கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான் இதன் பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒன்றாக கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் இதில் பலரும் அலட்சியாக உள்ளார்கள்.
இந்நிலையில், முகக் கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், முகக் கவசம் அணிபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மன்னார்குடியில் செயல்படும் தன்னார்வ அமைப்பினர், ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கினார்கள். பேருந்துகளில் முகக் கவசம் அணிந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கி அசத்தினார்கள். இது மன்னார்குடி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களை, காவல்துறையினர் மடக்கிப் பிடித்து 200 ரூபாய் அபராதம் விதித்து வருகிறார்கள். முகக் கவசம் அணியாமல் வந்து, சிக்கிக் கொள்ளும் நபர்கள், என்னதான் காரணம் சொன்னாலும், காவல்துறையினர் சமரசம் செய்துக்கொள்வதில்லை. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் கூட, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்று வரக்கூடிய நபர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், மன்னார்குடி பேருந்து நிலையத்தில், மன்னை ஜேசிஐ அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்வு, இப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது. முகக் கவசம் அணிந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு மன்னை ஜேசிஐ அமைப்பின் தலைவர் எம்.சி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைப்பை சேர்ந்த வி. எஸ். கோவிந்தராஜன், ஜி.செல்வகுமார், எஸ். அன்பரசு, ஜி.ராஜகுமார், எஸ். ராஜகோபாலன், எம்.வி.முத்தமிழ்செல்வன், பாரதி. பிரகாஷ், எஸ்.எஸ். தனபால், ஜி.மூர்த்தி உள்ளிட்டோர் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் ஓன்றுக் கூடினர்.
மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு திருமக்கோட்டை, விக்கிரபாண்டியம், ஒரத்தூர், எடமேலையூர், வடபாதி ஆகிய ஊர்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் முகக் கவசம் அணிந்த பயணிகள் அனைவருக்கும் இலவசமாக பயணச்சீட்டுகளை வழங்கினார்கள். சுமார் 200 பயணிகளுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கப்பட்டது. முகக் கவசம் அணியாத பயணிகள் மற்றும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பாக தலைமை அஞ்சலகத்தில் தானியங்கி சானிடைசர் கருவியும் நிறுவப்பட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் தானியங்கி சானிடைசர் கருவி நிறுவவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கவும் திட்டமிட்டு வருவதாக மன்னை ஜேசிஐ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/free-bus-tickets-for-those-who-wears-masks-in-mannaargudi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக