உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு, குழந்தைப் பிறப்பு விகிதத்தில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதா என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் 2018 மார்ச் மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரையிலும் உள்ள காலத்தில் குழந்தைப் பிறப்பு விவரங்களைக் கேட்டிருந்தார். அதே போல், 2019-2020 மற்றும் 2020-2021 வரையிலான காலகட்டத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் பற்றியும் அந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்தும் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டிருந்தார்.
அதில் கிடைத்த தகவலின்படி 2018-2019 மார்ச் வரையிலான காலத்தில் 45,342 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது 13.95 சதவிகிதமாகும். 2019-2020 காலகட்டத்தில் பிறப்பு விகிதம் சற்று குறைந்து (12.95 சதவிகிதம்) 42,064 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
கொரோனா உச்சத்தில் இருந்த 2020 மார்ச் முதல் 2021 மார்ச் வரை 40,538 குழந்தைகள் பிறந்துள்ளனர். (12.5 சதவிகிதம்). இதன் மூலம் கடந்த மூன்று வருடங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவது ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் பிரம்மாவிடம் கேட்டதற்கு, ``பொதுவாக கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்ற கருத்து எல்லோரிடமும் இருந்தது. ஆனால், அதைப் பொய்யாக்கும் வகையில் முந்தைய வருடங்களை விடவும் ஊரடங்கு காலத்தில் நெல்லை மாவட்டத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் வேலையிழப்பு போன்றவற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களிடம் ஏற்பட்ட வாழ்வியல் குறித்த அச்ச உணர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவை குழந்தைப் பிறப்பு விகிதம் குறைய காரணமாக இருந்திருக்கலாம். நெல்லை மாவட்டம் முழுவதும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்தபடி இருப்பதற்கான காரணத்தையும் ஆராய வேண்டியது அவசியம் என்பதால் ஆர்.டி.ஐ மூலம் தகவல்களைக் கேட்டேன்.
கடந்த மூன்று வருடங்களில் சத்துக் குறைபாடு காரணமாக எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 462, 505 மற்றும் 567 என ஒவ்வொரு வருடமும் அதிகரித்தபடியே இருப்பதும் ஆர்.டி.ஐ மூலமாகத் தெரியவந்திருக்கிறது. அதைச் சரிசெய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/total-fertility-rate-decreased-in-tirunelveli-at-2020-rti-data
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக