தங்களிடம் கடன் தொகையாக வசூலித்த தொகை ரூ. 10 லட்சம் ரூபாயை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க, கோரி சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
Also Read: கரூர்: தடையை மீறி சேவல் சண்டை; 18 பைக்குகள் பறிமுதல்! - 5 பேரை வளைத்த போலீஸ்
கரூர் மாவட்டம், காந்திகிராமத்தில் வசித்து வருபவர் போதும்பொண்ணு. இவர் நடத்தி வரும் சுய உதவிக் குழுவின், தலைவியாக உள்ளார். இந்த சுயஉதவிக் குழுவில் 105 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அனைவரும் கரூர் நகர் பகுதியில் உள்ள திண்ணப்பா திரையரங்கம் பின்புறம் செயல்பட்டுவரும் விசாகம் கேபிடல் தனியார் நிதி நிறுவனத்தில், நபர் ஒருவருக்கு ரூபாய் 15 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர். வாரம் ரூ. 900 வீதம், 105 பெண்களும் தான்தோன்றிமலை ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த அம்மு என்ற சாந்தலட்சுமி மூலம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அம்மு என்ற சாந்தலட்சுமி என்பவர் கடந்த 10 வாரங்களாக செலுத்தக்கூடிய தொகையை வசூல் செய்துவிட்டு, நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், சாந்தலட்சுமியை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
ஆனால், அவரை கண்டுப்பிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில், இது சம்பந்தப்பட்ட நிதிநிறுவனம் கடன் கொடுத்த நபர்களை தொடர்புகொண்டு, கடனை செலுத்த சொல்லி வலியுறுத்தி கூறியுள்ளனர். இதனால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சாந்தலட்சுமியால் ஏமாற்றப்பட்ட 15 - க்கும் மேற்பட்ட சுயஉதவி குழு பெண்கள் கூடி, எஸ்.பி சசாங் சாயிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, சாந்தலட்சுமியால் பாதிக்கப்பட்ட வசந்தா என்ற பெண், "சுய உதவி குழு பெண்கள் தங்கள் குடும்பத் தேவைகளுக்காக கடன் பெற்று நிதி நிறுவனத்திற்கு முறையாக செலுத்தி வருகிறோம். சுயஉதவிக் குழுவில் உள்ள 105 பெண்களும் சாதாரண நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்கள். தினமும் கூலி வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்துபவர்கள் தான் அதிகம். அதனால், சுயஉதவிக் குழுவை ஆரம்பித்து, அதில் இணைந்து வங்கிகளில் கடன் பெற்று முறையாக கட்டி வருகிறோம். இந்த நிலையில்தான், 105 பேர்களும் தனியார் நிதி நிறுவனத்திடம் ஆளுக்கு தலா ரூ. 15,000 வீதம் கடன் பெற்றோம். வாராவாரம் எல்லோரும் ரூ. 900 வீதம் கட்டி வந்தோம். தனித்தனியாக எங்கள் கடன் தொகையை கட்ட முடியாது. 105 பெண்களின் மொத்தப் பணத்தையும் வசூலித்து, கட்ட வேண்டும்.
அதனால், இப்படி வசூல் செய்து வழங்கும் பணியை மேற்கொண்டிருந்த இடைத்தரகரான அம்மு என்கிற சாந்தலட்சுமி சுயஉதவிக் குழு பெண்கள் செலுத்திய முதல் 10 தவணைகளை நிதி நிறுவனத்திற்கு முறையாக செலுத்திவிட்டு, மீதமுள்ள 10 தவணைகளை வசூல் செய்து தலைமறைவாகிவிட்டார். கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் வரை அவர் எங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால், நிதி நிறுவனத்தில் இருந்து எங்களை பணம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். ஏற்கனவே, கொரோனாவால் சரியாக வேலை இல்லாமல் வருமானம் குறைந்து அல்லாடி வருகிறோம். இந்த நிலையில், இப்படி எங்கப் பணத்தை சாந்தலட்சுமியை எங்க பணத்தை எடுத்துக்கொண்டு கம்பி நீட்டிவிட்டார். அவரை கண்டுபிடித்து, எங்க பணத்தை மீட்பதோடு, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karur-ladies-gave-petition-to-sp-against-a-lady
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக