நடிகை ஶ்ரீதேவி தொடங்கி ஸ்ருதிஹாசன் வரை நடிகைகள் பலரும் அழகு சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறார்கள். முதல் படத்தில் நடித்த தோற்றம் பத்து படங்களுக்குப் பின் இருப்பதில்லை... காரணம் அழகு சிகிச்சைகளே. அழகு சிகிச்சையின் மூலம் எப்போதும் இளமையாக இருப்பது, முகவெட்டுத் தோற்றத்தை மாற்றிக்கொள்வது எனப் பலவகையான மேஜிக்குகளை நடத்திவிட முடிகிறது. ஆனால், அதே நேரம் அழகு சிகிச்சைகளில் நிறைய ஆபத்துகளும் இருக்கின்றன. சமீபத்தில்கூட நடிகை ரைசா வில்சன் பொருத்தமில்லாத அழகு சிகிச்சையை மருத்துவர் செய்துவிட்டதாக முகம் வீங்கிய நிலையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது சார்ந்த பிரச்னைகள் ஒரு புறம் இருந்தாலும், உண்மையில் அழகு சிகிச்சைகள் பாதுகாப்பானவையா? அழகு சிகிச்சைகள் செய்துகொள்ளும் முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது தொடர்பான தகவல்களைப் பகிர்கிறார் காஸ்மெட்டிக் சர்ஜன் சசிகுமார் முத்து...
``எதற்கெல்லாம் அழகு சிகிச்சைகள் இருக்கின்றன?"
``வழுக்கை விழுந்த இடத்தில் செயற்கையான முடி வளரச்செய்வது தொடங்கி, உடலில் உள்ள தேவையில்லாத சதைகளை நீக்குவது, குறிப்பிட்ட உடல் பாகத்தைப் பெரிதுபடுத்துவது, இளமையான தோற்றத்தைத் தக்க வைப்பதற்கான அழகு சிகிச்சைகள், விபத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது, முகவெட்டுத் தோற்றத்தை மாற்றுவது என ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான அழகு சிகிச்சை இருக்கிறது."
``அழகு சிகிச்சை செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா?"
``நிச்சயமாக இல்லை. அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர், கெமிக்கல், ஃபில்லர் போன்ற வகையில் தீர்வு காண்பது என இரண்டு வகையான அழகு சிகிச்சைகள் இருக்கின்றன. அழகு சிகிச்சை செய்துகொள்ள வருபவர்களின் தேவையைப் பொறுத்து சில வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் அதன் பின் சிகிச்சை வழங்கப்படும். சில பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும். அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டு தெளிவு அடைந்த பின், அவர்களின் ஒப்புதலுடன் கையொப்பம் பெற்ற பின்பே சிகிச்சைகள் வழங்கப்படும்."
``அழகு சிகிச்சை செய்துகொள்ளும் முன் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?"
``அழகு சிகிச்சை என்பது தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்துகொள்ளப்படுகிறது. இதில் எந்தவிதமான மெடிக்கல் எமர்ஜென்சியும் இல்லை. அதனால் உடனே மாற்றம் ஏற்பட்டுவிட வேண்டும் எனவும் ஒரே நாளில் அழகாகிவிட வேண்டும் என்றும் அவசரப்படக் கூடாது. சிலர், `நான் இன்று சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து வந்துவிட்டேன் இன்று சிகிச்சையை ஆரம்பித்து விடுங்கள்' என்றெல்லாம் மருத்துவர்களை வற்புறுத்துவார்கள். அழகு சிகிச்சையைப் பொறுத்தவரை அவசரம் ஆபத்தானது.
முதலில் உங்கள் பிரச்னை தொடர்பாக நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு உடனே ஓ.கே சொல்லாமல் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரியான சிகிச்சை வலியுறுத்தப் பட்டதோ அந்தச் சிகிச்சை தொடர்பாக நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அந்த மருத்துவரின் மீது நம்பிக்கை வர வேண்டும். இன்னொரு மருத்துவரிடம் ஆலோசனைகூட பெறலாம். சிகிச்சைக்குப் பின் உங்களால் எத்தனை நாள்கள் ஓய்வு எடுக்க முடியும் என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன் பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சிகிச்சையில் மருத்துவர் அப்டேட்டுடன் இருக்கிறாரா என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்."
``அழகு சிகிச்சைகள் செய்து கொண்டால் பக்க விளைவுகளைத் தவிர்க்கவே முடியாதா?"
``அழகு சிகிச்சைகள் செய்துகொள்ளும் எல்லாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. ஆனால், சிலருக்கு அப்படி ஏற்பட வாய்ப்பு உண்டு. அது குறித்த அனைத்து சந்தேகங்களையும் மருத்துவரிடம் தெளிவுபடுத்திக்கொண்டே சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போன்று சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும் கூட 24 மணி நேரத்துக்கு கடினமான உடற்பயிற்சிகள், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது. மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகளையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்."
``எந்த வயதிலிருந்து அழகு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம்?"
``எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் 16 வயதுக்கு மேல் எடுத்துக்கொள்வது நல்லது. மேல் அண்ணப் பிளவு போன்ற பிறவிக் குறைபாடுகளுக்கு குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலேயே சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன."
``அழகு சிகிச்சைகள் தவிர்த்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்களும் ஆபத்தானவையா?"
``இயற்கை அல்லாத அனைத்துப் பொருள்களுமே ஆபத்தானவைதான். ஆனால், அழகு சாதனப் பொருள்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. எனவே, விலை அதிகமாக இருந்தாலும் தரமான பொருள்களைத் தேர்வு செய்து வாங்குங்கள். சிலருக்கு சில கெமிக்கல்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். அதிக பணம் செலவழித்து வாங்கிவிட்டோமே என்று அலர்ஜியையும் பொருட்படுத்தாமல் அந்தப் பொருளைப் பயன்படுத்தாதீர்கள். அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது எனில் அந்தப் பொருள் உங்களுக்குப் பொருந்தவில்லை என்பதே உண்மை. கூடுமானவரை தினமும் அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். விலை மலிவான லோக்கல் பிராண்டுகளைப் பயன்படுத்துவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன. எனவே, கவனமாக இருப்பது அவசியம்."
``நடிகை ரைசா அழகு சிகிச்சை எடுத்துக் கொண்டதால்தான் முகம் வீங்கியதாகப் பதிவிட்டிருந்தாரே... அது எதனால் நடந்திருக்கும்? தெர்மல் ஃபில்லர் சிகிச்சை என்பது என்ன?"
``நடிகை ரைசாவுக்கு தெர்மல் ஃபில்லர் சிகிச்சை வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். சிலருக்கு கண்ணுக்கு அடியில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் போன்று இருக்கும் அல்லது கருவளையம் போன்று நிறம் மாறியிருக்கும். இதைச் சரி செய்யவே தெர்மல் ஃபில்லர் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில் ஹைலோரோனிக் ஆசிட் (Hyaluronic acid) கண்களுக்கு அடியில் ஊசியின் மூலம் செலுத்தப்படும். இந்த ஆசிட் செலுத்தப்பட்ட பின் உடலில் உள்ள நீர்ச்சத்தை கண்களுக்கு அடியில் குவிக்கும் செயல்பாடு உடலில் நடந்து சருமம் இளமையாக, ஃப்ரெஷ்ஷாக இருப்பது போன்று இருக்கும். இது ஒரு முறை செய்துகொண்டால் ஒன்பது முதல் பத்து மாதங்களுகு அதே தோற்றத்தில் இருக்கலாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட மாதங்களுக்குப் பின் மீண்டும் செய்துகொள்ளலாம்."
Also Read: முகம் வீங்கிய நிலையில் ரைசா... மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ்... சிகிச்சையில் என்ன நடந்தது?
இந்தச் சிகிச்சையின்போது செலுத்தப்படும் ஊசி ரத்தநாளங்களில் பட்டிருந்தால் கண்களில் வீக்கம், ரத்தக்கசிவு இருக்கலாம். அல்லது சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் கடினமான உடற்பயிற்சிகள் செய்வது, மது அருந்துவது போன்ற செயல்களைச் செய்திருந்தாலும் இது நிகழலாம். ஆனால் ஐஸ்கட்டி ஒத்தடம் மூலம் இரண்டே நாள்களில் இது சரிசெய்து விடக்கூடிய ஒரு பிரச்னையே."
source https://www.vikatan.com/health/beauty/is-cosmetic-procedures-are-safe-or-not-cosmetic-surgeon-explains
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக