கொரோனா நோய்த்தொற்றின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. அதன் காரணமாக, பல மாநிலங்களில் மக்கள் கூட்டம் மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. கொரோனா முதலாம் அலையைக்காட்டிலும், இரண்டாவது அலையில் பெரும்பாலான நோயாளிகளுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், உயிர்காக்கும் ஆக்ஸிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
டெல்லியில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் உயிரிழந்துவருகின்றனர். அதேபோல், கொரோனா முதலாம் அலையின்போது பெரிய அளவில் உயிர்ச்சேதங்களையம், பாதிப்புகளையும் சந்திக்காத இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம், தற்போது இரண்டாம் அலையில் சிக்கித் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அங்கு கொரோனா உயிரிழப்புகளும், பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகின்றன. ஆனால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது துளியும் இல்லை என்றும், மாநில அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் கூறிவருகிறார்.
யோகி ஆதித்யநாத்தின் கருத்து மாநிலத்தின் கள நிலவரத்துக்கு நேரெதிராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில், யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகப் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டுவரும் மருத்துவமனைகள்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்தைக் கண்டித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை ட்விட்டரில் டேக் செய்து அவரை 'கொரோனாவின் கூட்டாளி' என்று சித்தார்த் விமர்சித்திருந்தார். தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகியை ட்விட்டரில் எச்சரித்துப் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், 'பொய் சொன்னால் ஓங்கி அறை விழும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் குறித்த செய்தி ஒன்றை மேற்கோளிட்டு சித்தார்த், "சாமானியனாக இருந்தாலும் சரி, புனிதராக இருந்தாலும் சரி, எந்தத் தலைவராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் அறை விழும்" என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் சித்தார்த்தின் கருத்துக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் குவிந்துவருகின்றன.
source https://www.vikatan.com/government-and-politics/politics/actor-siddharth-slams-up-cm-yogi-adityanath-after-his-comment-on-oxygen-demand
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக