எத்தனை தோல்வி எத்தனை இடர்பாடுகள் வருமாயின் அவற்றிலிருந்து விடுபட தன்னம்பிக்கையும் பின் மீண்டும் அச்செயலை மேற்கொள்ளும் விடாமுயற்சியும் ஒருவரிடத்தில் இருந்தால் எவ்வளவு உயரத்தை வேண்டுமானாலும் அடையலாம் என்பதற்கு சாட்சியாய் நிற்கிறார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சீமா குமாரி!
ஜார்கண்ட் மாநிலத்தின் ஓர்மஞ்சி என்னும் சிறுநகரத்திற்கு அருகே உள்ள டஹு என்னும் குக்கிராமத்தை சேர்ந்த இப்பெண்ணிற்குத்தான் உலகின் மிகச்சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றான ஹார்வேர்டில் முழுமையான உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்தள்ளது. இதுமட்டுமின்றி உலகின் பிற உயரிய கல்லூரிகளான ட்ரினிட்டி கல்லூரி, மிடில்பரி கல்லூரி, இந்தியாவின் அசோகா பல்கலைகழகம் ஆகியவையும் சீமா மேற்படிப்பு பயில இடம் தந்துள்ளன. ''அப்படி என்ன செய்துவிட்டார் இந்தப் பெண்?'' எனக் கேட்பவர்களுக்கு இதோ சீமா குமாரியின் நெகிழ்ச்சி பயணம்.
இந்தியாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாநிலமான ஜார்க்கண்டின் பின்தங்கிய குக்கிராமத்தை சேர்ந்த சீமா குமாரியின் பெற்றோர்கள் இருவரும் விவசாய வேலை செய்பவர்கள். சமயங்களில் அவரின் தந்தை அருகில் உள்ள நூல் ஆலைக்கு வேலைக்குச் செல்வார். இந்நிலையில் கால்பந்து மேல் உள்ள ஆர்வத்தாலும் தனது விடாமுயற்சியின் பலனாகவும் அம்மாநிலத்தின் Yuwa என்னும் கால்பந்தாட்ட அணியில் 2012-ல் இணைந்தார் சீமா. Yuwa என்பது ஜார்க்கண்டின் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் பெண் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் அமைப்பு.
Yuwa அணியில் சேர்ந்தது அவரின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. மிகமுக்கியமாக தனக்கு நடைபெற இருந்த குழந்தை திருமண நிகழ்வை நிறுத்தியதாகட்டும், தனது கல்வியினை தொடர்ந்து மேற்கொண்டதாகட்டும், சீமாவின் வாழ்வில் அந்த அமைப்பு மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.
கால்பந்து வீரர்கள் அணியும் சிறிய வகை ஷார்ட்ஸ் அணிந்ததற்காக ஏளனம் செய்யப்பட்ட போதிலும் அதை துடைத்தெறிந்து விளையாடியது எனப் பலவற்றை கடந்துவந்துள்ளர் சீமா.
மேலும் தனது பள்ளி படிப்பின் கல்வி கட்டணத்திற்காக சிறுவயதில் கால்பந்து பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் அவர். 2018-ம் ஆண்டே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு பள்ளி சீமாவிற்கு மேல்நிலை படிப்பு வழங்க வாய்ப்பளித்திருந்தது. இந்நிலையில், தற்போது ஹார்வேர்டில் இடம் கிடைத்துள்ளது. சீமாதான் அவர் குடும்பத்தின் முதல் கல்லூரி செல்லும் நபர். சீமாவின் இச்சாதனைக்கு பிரியங்கா சோப்ரா முதல் பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனது வருங்கால கனவுகள் குறிந்து சீமா கூறுகையில், “எனது முதன்மை செயல்பாடுகள் அனைத்தும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவே அமையும். முக்கியமாக எனது கிராமத்தில் பெண்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட பாடுபடுவேன்” என்கிறார். மேலும் தனது கிராமத்தில் பெண்களுக்கான அமைப்பை தொடங்கி அவர்களுக்கு கல்வியையும் சிறு தொழில்கள் தொடங்க உதவிகளும் செய்வதே தனது தற்போதைய லட்சியம் என்கிறார் விரைவில் ஹார்வேர்ட் செல்ல இருக்கும் சீமா குமாரி.
source https://sports.vikatan.com/football/jharkhand-farmers-daughter-took-football-and-got-into-harvard-university
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக