Ad

வெள்ளி, 16 ஜூன், 2023

ஐ.எஃப.எஸ மசட: கவலதறயன கடடண அமபலம..!

ஓராண்டு காலத்துக்குப் பிறகு, வேலூர் ஐ.எஃப்.எஸ் மோசடி நிறுவனம் மீதான நடவடிக்கை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகக் காவல்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவரே தற்போது கைதாகியிருப்பது அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.

ஐ.எஃப்.எஸ் நிறுவன மோசடிகள் பற்றி ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வரும் நாம், ‘இதில் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதனால்தான், ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல், தமிழகக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு வேடிக்கை பார்க்கிறது’ என்பதைத் தொடர்ந்து சொல்லி வந்தோம்.

ஒருகட்டத்தில், ‘ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் நாட்டைவிட்டே தப்பி விட்டனர்’ என்கிற தகவல்கள் கசியவே, மத்திய அரசினுடைய அமலாக்கத்துறையின் பார்வை, இந்த விவகாரத்தில் ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. இதையடுத்து, கட்டாயத்தின் பேரில் வேகமாகக் களத்தில் சுழல ஆரம்பித்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு.

இந்தப் பின்னணியில்தான் காவல்துறையைச் சேர்ந்த ஹேமந்திர குமார் இப்போது கைதாகியுள்ளார். போலீஸாக இருந்த இவர், ஐ.எஃப்.எஸ் ஏஜென்ட் வேலையையும் செய்திருக்கிறார். ‘மோசடித் திட்டம்’ என்பது தெரிந்தும், காவல் துறை அதிகாரியாக நடவடிக்கை எடுக்கத் துணியவில்லை. மாறாக, பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முழுநேர ஏஜென்டாகவே மாறியிருக்கிறார். வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சுமார் 550 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்து, கோடிகளில் கமிஷன் பெற்றிருக்கிறார். ஐ.எஃப்.எஸ் மோசடி வெளியில் வர ஆரம்பித்து கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் முடிந்த நிலையில், மிக மிகக் காலதாமதமாகவே ஹேமந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘ஐ.எஃப்.எஸ் மற்றும் தமிழக காவல்துறை மேலிடங்களுக்கு இடையே புரோக்கராகவும் ஹேமந்திர குமார் செயல்பட்டிருக்கக்கூடும். அதனால் தான், ஃபிராடு பிரதர்ஸ் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும்வரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்’ என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது என்பதற்கு, ஹேமந்திரகுமாரின் செயல்பாடுகளே சாட்சி!

ஐ.எஃப்.எஸ் மட்டுமல்ல... தமிழகத்தில் மோசடி நிதி நிறுவனங்கள் எண்ணற்று இருக்கின்றன. புதிது புதிதாக முளைக்கவும் செய்கின்றன. தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸோ... வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி இருப்பதுபோல, மோசடிக்காரர்கள் பலரையும் அமலாக்கத்துறை கைது செய்யும் நிலை ஏற்பட்டால், மாநில அரசுக்குதான் கெட்டபெயர்! இனியாவது, வேகம் காட்டினால் சரி!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/business/economy/ifs-and-police-department-link

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக