நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது, உள்கட்டமைப்பு. ஆனால், தற்போது பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் வருமானம் ஈட்டுபவையாக இல்லாமல், கடனில் மூழ்கிக் கிடக்கின்றன.
இது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்பதால், அந்தச் சொத்துகளைப் பங்குகளாக மாற்றி அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு கடனை அடைக்கவும், மேலும் அவற்றை முதலீடு செய்து அதில் வரும் லாபத்தைப் பங்குதாரர்களுக்கு வழங்கவும் ஆரம்பிக்கப்பட்டவைதான் `இன்விட்ஸ்' ஃபண்ட் என சுருக்கமாக அழைக்கப்படும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட் ஃபண்டுகள் (Infrastructure Investment Trust -InvITs).
முதன்முதலாக கடந்த 2016-ம் ஆண்டில், `இந்தியா கிரிட் ட்ரஸ்ட்' என்ற பவர் செக்டார் நிறுவனம்தான் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் ஃபண்டை வெளியிட்டது. அதன் பிறகு, `ஐ.ஆர்.பி இன்விட்ஸ்', கடந்த 2017-ம் ஆண்டு மே மாதத்தில் பங்குச் சந்தையில் பட்டியலானது. தற்போது, மூன்றாவதாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் `பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா' நிறுவனம், வருகிற 29-ம் தேதி முதல் மே 3-ம் தேதிக்குள் `பவர்கிரிட் இன்விட்ஸ்' ஐ.பி.ஓ-வை வெளியிடுகிறது.
இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து 7,735 கோடி ரூபாய் நிதி திரட்டுவதுதான் இந்த நிறுவனத்தின் திட்டம். 4,993.48 கோடி ரூபாயைப் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், 2,741.51 கோடி ரூபாயை ஆஃபர் ஃபார் சேல் மூலமும் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெளியீட்டில் பங்கு ஒன்றின் விலை ரூ.99-100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,100 பங்குகளை வாங்க வேண்டும். அதன் மடங்கில் எத்தனை பங்குகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அதாவது, குறைந்தபட்சம் 1,10,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும்.
இந்தப் புதிய பங்கு வெளியீடு குறித்தும், இந்த இன்விட் ஃபண்ட் யாருக்கு ஏற்றது என்பது குறித்தும் வி.மாதவனிடம் பேசினோம்.
`` `இன்விட்ஸ்' என்று சொல்லப்படுகிற இந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட் மற்றும் `ரெய்ட்ஸ்' என்று சொல்லப்படுகிற ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (Real Estate Investment Trust - REITS) ஆகிய இரண்டு முதலீட்டு மாடல்களும் அண்மையில்தான் இந்தியாவில் அறிமுகமாயின. அதனால் இந்த முதலீட்டு மாடல்கள் குறித்து முதலீட்டாளர்கள் இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
`பவர் கிரிட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா' நிறுவனம், ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பது மட்டுமல்லாமல், வங்கிகளை விட சற்று அதிக டிவிடெண்ட் யீல்டு கொடுக்கிற நிறுவனமும்கூட. இந்த நிறுவனம்தான், தற்போது வெளியாகும் `பவர்கிரிட் இன்விட்' ஐ.பி.ஓ-வுக்கு மேலாண்மை டிரஸ்டியாக செயல்படப் போகிறது. அதனால் முதலீட்டாளர்கள் இந்த இன்விட் ஐ.பி.ஓ-வைக் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கலாம்.
Also Read: 25 வயதைத் தொட்ட தேசிய பங்குச்சந்தை (NSE)... இது கடந்து வந்த பாதை தெரியுமா?
இந்த இன்விட் ஐ.பி.ஓ-வை மற்ற ஈக்விட்டி ஐ.பி.ஓ-வைப் போல முதலீட்டாளர்கள் நினைத்துவிடக் கூடாது. ஏனெனில், மற்ற ஐ.பி.ஓ-க்கள், சந்தையின் போக்கைப் பொறுத்து தொடக்க நாளிலேயேகூட 40-50% வரை லாபத்தைப் பதிவு செய்கின்றன. அந்த மாதிரியான நிகழ்வுகளை சமீபத்திய ஐ.பி.ஓ வெளியீடுகளின்போதுகூட நாம் பார்த்தோம். ஆனால், இந்த இன்விட் ஐ.பி.ஓ- அப்படியான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தரும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டாலும், இந்த இன்விட் ஐ.பி.ஓ கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களைப் போலத்தான் செயல்படும். அதனால், இந்த முதலீட்டின் மூலம் 7-9% வரை டிவிடென்ட் யீல்டு எதிர்பார்க்கலாம். வங்கிச் சேமிப்புகள் போல, நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்'' என்றார்.
இந்த முதலீட்டுக்கு அனைத்து தரச்சான்றிதழ் நிறுவனங்களும் `AAA' குறியீட்டை வழங்கியிருக்கியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். அதனால், ஏற்கெனவே ஈக்விட்டிகளில் முதலீடு செய்திருப்பவர்கள், இதில் ஒரு லாட் அல்லது இரண்டு லாட்கள் வரை வாங்கி முதலீடு செய்யலாம். ஒரு லாட் சைஸ் 1,100 யூனிட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1,100 பங்குகளை வாங்க வேண்டும் என்பதால், 1,10,000 ரூபாய் முதலீடு செய்ய முடியும் என்கிறவர்கள் இதில் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தைகளில் ஆயிரங்களில் முதலீடு செய்து கொண்டிருக்கும் சிறு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யும் போது, கவனத்துடன் இருப்பது அவசியம்.
கடந்த மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சொன்னது போல, `ரெய்ட்ஸ்' மற்றும் `இன்விட்' முதலீடுகள் மூலம் கிடைக்கும் டிவிடென்ட்களுக்கு வருமான வரி (TDS) கிடையாது. இன்றைய நிலையில் பாதுகாப்பான, அதே சமயம் நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த இன்விட் ஐ.பி.ஓ ஏற்றது" என்றார்.
பவர்கிரிட் இன்விட் ஃபண்ட் ஐ.பி.ஒ.வில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில்கொண்டு செயல்படுவது நல்லது!
source https://www.vikatan.com/business/share-market/powergrid-invit-ipo-subscription-opens-thursday-should-you-invest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக