Ad

வெள்ளி, 2 ஜூன், 2023

பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் `தமிழ்ப்பற்று' அரசியலுக்குப் பின்னால்..?!

`தமிழ் மொழியை கையிலெடுக்காமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியாது என்பது மாநில கட்சிகள் மட்டுமில்லாமல் தேசிய கட்சிகளும் நன்குணர்ந்த விஷயம். அதிலும் தேர்தல் சீசன் நெருங்கிவிட்டால் போதும், நம் அரசியல் தலைவர்களுக்கு திடீரென்று `தமிழ் பாசம்' மழையாகப் பொழியும். அந்தவகையில், நாட்டின் பிரதான தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் தமிழ்ப்பற்று கடந்த சில நாட்களாக பொங்கி வழிகிறது.

மதுரை ஆதீனம்

`தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி' - பிரதமர் மோடி:

குறிப்பாக, அரசு முறை பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி கடந்த மே 25-ம் தேதி நாடு திரும்பினார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடி கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, ``தமிழ் மொழி நம்முடைய மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி. உலகின் மிகத்தொன்மையான மொழி தமிழ். அந்த மொழி தந்த திருக்குறளை பப்புவா நியூ கினியா நாட்டில், அவர்களின் டோக் பிசின் மொழியில் எனக்கு வெளியிட வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!" என ஒரேயடியாகத் தமிழைப் புகழ்ந்து தள்ளினார்.

புதிய நாடாளுமன்றம் - செங்கோல் - பிரதமர் மோடி

அதைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை முன்னிட்டு, கடந்த மே 27-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து 19 ஆதின மடாதிபதிகள் பிரதமர் மோடியை டெல்லி பிரதமர் இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தமிழில் மந்திரப் பாடல்களைப் பாடி, நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்கி, ஆசீர்வாதம் செய்தனர். அதையடுத்து பேசிய பிரதமர் மோடி, ``சுதந்திரத்துக்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான இடத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால், அந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. எங்கள் அரசாங்கமோ இப்போது அந்த செங்கோலை மீட்டதோடு, அதை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்போகிறது" என்று கூறி `காங்கிரஸ் ஆட்சியில் செங்கோலை வாக்கிங் ஸ்டிக்காக அருங்காட்சியகத்தில் வைத்து சிறுமைபடுத்தினார்கள். நாங்களோ இன்று உரிய மரியாதையுடன் நாடாளுமன்றத்தில் வைத்து பெருமை சேர்க்கப்போகிறோம்!' என ஸ்கோர் செய்தார் பிரதமர் மோடி.

அதன்பின்னர், மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா கொண்டாட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. புதிய நாடாளுமன்றத்தின் வளாகத்துக்குள் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா அரங்கில் செங்கோல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மோடி, செங்கோலுக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார். அந்த சமயம், தமிழ்நாட்டின் ஆதீன மடாதிபதிகள் தமிழ் வேத மந்திரங்கள் ஓதினர். மேலும், திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் பாடல்கள் இசைக்கப்பட்டது. பின்னர் ஆதீன மடாதிபதிகளிடமிருந்து செங்கோலைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கொண்டுசென்று, மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே நிறுவினார்.

New Parliament Building பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம்

அதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் செங்கோல் என்பது நீதி, நேர்மை மற்றும் சேவையின் அடையாளமாக விளங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தபோது மூதறிஞர் ராஜாஜி அறிவுரைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் உருவாக்கப்பட்ட செங்கோல் இப்போது நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த செங்கோல் அவையை சிறப்பாக வழிநடத்த உந்து சக்தியாக இருக்கும். மேலும், மக்களில் இருந்து ஒருவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நடைமுறையை கி.பி. 900-ம் ஆண்டின் தமிழக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது!" என தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டின் வரலாற்றையும் பெருமையாகக் குறிப்பிட்டு பேசினார்.

தமிழக ஆதீனங்களுடன் பிரதமர் மோடி

இதையடுத்து, `புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டுக்கே பெருமை' என அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் போன்ற பா.ஜ.க தலைவர்களும் இளையராஜா, ரஜினிகாந்த் போன்ற திரைபிரபலங்களும் பூரித்தனர். அதேசமயம், `நாடாளுமன்ற திறப்பு விழாவை மடாதிபதிகளுடன் மத நிகழ்ச்சிபோல நடத்துவதாகவும், மன்னராட்சி போல செங்கோல் நிறுவப்படுவதாகவும்' கூறி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

`தமிழ்மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டேன்!' - ராகுல் காந்தி:

தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு செங்கோலையும் கையில் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி ஸ்கோர் செய்த நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தியும் தன் பங்குக்கு தமிழ்மொழி மீதான பற்றை நாடு கடந்து பொழிந்திருக்கிறார். பத்து நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ``நமது அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மொழி, வரலாறு, கலாசாரம் ஆகியவை அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவரையில் அதுதான் நடைமுறை. ஆனால், பா.ஜ.வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து இந்த நடைமுறை மற்றும் அரசியலமைப்பின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்காவில் ராகுல்காந்தி

நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில், தமிழர்களுக்கு தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்வியல் முறை! எனவே, தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். என்னைப்பொறுத்தவரையில் தமிழ்மொழியை அச்சுறுத்துவது, இந்தியக் கொள்கையையே அச்சுறுத்துவதற்கு சமம்!" என அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

ராகுல்காந்தி

`நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேசியகட்சிகள் வடமாநிலங்களில் செய்வதைப்போன்ற அரசியலைத் தென்மாநிலங்களில் செய்யமுடியாது. அது எடுபடாது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநில மக்கள் தங்களின் தாய்மொழிமீது பிரிக்கமுடியாத பிணைப்பைக் கொண்டவர்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் தமிழை கையிலெடுக்காவிட்டால் எந்த கட்சிக்கும் அரசியல் இல்லை என்பதை எல்லா கட்சிகளும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமாக நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றெடுக்க வேண்டுமெனில் முதலில் தமிழக மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டும். அதற்குத்தான் இரண்டு தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழ், தமிழர்கள் என தேர்தல் நேர கூப்பாடு போடுகிறார்கள்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/prime-minister-modi-rahul-gandhis-tamil-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக