புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்குப்பதிவு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (45) என்பவர் மது போதையில் வாக்களிக்க ஆலங்குடியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் அங்கு பணியிலிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு, ரகளையிலும் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, ஆனந்தனைக் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்து வாக்குச்சாவடி மையத்திற்குள் அத்துமீறிப் புகுந்த ஆனந்தன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வாக்குப்பதிவு எந்திரத்தைக் கொத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றுள்ளார். இதில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்திருக்கிறது.
உடனடியாக, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆனந்தனை மடக்கிப் பிடித்தனர். ஆனந்தனைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த சார் ஆட்சியர், ஆனந்த் மோகன், சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது. பின்னர் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. மதுபோதையில் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அறந்தாங்கியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருக்கிறது. இதற்கிடையே, ``அறந்தாங்கியில் ஈவிஎம் மிஷின் உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவும் தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/voting-machine-was-damaged-by-a-drug-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக