புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன் (24). ஜேசிபி ஆபரேட்டர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் கடந்த 2019-ல் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்தபோது கண்மாய்களில் சவுட்டு மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். தூத்துகுடியிலிருந்து வந்து மணமேல்குடியில் கணக்கராக பணியாற்றிய இசக்கிமுத்து என்பவர் பொன்னையனுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பொன்னையன் தன் நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு எதிராக இருந்த இசக்கிமுத்துவை வெட்டிப் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளியான பொன்னையன் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராகிவிட்டு பொன்னையன் அவரது அண்ணன் விஜயகுமாருடன்(27) டூவிலரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். இருவரும் செல்லுகுடி விளக்கு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே டூவிலரில் வந்த மூன்று மர்ம நபர்கள் பொன்னையனின் டூவிலரை மறித்து கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவளால் இருவரையும் சரமாரியாக வெட்டத் துவங்கினர். அப்போது பொன்னையனின் கழுத்தில் லேசான அரிவாள் வெட்டு விழ வயலுக்குள் இறங்கி ஓடிவிட்டார்.
பொன்னையன் தப்பிவிட, விஜயகுமாரின் தலை, கழுத்து, நெஞ்சு என உடல் முழுவதும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது அந்த கும்பல். இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருக்கோகர்ணம் காவல்துறை விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் கூறுகையில், "கடந்த 2019ல் மணமேல்குடியில் மணல் அள்ளியதைத் தட்டிக்கேட்டதற்காக, பொன்னையன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இசக்கிமுத்துவை வெட்டிப் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விஜயகுமார் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த மர்ம கும்பலின் முக்கிய எதிரியான பொன்னையன் தப்பித்து ஒடிவிட்டார். ஆனால் அவரது அண்ணன் விஜயகுமார் வசமாக மாட்டிக்கொள்ள அவரை படுகொலை செய்திருக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடியும் வருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/revenge-murder-at-puthukottai-elder-brother-killed-instead-of-younger-brother
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக