Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மறைவு குறித்து சர்ச்சை பேச்சு! - உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. கோவை, தேனி உள்ளிட்ட சில பகுதிகளில் சில வாக்குவாதங்கள், கார் கண்ணாடி உடைப்பு மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடி நடவடிக்கைகள் மூலம் அவை தீர்த்துவைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு

எனினும் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, கட்சி தலைவர்களின் வார்த்தைகள் பல இடங்களை எல்லை மீறி சென்றது. கடந்த மார்ச் 31 அன்று தாராபுரம் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ``பிரதமர் மோடி, நான் குறுக்குவழியில் வந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதை யார் சொல்கிறார் என்று பாருங்கள்... எத்தனை முக்கியத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, குஜராத்தின் முதல்வரானார் மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் பட்டியலே இருக்கிறது'' என்றவர், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சில தலைவர்களின் பெயரைப் பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ``அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்கள், மோடியின் சித்ரவதை காரணமாகத்தான் உயிரிழந்தனர்'' என்று கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர்களின் மரணம் குறித்து உதயநிதி பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சுஷ்மா, அருண் ஜெட்லியின் மகள்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

உதயநிதி பிரசாரத்தின்போது...

உதயநிதி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்தது. கடந்த 2 -ம் தேதி புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 7-ம் தேதி, அதாவது இன்று மாலை 5 மணிக்குள் இந்த புகார் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/election-commission-sent-notice-to-udhayanithi-stalin-in-bjp-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக