நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளையும் தி.மு.க மற்றும் சுயேச்சை வேட்பாளரிடம் அ.தி.மு.க இழந்தது. பேரூராட்சிகளையும் பெரிதாக கைப்பற்றவில்லை. இந்த நிலையில், இதற்கு காரணம், ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக இந்த தேர்தலை நடத்திக்கொண்டனர் என்று தங்கமணி குற்றம்சாட்டி வருகிறார்.
அந்த வகையில், 'நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பதவிக்கான தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்' என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தங்கமணி மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, "நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு வரும் 7 - ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில், அதிமுகவுக்கு 9, பாஜகவுக்கு ஒன்று என 10 கவுன்சிலர்கள் உள்ளனர்.
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட தலைவர் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும். நீதிமன்றமும் தேர்தலை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. அதிமுக உறுப்பினர்களை நான் கடத்திவிட்டதாக, என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. உறுப்பினர்களை யாரும் கடத்தவில்லை. தேர்தல் ஜனநாய முறைப்படி நடைபெறும் என நம்புகிறேன்" என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ``அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என அதிமுகவினரே கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்களே?" என்று கேள்வி எழுப்பினர். அதுவரை, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கூலாக பதில் சொல்லி வந்த தங்கமணி, அந்த கேள்வியை நிருபர்கள் கேட்டதும், பதிலேதும் சொல்லாமல் விருட்டென்று கிளம்பி சென்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/thangamani-stopped-interview-after-question-regarding-sasikala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக