தொடர்ந்து பத்தாவது நாளாக உக்ரைன் - ரஷ்யா நாடுகள் இடையே போர் நடந்துவருகிறது. சமூக வலைதளங்களில் போர் தொடர்பாக பல்வேறு போலிச் செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ``உக்ரைனைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று, போரில் பல பேர் உயிரிழந்துவிட்டனர் எனப் போலி நாடகம் நடத்தி செய்தி வெளியிட்டிருக்கிறது'' என்று கூறி வீடியோ ஒன்றைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
அந்த வீடியோவில், தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேமேராவைப் பார்த்து உக்ரேனிய மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்புறம் கருப்பு நிற உறைகளால் மூடப்பட்ட பல பிணங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், முதல் வரிசையில் வைக்கப்பட்டிருந்த கருப்பு உறைக்குள் படுத்திருந்த நபர், உறையிலிருந்து வெளியே வந்து எதையோ சரி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் வேறு ஒரு நபர் வந்து, உறையிலிருந்து வெளியே வந்த நபரை, மீண்டும் கருப்பு உறைக்குள் வைத்துப் போர்த்துவது போன்ற காட்சிகளையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.
பரவிய செய்தி!
இந்த வீடியோவைப் பகிர்ந்த ரஷ்ய ஆதரவாளர்கள் சிலர், ``பாருங்கள், உக்ரைனில் பல பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காக நாடகமாடுகின்றனர். மேற்கத்திய நாடுகள் செய்யும் சதி வேலைதான் இது!'' என்பது போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இதனால், இந்த வீடியோ உலக முழுக்க வைரலாகப் பரவியது. இந்தியாவிலும் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த `Wien: Demo gegen Klimapolitik' என்ற வார்த்தைகளைக் கொண்டு கூகுள் தேடலில் ஈடுபட்டபோது நமக்கு சில செய்திகள் கிடைத்தன. உக்ரைனைச் சேர்ந்த `OE24.TV' என்ற செய்திச் சேனலில் இந்த வீடியோ, பிப்ரவரி 4, 2022 அன்று ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. அதாவது உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த வீடியோ ஒரு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்பதும் நமக்குத் தெரியவந்தது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் செயல்பட்டுவரும் `Fridays For Future Wien' என்ற அமைப்பு காலநிலை மாற்றம் தொடர்பாக நடத்திய போராட்டத்தில், 49 பேர் கருப்பு உறைக்குள் இருந்து உயிரிழந்தவர்களைப்போல நூதன முறையில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அது தொடர்பான வீடியோதான் தற்போது, உக்ரைன் போரோடு சம்பந்தபடுத்தப்பட்டு தவறாகப் பரப்பப்பட்டுவருகிறது என்பது நமது தேடலில் தெரியவந்தது!
source https://www.vikatan.com/news/international/fact-check-on-fake-dead-bodies-shown-at-ukraine-news-channel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக