Ad

புதன், 28 ஏப்ரல், 2021

`நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை.. 11 கடைகளில் கைவரிசை!’ - ஆவடியை அலறவிட்ட கொள்ளையர்கள்

ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்ற பலர் நேற்றைய தினம் ஆவடி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்தனர். மளிகைக் கடை, செல்போன் கடை என மொத்தம் 11 கடைகளில் ஒரே இரவில் கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர்.

ஆவடியை அடுத்த கோவர்தனகிரியில் கலீல் (26) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையின் கல்லாப் பெட்டியைக் கையோடு உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். உரிமையாளர் கலீலின் புகாரில் கொள்ளையடிக்கப்பட்ட கல்லாப் பெட்டியில் ரூபாய். 26,000 ரொக்கம், 100 கிராம் வெள்ளிக்கட்டி, 2 செல்போன்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் 2 ஸ்வைப்பிங் மிஷின்கள் ஆகியவை இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல், ஆவடி பக்தவச்சலம் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் முத்தழகி (47) என்பவர் தன் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூபாய் 7,000 ரொக்கம் மற்றும் விற்பனைக்காக வாங்கி குவிக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளையும் திருடிச் சென்று விட்டதாக ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

கொள்ளை

தொடர்ந்து, முத்தழகியின் பெட்டிக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓ.சி.எப். சாலையில் அமைந்துள்ள செல்போன் கடை ஒன்றில் புகுந்திருக்கின்றனர். செல்போன் கடையின் பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர். ஆவடி ஓ.சி.எப். சாலையில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 3 கடைகளைக் கொள்ளை கும்பல் சூறையாடியிருக்கிறது. அதே போல், ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிலும் அதே பகுதியில் அமைந்துள்ள 6 கடைகளிலும் மர்ம கொள்ளை கும்பல் திருட முயற்சித்திருக்கிறது .

ஆவடி ஓ.சி.எப். சாலையில் திருட ஆரம்பித்த கொள்ளை கும்பல் அங்கிருந்து புதிய ராணுவ சாலைக்கு சென்றிருக்கிறது. அங்குத் திருட முடியாததால் அங்கிருந்து திருவேற்காட்டை அடுத்த காடுவெட்டி பகுதிக்குச் சென்றிருக்கிறது அங்குள்ள அடகுக் கடை ஒன்றில் திருட முயன்ற மர்ம நபர்கள் கடையின் பூட்டு வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் விட்டுச் சென்று விட்டனர். விடிய விடியக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடைசியாக அதிகாலை வேளையில் பூவிருந்தவல்லி பகுதியில் உள்ள ஒரு கடையில் கைவரிசையைக் காட்டி திருட முயற்சி செய்திருக்கின்றனர். அங்குப் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியதால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

தொடர் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 2 மர்ம நபர்கள் என்றும், சம்பவத்தின் போது கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

பூட்டை உடைத்து கொள்ளை

கொள்ளை சம்பவம் குறித்து ஆவடி காவல்நிலைய வட்டாரத்தில் விசாரித்தோம். 'நேற்று முன்தினம் இரவு விடிய விடியக் கொள்ளையர்கள் இரண்டு பேர் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். ஆவடி மற்றும் பூவிருந்தவல்லி காவல்நிலையங்களில் பூட்டை உடைத்துத் திருடியதாக 3 வழக்குகளும், பூட்டை உடைத்துத் திருட முயன்றதாக 9 வழக்குகளும் நேற்று ஒரே நாளில் பதிவாகி இருக்கிறது. கொள்ளையர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆவடியில் நள்ளிரவு நேரத்தில் திருட தொடங்கியவர்கள் விடிய விடிய 11 கடைகளில் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். கடைசியாக அதிகாலையில் பூவிருந்தவல்லியில் திருடிய போது பொதுமக்கள் சிலர் பார்த்திருக்கின்றனர். விசாரித்ததில் கொள்ளையர்கள் பல்சர் என்.எஸ் வகை பைக்கில் ஏறிச் சென்றிருக்கின்றனர். ஆவடியில் கொள்ளை நடந்த கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். கூடிய விரைவில் கொள்ளையர்களைப் பிடித்து விடுவோம்' என்றார்கள்.

கொள்ளை கும்பல் விடிய விடிய 11 கடைகளில் கைவரிசையைக் காட்டியுள்ள சம்பவம் ஆவடி பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/avadi-police-in-high-alert-search-of-finding-serial-robbers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக