Ad

சனி, 19 செப்டம்பர், 2020

கொரோனாவுக்குப் பின்னும் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்... எப்படி கையாளப்போகிறது அரசு?

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாகப் பல பிரச்னைகள் இருந்தாலும் தற்போதைய நிலையில் உலகளாவிய பெரும் பிரச்னை கொரோனாதான். இன்றைய நிலையிலும் அமெரிக்கா, இந்தியா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. இன்னொருபுறம் நியூசிலாந்து, தான்சானியா போன்ற சில நாடுகள் கொரோனா தொற்று இல்லாத நாடுகளாகவும் மாறிவருகின்றன.

உலகம் சுற்றும் வைரஸ்

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் ஆராய்ச்சி நிலையிலிருந்து பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. சோதனைகள் முடிந்து மருந்து, சந்தைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். உலக நாடுகள் பலவும் கொரோனா தாக்கத்திலிருந்து தங்கள் மக்களைக் காக்கப் போராடி வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாகத் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாகவே காணப்படுகிறது. அதேவேளையில் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நூறைத் தாண்டுகிறது. 16.09.2020 நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,19,860. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,64,668. இறந்தவர்களின் எண்ணிக்கை 8,559.

சென்னை மாநகராட்சி

தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில்தான் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. 18.09.2020 அன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,53,616. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,40,633. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,037.

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து இல்லாத சூழலிலும். அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதா, அக்குபஞ்சர், சித்த மருத்துவம் எனப் பல்வேறு சிகிச்சைமுறைகளின் வாயிலாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகித நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உருவெடுக்கும் புதிய சிக்கல்:

புதியதாகத் தொற்று பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்தநிலையில்தான், தமிழகத்தில் புதிய சிக்கல்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. சென்னையில் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பலரும் கொரோனா இல்லாது, வேறு சில உடல்நிலைப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்ற பலருக்கு, நுரையீரல் சார்ந்த பிரச்னைகள்தான் அதிகமாக ஏற்படுகின்றன என்று மருத்துவ வட்டாரம் தெரிவித்துவந்த நிலையில், தற்போது பலரும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகள், இதயக் கோளாறு, நிமோனியா மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது, மூளை நரம்பியல் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான பிரச்னைகயாலும் பலர் பாதிக்கப்படுவதும் தெரியவருகிறது.

அரசு நடவடிக்கை:

சென்னையில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை முடிந்து வேறு உடல் பிரச்னையுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அவர்களுக்குச் சிகிச்சையளிக்க கொரோனா தொடர் கண்காணிப்பு மையத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அரசு தொடங்கியது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள், அங்குள்ள மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவது தொடர்ந்தாலும், இந்திய அளவில் இதற்கென்று பிரத்யேகமாகக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது தமிழகத்தில்தான்.

கொரோனா தொடர் கண்காணிப்பு மையம், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தாலும். இந்த மையத்தில் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளிலும் இந்தக் கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு ஒவ்வொரு மையத்துக்கும் 20-25 நபர்கள் வந்து பரிசோதனை செய்துகொள்கிறார்கள்.

கொரோனாவின் பக்கவிளைவுகள்?

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லாததால் தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ரெம்டெசிவிர், ஃபேவிபிரவிர், டெக்ஸாமெத்தசோன் போன்ற மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இதயத்துடிப்பு தொடர்பான பக்கவிளைவுகள் உண்டாக்கக் கூடியது. அதேபோல் டெக்ஸாமெத்தசோன் மருந்தும் பல பக்கவிளைவுகள் ஏற்படுத்தக் கூடியது. இந்த காரணத்தால்தான், மருத்துவரின் பரிந்துரை ஏதும் இல்லாது, இவ்வகை மருந்துகளை யாரும் உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

HYDROXY CHLOROQUINE

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு, சிகிச்சையின் போது எடுத்துக்கொண்ட மாத்திரைகள் காரணமாகப் பிற உடல் பிரச்னைகள் வருகின்றனவா, இல்லை கொரோனாவின் தாக்கமா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, ``கண்டிப்பாக இது மாத்திரைகளின் தாக்கம் கிடையாது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படுத்திச் சென்ற தாக்கம்தான் காரணம். அதையும் முன்னரே கண்டறிந்து அவர்களைக் குணப்படுத்தவே. தமிழக அரசு இந்த மையங்களை ஆரம்பித்துள்ளது. சிகிச்சை முடிந்து சென்ற யாராக இருந்தாலும். இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் நிலை குறித்து சீக்கிரமே கண்டறிந்து சரிசெய்ய முடியும்" என்று கூறினர்.

எக்ஸிட் டெஸ்ட்:

தற்போது கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்படும் யாருக்கும் எக்ஸிட் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பதில்லை. ஒருவாரம் முதல் இரண்டு வாரம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர், குணமடைந்துவிட்டார் என்று எந்தப் பரிசோதனையும் மேற்கொள்ளாமல் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குக் குணமாகிவிட்டது என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. இதற்கான பதிலைக் கேட்டால் மருத்துவத்துறையிடமிருந்து மழுப்பலான பதில்களும், மவுனமும் மட்டுமே கிடைக்கின்றன. இப்படிக் குணமடைந்து செல்பவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவாது என்பதை எப்படி உறுதிசெய்யமுடியும்?

தமிழகத்தில் வீசுமா இன்னொரு கொரோனா அலை..?

தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தொடக்க காலத்தில் தொற்று பரவாது கட்டுக்குள் வைத்திருந்தன. ஆனால், தற்போது இரண்டாம் அலையில் அந்த நாடுகளில் முன்பிருந்ததைவிட தற்போது அதிக வேகத்தில் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது.

தென் கொரியாவில் இரண்டாம் அலையைப் பொறுத்தவரை, தொற்று வேகமாகப் பரவிவருவதுடன், தொற்றிலிருந்து குணமடைந்த பலருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லியிலும் சென்னையிலும்கூட குணமடைந்த சிலருக்கு மீண்டும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வார்டு

சென்னையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் அரசு மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சை முகாம்களுக்கும்தான் வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. தற்போதைய நிலையில் மீண்டும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், இன்னும் மூன்று அல்லது நான்கு நாள்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறிவிடும் என்று முதல்வர் கூறி ஐந்து மாதங்களாகியும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முதல் அலையின் தாக்கமே இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதில், அடுத்த அலை வந்தால் தாங்குமா தமிழகம்?



source https://www.vikatan.com/government-and-politics/healthy/how-tamilnadu-govt-handling-post-covid-complications

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக