கொள்ளிடம் பகுதியில் மான் ஒன்று ஓடியதாக தகவலறிந்த வனத்துறையினர் அதனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள மாதானம் வயல் பகுதியில் நேற்று ஒரு மான் ஓடியதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் கொள்ளிடம் அருகேயுள்ள மாதானம்,பச்சைபெருமாநல்லூர், அழகியநத்தம், திருநீலகண்டம், உமையாள்பதி, பழையபாளையம் மற்றும் கடலோரப் பகுதிகளில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் மாலை வரை வனத்துறையினர் தேடியும் மானை கண்டறிய முடியவில்லை.
கொள்ளிடம் அருகேயுள்ள சரஸ்வதிவளாகம், கொன்னகாட்டுபடுகை, கீரங்குடி, மாதிரவேளூர், பாலூரான்படுகை, பட்டியமேடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காட்டுப் பகுதிகள் நிறைய உள்ளன.
அந்த இடங்களில் சில மான்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருசிலர் மட்டும் அப்பகுதியில் மான்களை பார்த்ததாக தெரிவிக்கின்றனர். `அப்பகுதியில் இருந்து வந்த மானாக இந்த மான் இருக்கலாமோ?' என்றும் வனத்துறையினர் சந்தேகத்தில் உள்ளனர். வனத்துறையினரின் கவலையெல்லாம் கொரோனா ஊரடங்கில் முடங்கி கிடப்பவர்களின் கைகளில் மான் சிக்கி, அதனை சமைத்து விருந்தாக்கி உண்பதற்கு முன் மானை பிடித்துவிட வேண்டும் என்பதுதான்.சில ஊர்காரர்களும் ரகசியமாய் மானைத் தேடுவதாகவும் தகவல். நல்ல நோக்கத்தோடு, தொடர்ந்து மானைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரிடம் மான் சிக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.
source https://www.vikatan.com/news/tamilnadu/kollidam-forest-officers-are-in-search-of-a-deer-that-entered-village
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக