மதுரை ஆங்கிலேயர்கள் ஆளுகையில் இருந்த காலகட்டம். ஆங்கிலேய அதிகாரிகள் மக்களை மட்டுமல்ல மண்ணின் தெய்வங்களையும் மதிக்காமல் இருந்த காலம். அலட்சியமாய் மீனாட்சி அம்மன் கோயிலை குதிரையில் அமர்ந்து சுற்றிவந்து அபசாரங்கள் பலவும் செய்த காலம். தெய்வத்தை அவமதிப்பதை யார் வேண்டுமானாலும் பொறுக்கலாம் ஆனால் மதுரையின் காவல் தெய்வம் கருப்பசாமி பொறுப்பாரா? தன் விளையாட்டைக் காட்ட ஆரம்பித்தார்.
ஒருநாள் ஆங்கில அதிகாரி தன் சிப்பாயுடன் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தின் அருகில் வந்து அவமதிக்கும் வகையில் சிரித்தான். அதைக் கண்டு கோபமுற்ற கருப்பசாமி அவனுக்குப் படிப்பினை புகட்ட அவன் குதிரையின் காலை வாரிவிட்டார். குப்புற விழுந்தான் அதிகாரி. குதிரையின் பிழை என்று நினைத்தானே தவிர அது தெய்வத்தின் செயல் என்று உணரவில்லை அவன். மறுநாளும் அந்த இடத்துக்கே வந்தான். அப்போதும் குதிரை கால் இடரிக் கீழே விழுந்தது.
இப்போது கலவரமானான் அதிகாரி. ஊரில் குறிசொல்லும் ஆள்களை அழைத்துவரச் செய்து இது ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டான். மையிட்டுப் பார்த்ததில் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மறைந்திருப்பது அந்த மலைக்கருப்பன்தான் என்பதைக் கண்டுகொண்டார்கள் பூசாரிகள்.
“ஐயா, மலைமீது இருக்கும் எங்கள் காவல் தெய்வத்தின் விளையாட்டு இது” என்று சொல்லி எச்சரிக்கவும் செய்தார்கள்.
ஆட்சி செய்யும் நம் மீதே ஆட்டம் காட்டுகிறதா சாமி என்று கோபம் கொண்டு மலை உச்சிக்குச் சென்றனர். கருப்பசாமி சிலையை இடித்துத் தள்ளச் சொல்லி ஆணையிட்டார். ஊர் மக்கள் கூடித் தடுத்தனர்.
“கால் தடுக்கிய சாமிக்குத் தலை தடுக்கச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? கருப்பசாமியின் உக்கிரம் தெரியாமல் விளையாட வேண்டாம். மேலும் இது எங்கள் ஊரைக்காக்கும் தெய்வம். அதை மலை உச்சியிலிருந்து கீழே கொண்டு வைத்து ஆராதனை செய்துவந்தால் அதன் உக்கிரம் தணியும். நாங்களும் நலமுடன் வாழ்வோம்” என்றனர்.
அதிகாரிகளும் சிந்தித்தனர். அவர்களின் கோரிக்கைக்கு சம்மதித்தனர். மக்கள் கூடி கருப்பசாமியை அங்கிருந்து எடுத்துவந்து மலை அடிவாரத்தில் இருந்த ஐயனார் கோயிலில் வடக்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் கருப்பசாமி அங்கு குடியிருந்து அருள்பாலித்து வருகிறார்.
கீழ்க்குயில்குடி, வடிவேல்கரை ஆகிய கிராமங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது இந்த சமணர் மலை ஐயனார் மற்றும் கருப்பண்ண சாமி திருக்கோயில். இந்தக் கோயிலின் பின்புறம் எழுந்து நிற்கும் சமணர்மலை பல வரலாற்றுப் பொக்கிஷங்களின் திரட்சி.
இங்கு ஐயனார் தம் துணைவியர் இருவரும் அருகிருக்க அருள்பாலிக்கிறார். மேலும் இந்த ஆலயத்தில் கருப்பண்ணசாமிக்குப் பக்கத்தில் விருமனும் காசிமாயனும் கழுவநாதன் - கருப்பாயி அம்மாளும் இருளப்பனும், சங்கிலிக் கருப்பண்ணசாமியும், சோணைச்சாமியும், வீரபத்திரசாமியும் அருள்பாலிக்கின்றனர். இவர்கள் இந்த ஆலயத்தில் எழுந்தருளிய சம்பவம் சுவாரஸ்யமானது.
கீழக்குயில்குடி வடிவேல்கரை ஆகிய கிராமங்களில் ஒரு காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. பிழைக்க வழியறியாத மக்கள் அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து நாலா திசையிலும் குடிபுகுந்தனர். அவர்களில் ஒரு சமூகத்தினர் மூணுசாமி கோயில் இருக்கும் கருமாந்தூர் கிராமத்தில் குடியேறினர். அங்கிருந்த விருமன் மற்றும் காசிமாயனை வழிபட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களே அங்கு பூசாரிகளாகவும் மாறினர். காலம் ஓடியது. காலநிலை மாறியது. நாடெங்கும் நல்ல மழைபெய்து நானிலமும் செழித்தது. என்ன இருந்தாலும் தாய் நிலத்தின் மீது இருந்த பாசம் விடுமா...
மக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பினர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம் அல்லவா... இத்தனை ஆண்டுகள் சிரத்தையாய் பூஜை செய்த மக்களைப் போகவிட விருமனுக்கும் காசிமாயனுக்கும் மனமில்லை. அவர்களைத் தடுத்த வண்ணம் இருந்தனர். வேறு வழி தெரியாமல் மக்கள் அங்கிருந்து பிடிமண் எடுத்துக்கொண்டு தங்கள் ஊர் வந்து சேர்ந்தனர். பிடிமண்ணில் குலதெய்வம் கூட வந்துவிடும் அல்லவா... அப்படி வந்த விருமனையும் காசிமாயனையும் ஐயனார் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்தனர். கூடவே பிற தெய்வங்களுக்கும் சிலை வைத்து வணங்கத் தொடங்கினர்.
இந்த ஆலயத்துக்குப் பூஜை செய்யும் சமூகத்தினர் அருகில் இருந்த விளாச்சேரி கிராமத்தில் வாழ்ந்தனர். தினமும் தவறாமல் அங்கிருந்து வந்து பூஜை செய்து கிராமத்துக்குத் திரும்பினர். வழியெங்கும் விலங்குகள் மற்றும் திருடர்களின் பயம் இருந்தது. ஆனால் அவர்கள் கருப்பசாமி மீது பாரத்தைப் போட்டு நடந்துவருவர். கருப்பண்ணசாமியும் அவர்களின் பயணத்தின்போது கூடவேயிருந்து பாதுகாத்தாராம். எப்படித் தெரியுமா... ஒரு கரடி வடிவில் அவர்கள் பின்னாலேயே வருவாராம். அவர்கள் ஊரின் எல்லையை அடைந்ததும் கரடி மறைந்துவிடும். இந்த அதிசயம் பலகாலம் நடந்ததாம். அதனால் அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ’சமணர் மலைக் கரடி’ என்றே பெயர் சூட்டினர். அப்படிக் கூடவே இருந்து காக்கும் காவல் தெய்வம் கருப்பண்ணசாமி.
இந்தக் கோயிலில் நடக்கும் வைபவங்களில் இரண்டு மிகவும் முக்கியமானது. இன்று ஐயனாருக்கு நடைபெறும் பாவாடை பூஜை மற்றொன்று புரட்டாசி பொங்கல் திருவிழா.
மார்கழி மாதம் ஐயனாருக்கு ‘பாவாடை பூஜை’ நடைபெறும். கீழக்குயில்குடிக்காரர்கள் இந்தப் பூஜைக்காக, ஊருக்குள் வரி வசூல் செய்து பொங்கல்வைத்து வழிபடுவார்கள். நூற்றைம்பது படி அரிசியில் சர்க்கரைப் பொங்கல் செய்து அதை ஐயனார் சந்நிதிக்கு எதிரே உள்ள நான்கு கால் மண்டபத்தில் கோபுரம் போல் குவித்து வைப்பார்களாம். பின்பு அதற்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும்.
அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் ஊர் மக்களை எழுப்பி, கோயில் வாசலில் உட்கார வைப்பார்கள். அப்போது ஐயனார் பூசாரி மீது இறங்கி அருள்வாக்கு சொல்வார். பொழுது விடிந்ததும் அந்தப் பொங்கலை அனைத்து வீடுகளுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து பூஜையை நிறைவு செய்வர்.
‘புரட்டாசி பொங்கல் திருவிழா’ களைகட்டும். புரட்டாசி மாதத்தின் முதல் 15 நாள்களுக்குள் வடிவேல்கரை கிராமமும் அடுத்த 15 நாள்களுக்குள் கீழக்குயில்குடி கிராமமும் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இரண்டு நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில், முதல் நாள் அம்மன் எடுப்பு நடைபெறும். கிராமத்து மந்தையில் மண்ணால் முத்தாலம்மன் சிலை செய்து, அலங்கரித்து வழிபடுவார்கள். கிராமத்துப் பெண்கள், அம்மனுக்கு மாவிளக்குப் போடுவர். பிறகு ஊர்வலமாக முத்தாலம்மனை எடுத்துச் சென்று அருகேயுள்ள கண்மாயில் கரைப்பார்கள்.
மறுநாள் புரவி எடுப்பு. இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே விளாச்சேரியில் இருக்கும் மக்களிடம் குதிரை செய்யச்சொல்லி விடுகிறார்கள். ஊர் சார்பில் மூன்று குதிரைகள் செய்து வைக்கப்படும்.
2-ம் நாள் திருவிழாவின்போது மாலை சுமார் 3 மணியளவில், மேளதாளத்துடன் வந்து, குதிரைகளைத் தூக்கிச் செல்கிறார்கள். அன்றிரவு கிராமப் பொது மந்தையில் குதிரைகளை இறக்கி வைக்கிறார்கள். அங்கே ஐயனாருக்கு நெல் உள்ளிட்ட தானியங்களை காணிக்கையாகத் தருகிறார்கள். பிறகு, அங்கிருந்து கிளம்பும் குதிரைகள், கோயில் வாசலை அடைகின்றன. அப்போது வீட்டுக்கு ஒரு பானை மற்றும் கிடா சகிதமாக வந்து கருப்பருக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டுகின்றனர்.
இந்தப் பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்குபவர்கள் ஐயனாரும் கருப்பண்ணசாமியும். இவர்களைத் தங்களின் குடும்பத்தின் மூத்தவர்களாகவே இவர்கள் நினைக்கிறார்கள். எனவே ஏதேனும் முக்கியக் காரியங்கள் என்றால் இங்கு வந்து பூக்கட்டிப்போட்டு உத்தரவு கேட்டே அனைத்தையும் செய்கிறார்கள். சிவப்பு நிறப்பூ வந்தால் காரியத்தைக் கைவிடுகிறார்கள். பச்சை நிறப்பூ வந்தால் நிதானித்துச் செயல்படுகிறார்கள். வெள்ளைநிறப்பூ கிடைத்தால் உடனடியாகக் காரியத்தில் இறங்கலாம். அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மதுரை நகரெங்கும் கருப்பண்ண சாமி கோயில்கள் நிறைய இருந்தாலும் நாகமலை புதுக்கோடையில் இருக்கும் இந்த கருப்பண்ணசாமி கோயில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
எப்படிச் செல்வது?
மதுரை தேனி சாலையில் 10 கி.மி பயணித்து தெற்காக வரும் சாலையில் திரும்பி 2 கி.மீ பயணித்தால் திருக்கோயிலை அடையலாம்.
source https://www.vikatan.com/spiritual/temples/the-glory-and-history-of-nagamalai-pudukottai-ayyanar-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக