கத்துக்கிட்டேன். சொந்த முயற்சியால மட்டுந்தான் வாழ்க்கைல முன்னேற முடியும்கிற எண்ணம் ஆழமா மனசுல பதிஞ்சது. குடும்பம், சொந்தக்காரங்கன்னு யாரோட ஆதரவும் ஒருகட்டத்துல எனக்குக் கிடைக்கல. நானே என்னைப் பாத்துக்கணும்னு முடிவு பண்ணினேன்.

சகாய தங்கையா - ருக்மணி

படிச்சு முடிச்சதும் படிப்புக்கேத்த வேலைக்குப் போற சூழல் அமையல. டெலிபோன் பூத், ஊதுவத்தி தேய்ப்பது, குடம் தயாரிப்பதுன்னு வேலைகள் செய்ய ஆரம்பிச்சேன். நல்லாதான் வருமானம் கிடைச்சது. தொழில் போட்டிகளை சமாளிக்க முடியல. பாட்டுப் பாடி சம்பாதிக்க முடிவு பண்ணி மைக்க கையிலெடுத்தேன். யார்கிட்டயும் கத்துக்காம, பாடல்களைக் கேட்ட அனுபவத்துலயே பாட ஆரம்பிச்சேன். இப்போ என்னால ஆயிரம் பாட்டு பாட முடியும். தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை நம் வாழ்க்கை முழுக்க பாட்டும், இசையும்தான கூடவே வருது. அந்தப் பாட்டு விரும்பி செய்யுற வேலையா எனக்கு மாறிடுச்சு.

ஆரம்ப காலத்துல வாடகை இசைக்கருவியை வச்சுப் பாட்டு பாடினோம். அதுக்கேத்த வருமானம் கிடைக்காம, கரோக்கி பயன்படுத்தி பாட ஆரம்பிச்சோம். தினமும் காலையில 9 மணிக்கு வண்டி எடுப்போம். மதியம் 2 மணி வரைக்கும் ஓயாம பாடுவேன். மதியம் ஏதாவது சாப்பிட்டு 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் பாடிட்டு தான் வீட்டுக்குப் போவோம். குறைந்தபட்சம் 10 கி.மீ அதிகபட்சம் 70 கி.மீ தூரம் போய் பாடுவோம். தமிழ்நாடு முழக்க ஒரு மாசம் அலைஞ்சு பாட்டு பாடிருக்கேன். `அதிசயராகம் இசைக்குழு' - பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக நான் ஆரம்பிச்சேன். அந்தக் குழுவுல 36 பேர் இருக்காங்க. 2008 வரை மேடைக் கச்சேரிகள் அதிகம் வரும். அது எங்க வாழ்க்கைய கடத்தப் போதுமானதா இருந்துச்சு. கச்சேரி கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சு இப்போ எப்பவாச்சும்தான் கச்சேரிகள் வருது.

சகாய தங்கையா

ஒரு கச்சேரிக்கு ரூ.35 ஆயிரம் பேசினா வண்டி வாடகை, கீபோர்ட், தபேலாவுக்கு வாடகை எல்லாம் போக ரூ.7000 தான் கைக்கு வரும். இப்போ நாங்க தெருத் தெருவா போய் பாடுறதுல ஒரு நாளைக்கு ரூ.1500 - ரூ.2500 வரை கிடைக்குது. என் வீட்டு வாடகை, வண்டிக்கு வாடகை போக மிச்ச பணம், ஒரு சிலர் கொடுக்குற துணி, அரிசி, பருப்பு எல்லாம் 120 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களும் பகிர்ந்துப்போம். போதனூரில் 30 குடும்பங்கள், செட்டிப்பாளையத்தில் 30 குடும்பங்கள், மதுக்கடையில் 10 குடும்பங்கள் இப்படி கோயமுத்தூர்ல 120 குடும்பம் இருக்காங்க. சிலர் என்னை மாதிரியே பாட்டு பாடுறாங்க, சின்ன சின்ன வேலை பாக்குறாங்க. சிலர் வேற வழியில்லாம பிச்சை எடுத்து அன்றாட வாழ்க்கையை ஓட்டுறாங்க. அவங்களுக்கும் மெல்ல மெல்ல ஏதாவது வேலை கத்துக் கொடுக்கணும். நாங்க எல்லாம் சேர்ந்து சொந்த செலவுல 16 கல்யாணம் பண்ணி வச்சுருக்கோம். 18 இறந்த சடலங்களை அடக்கம் பண்ணிருக்கோம்.

இது மத்தவங்களுக்கு சாதாரணமா தெரியலாம். எங்களுக்கு ரொம்பப் பெரிய விஷயம். ஒவ்வொரு நாளும் சந்திக்கிற பிரச்னைகள் அதிகம். தினமும் குறைஞ்சது 5 பேராவது பிரச்னை பண்ணுவாங்க. 20 ரூபாய், 30 ரூபாய் குடுத்து பிடிச்ச பாட்ட கேட்க சொல்லுவோம். குடிச்சிட்டு வந்து, `எனக்கு பிடிச்ச பாட்டு பாடுறான்னு' கெட்ட வார்த்தைல திட்டுவாங்க. சிலர் 1 ரூபா, 2 ரூபா வீசி எறிஞ்சு பாட சொல்லுவாங்க. நேரம், பணம் எல்லாம் போயி வேற எடத்துக்கு மாறிப்போற கதையும் உண்டு.
இதுகூட பரவாயில்ல.  நாங்க தட்டுத் தடுமாறி சரியாக பஸ்ஸைக் கண்டுபிடிச்சு பஸ்கிட்ட போனா, பஸ் கண்டக்டர்கள் சிலர், `இந்த பஸ் அந்த ஊருக்கு போகாது'ன்னு சொல்லிடுவாங்க. இப்படி தெரிஞ்சே பல அவமானங்களை சந்திக்கிறோம்.

சகாய தங்கையா

எங்ககிட்ட பெரிசா எந்த கோரிக்கையும் இல்ல. அரசு தரப்புல மாதம் 1500 ரூபாய் கொடுக்கிறாங்க. வருசத்துக்கு ஒரு தடவ ஸ்டிக்,கண்ணாடி,வாட்ச் கொடுக்கிறாங்க. பல நேரங்கள்ல, வண்டியில் மோதி, கீழே விழுந்து ஸ்டிக் உடைஞ்சுபோயிருது. ரெண்டு ஸ்டிக் கொடுத்தா உதவியா இருக்கும். சொந்தமா வீடு, சொந்தமா வண்டி, இசைக்கருவிகள் கொடுத்து உதவினா அதுவே போதும்.பொதுமக்கள் எங்களைப்  போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இசைக் கச்சேரிக்கு வாய்ப்புகள் கொடுத்தாலே போதும். இன்னும் பல மாற்றுத்திறனாளிகளை என்னால வாழ வைக்க முடியும். நான் இதுவரை வெளிச்சத்தைப் பார்த்ததே இல்ல.

ஆனா, என் சாவுக்கு என்னை மாதிரி இருக்க நாலு பேர் வந்து என்னை அடக்கம் பண்ணுவாங்க. நம்மால பிறர் உதவி இல்லாம செயல்பட முடியும்கிற நம்பிக்கையை என் மக்களுக்கு நான் கொடுத்துருக்கேன். அவங்களால இந்த சமூகத்துல வெளிச்சம் பரவும்." என பேசிவிட்டு பாடச் சென்றார் தங்கையா. மைக்கைப் பிடித்து, புன்னகையுடன் பெருங்குரலெடுத்து ஆயாசமாக பாடுகையில், அவர் முகமெங்கும் நிறைந்திருந்தது நம்பிக்கை வெளிச்சம்.



source https://www.vikatan.com/features/human-stories/story-of-singer-sagaaya-thangaiyah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக