Ad

திங்கள், 12 ஜூன், 2023

மயிலாடுதுறை: மர்மமாக இறந்துகிடந்த இருவர்... `டாஸ்மாக் மதுவே காரணம்' - குற்றம்சாட்டும் உறவினர்கள்!

மயிலாடுதுறை அருகே இரும்பு பட்டறை ஒன்றில் மர்மமான முறையில் இரண்டு பேர் உயிரிழந்துகிடந்த நிலையில், அவர்கள் அருகே குடித்த காலி மதுப்பாட்டில் ஒன்றும், மூடி திறக்காமல் மதுவுடன் இருந்த குவார்ட்டர் பாட்டில் ஒன்றும் இருந்திருக்கின்றன. டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்ததே இருவர் இறப்புக்கும் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிகுருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலைப் பார்த்து வந்தார். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வெளியே சென்றவர்கள், சிறிது நேரத்திலேயே பட்டறைக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பழனிகுருநாதன், பூராசாமி ஆகிய இருவரும் கடைக்குள் மயங்கிக் கிடந்திருக்கின்றனர். அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பார்த்தபோது, அவர்கள் மயங்கிக் கிடந்த இடத்துக்கு அருகில் காலி குவார்ட்டர் பாட்டில் ஒன்றும், மூடி திறக்காத குவார்ட்டர் மது பாட்டில் ஒன்றும் இருந்திருக்கின்றன.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

அதையடுத்து அருகிலிருந்தவர்கள் இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த இறந்தவர்களின் உறவினர்கள், ``டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்ததாலேயே இருவரும் இறந்திருக்கின்றனர். அவர்களின் இறப்புக்குக் காரணம் டாஸ்மாக் மதுதான்" எனக் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்ததுடன், டி.எஸ்.பி சஞ்ஜீவ் குமார் தலைமையில் இரும்பு பட்டறையிலிருந்த மதுப்பாட்டிலையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து இறந்தவர்களின் உறவினர்கள் பேசுகையில், ``இரண்டு பேரின் குடும்பத்திலும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களின் உடம்பில் நோய் பாதிப்பு எதுவும் இல்லை. வேலை முடிந்த பிறகு டாஸ்மாக் பாரில் மது வாங்கிக் குடிப்பது அவர்களது வழக்கம்.

மயிலாடுதுறையில் மர்மாக உயிரிழந்த இருவர்

வீட்டு வாசலில் உட்கார்ந்து எல்லோரிடமும் சந்தோஷமாகப் பேசிவிட்டுப் பட்டறைக்குச் சென்றவர்கள் இறந்துகிடந்திருக்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு பேரும் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்திருக்கின்றனர். அந்த மதுவில்தான் ஏதோ பாய்சன் இருந்திருக்கிறது. அதுவே இரண்டு பேர் இறப்புக்கும் காரணம். போலீஸார் இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் மறைப்பது, எங்களுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது" என்றனர்.

தஞ்சாவூரில் அரசு டாஸ்மாக் கடை அருகே இருந்த அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில், கடை திறப்பதற்கு முன்பு மது வாங்கிக் குடித்த இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கு மதுவில் சயனைடு கலந்திருந்தே காரணம் எனச் சொல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இரண்டு பேரின் இறப்புகான காரணத்தை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்துவிட்டு, இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மதுவில் பாய்சன் இருந்ததே அவர்களின் இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் தரப்பில், ``விசாரணை முடிவில்தான் இரண்டு பேரின் இறப்புக்கான காரணம் என்னவென்று முழுமையாகத் தெரியவரும்" என்றனர்.



source https://www.vikatan.com/crime/relatives-allege-that-two-people-died-after-drinking-tasmac-liquor-in-mayiladuthurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக