சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு 11 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு அவரின் அம்மா சென்றார். சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடமும் அவரின் அம்மாவிடமும் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது சிறுமியின் அம்மா `விளையாடச் சென்றாள், அதன்பிறகுதான் அவளுக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது’ என்று கூறியிருக்கிறார். அடுத்து சிறுமியிடம் அங்கிருந்த மருத்துவர்கள் விசாரித்தபோது, வீட்டின் அருகில் குடியிருக்கும் இளைஞர், தனக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுத்துவிட்டு தவறாக நடந்து கொண்டதைக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். இதையடுத்து, சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி சிறுமியின் அம்மாவிடம் தெரிவித்தனர்.
Also Read: சென்னை அதிர்ச்சி: `யாருக்கு தில் அதிகம்?' - 23-வது மாடிச் சுவரில் சாகசம் செய்த சிறுமி!
சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைக் கேள்விப்பட்ட அந்தப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் சிறுமியிடம் தவறாக நடந்த இளைஞரைத் தேடினர். ஆனால் அவரின் வீடு பூட்டியிருந்தது. இதையடுத்து சிறுமியின் அம்மா, முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.
சிறுமி கொடுத்த தகவலின்படி திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமி வசிக்கும் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்த இளைஞரின் மனைவி கர்ப்பமாக உள்ளார். அதனால், அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு தனியாக இருந்துள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையான அவர், நேற்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது அந்தப்பகுதியில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் இளைஞர், தின்பண்டம் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், ஒரு சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஒரு வீட்டுக்குள் சென்று போதையில் தவறாக நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் இளைஞரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
Also Read: கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்... ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! - சிக்கிய ஓட்டுநர்
சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்தப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ``பாதிக்கப்பட்ட சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று காலை தோழிகளுடன் அங்கு விளையாடியுள்ளார். அப்போதுதான் அந்த இளைஞர் சிறுமியை மிரட்டி, உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இளைஞரின் உறவினர்கள் வீட்டில் இல்லாததால் அங்கு சிறுமியிடம் அவர் தவறாக நடந்துள்ளார். அதுகுறித்து வெளியில் கூறினால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டியும் உள்ளார்.
அதற்குப் பயந்து சிறுமி, எதையும் சொல்லவில்லை. வீட்டுக்கு வந்த சிறுமி சோர்வாக இருந்துள்ளாள். அதைப்பார்த்த அவரின் அம்மா, என்னவென்று விசாரித்துள்ளார். பின்னர் சிறுமியின் ஆடையில் இருந்த ரத்தப்போக்கைப் பார்த்த அவரின் தாய், மகள் பூப்பெய்துவிட்டாள் என்று கருதியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் சந்தோஷமாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சிறுமிக்கான சடங்கை செய்தபோதுதான் ரத்தப்போக்கு நிற்காதததைக் கண்டு அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் சிறுமிக்கு நடந்தக் கொடுமை தெரியவந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த இளைஞர், கட்சி ஒன்றில் உறுப்பினராக உள்ளார். அவரின் மனைவிதான் சிறுமியைக் காப்பாற்றியதாகத் தகவல் உள்ளது. தற்போது குடும்பத்துடன் இளைஞர் தப்பிவிட்டார். அவரிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். குடியிருப்பு பகுதிக்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
சென்னைச் சிறுமிக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த இளைஞரால் நடந்தக் கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்கின்றனர் அந்தப்பகுதி மக்கள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்பா இல்லை. அம்மாவும் தாத்தாவும்தான் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர். இருவரும் வெளியில் சென்ற நேரத்தில்தான் இந்தக் கொடுமை சிறுமிக்கு நடந்துள்ளது. சிறுமியின் தோழிகளிடமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். அவர்கள், சிறுமியை இளைஞர் அழைத்துச் சென்ற தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இளைஞர் சிக்கினால் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-books-tiruvannamalai-youth-under-pocso-act
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக