Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

வேல்முருகன்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

2021 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். பாமகவில் இருந்தபோது, பண்ருட்டித் தொகுதியிலிருந்து 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து வந்த 2011 தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவின் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியனிடம் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2012 ஆம் ஆண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியைத் தொடங்கிய வேல்முருகன், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் தனக்கு நெய்வேலி தொகுதியைத் தருமாறு கேட்டிருக்கிறார் வேல்முருகன். ஆனால், அந்தத் தொகுதி திமுக வசம் இருந்ததால், அத்தொகுதியை திமுக விட்டுத் தர முன்வரவில்லை. அதற்கு பதிலாக பண்ருட்டி தொகுதியைக் கொடுத்தது. தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கொடுக்கப்பட்ட அந்த ஒரு தொகுதியுமே, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் வழங்கப்பட்டது.

வேல்முருகன்

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 1967-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு முறையும், 4 முறை அ.தி.மு.கவும், தி.மு.க மற்றும் பாமக தலா மூன்று முறையும், தே.மு.தி.க, ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. 2016 தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சத்யா பன்னீர்செல்வம் 69,067 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் 66,644 வாக்குகள் பெற்று 2,423 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் வேல்முருகனை எதிர்த்து அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயலாணி, நாம் தமிழர் கட்சி சார்பில் சுபாஷினி மற்றும் அமமுக சார்பில் பி.சிவகொழுந்து உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். வன்னியர்களும் தலித் மக்களும் சம அளவில் உள்ள இந்தத் தொகுதியில், வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் நிற்பதும், வேல்முருகனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டதும், கூடுதல் பலமாக இருந்தது. அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கு பாமக ஆதரவும் ப்ளஸ் பாயின்ட்டாக அமைந்தது என்பதால் இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையாகவே காணப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/velmurugan-a-short-analysis-on-tamilnadu-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக