கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் விஜயதரணி. காங்கிரஸ் கோட்டையாக விளங்கும் விளவங்கோடு தொகுதியில், 1952 ஆம் ஆண்டு முதல் 2016 வரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 5 முறை கம்யூனிஸ்ட் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் 2021 தேர்தலில் விஜயதரணி போட்டியிட விரும்பிய நிலையில், அவருக்கு 'சீட்' கொடுக்க சொந்த கட்சியிலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கட்சி மேலிடம் அவருக்கு 'சீட்' கொடுக்க தயங்கிய நிலையில், போட்டியிட வாய்ப்பு வழங்காவிட்டால் விஜயதரணி பாஜகவுக்குத் தாவிவிடுவார் என்றும், அவரிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவின. அதை வதந்தி என விஜயதரணி மறுத்தாலும், தாவி விட்டால் என்ன செய்வது எனக் கட்சி மேலிடம் யோசித்ததோ என்னவோ, கடைசியில் அவருக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
கடும் போராட்டத்துக்குப் பின்னர் மீண்டும் விளவங்கோட்டில் போட்டியிடுவதற்கான சீட்டை வாங்கினாலும், தொகுதிக்குள் சொந்த கட்சியிலிருந்து கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் திணறித்தான் போனார். விஜயதரணியை எதிர்த்து காங்கிரஸின் மாநில துணைத்தலைவர் சாமுவேல் ஜார்ஜ், தொழிற்சங்க நிர்வாகி ஆமோஸ் ஆகியோர் போட்டி வேட்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள். இதனால், உள்ளூர் காங்கிரஸார் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பமான முடிவுக்குத் தள்ளப்பட்டனர். கூடவே 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், தொகுதிக்கு பெரிய அளவிலான திட்டங்கள் எதையும் செய்து தரவில்லை என்ற அதிருப்தியும் மக்களிடையே இருந்தது. பாஜக வேட்பாளர் ஜெயசீலன் இத்தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்பது அவருக்குச் சாதகமான அம்சம்தான் என்றாலும், கூட்டணி கட்சியான அதிமுகவினர் பெரிய அளவில் தேர்தலில் ஒத்துழைக்காதது அவரது வெற்றியைக் கேள்விக்குறியாக்கியது. அதே சமயம், திமுக மற்றும் இதர கூட்டணி கட்சிகளின் வாக்குகள் விஜயதரணிக்குச் சாதகமான அம்சங்களாக இருந்ததால், அவர் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவதற்கான சூழல் தேர்தலுக்கு முன் நிலவியதாக சொல்லப்பட்டது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vijayadharani-a-short-analysis-on-tamilnadu-elections-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக