ஒரு உணவு விடுதிக்கு ஒரு சிங்கமும் முயலும் சேர்ந்து சாப்பிட வந்து ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டன. அனைவரும் அச்சத்துடன் விலகி நின்றபோது, உணவு பரிமாறுபவர் மட்டும் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகில் போனார். ஆனாலும் அவர் சிங்கத்திடம் செல்ல பயந்து முயலிடம், ''என்ன சாப்பிடுகிறீர்கள்... உங்கள் நண்பர் சிங்கத்துக்கு சாப்பிட என்ன வேண்டும்?” என்று கேட்டார். முயல் சிரித்தபடி "இங்கு நான் மட்டும்தான் சாப்பிட வந்தேன். சிங்கம் பசியுடன் இருந்தால், சிங்கத்துடன் நான் வந்திருக்க முடியுமா... நானே அல்லவா அதற்கு உணவாகியிருப்பேன்?" என்றது.
இந்த ஓஷோவின் கதையை புன்னகையுடன் கடக்கும் முன் நாம் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும்.
சிங்கம் மற்ற விலங்குகளை உண்ணும் மிருகம்தான் என்றாலும், பசித்தால் மட்டுமே அது வேட்டையாடுகிறது. நாளைக்கு என்று நான்கு மான்களையோ, நூற்றைம்பது முயல்களையோ அது வேட்டையாடி சேமித்து வைத்துக் கொள்வதில்லை.
சிங்கத்தைப் போலவேதான் அநேகமாக மற்ற உயிரினங்களும். ஆனால், மனித இனம் மட்டும்தான் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நாளைக்கு என்று தமது தேவைகளின் எல்லைகளையும், சேமிப்பின் தேவைகளையும் எந்தவொரு எல்லைக்குள்ளும் அடக்குவதில்லை. தனக்கு, தனது குழந்தைக்கு, தனது பேரனுக்கு என்று பரம்பரைக்கே சேர்த்து எப்போதும் வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. அந்த வேட்டையில் வீணாய்ப் போவதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை.
உலகெங்கும் 17 சதவிகித உணவு, அதாவது 93 லட்சம் டன் அளவு வீணடிக்கப்படுகிறதாம். அதேசமயம் உலகம் முழுக்க 300 கோடி மக்கள் பசியுடன் உழன்று வருகின்றனர் என்கிறது ஐநா சபையின் சமீபத்திய புள்ளிவிவரம்.
சொல்லப் போனால், உணவு உற்பத்தியை விட உணவு வீணடிப்பு அதிகமாயிருக்கிறது. நமது நாட்டில் ஒவ்வொரு இந்தியரும் ஒரு வருடத்தில் 50 கிலோ வரை உணவை வீண் செய்கிறார். அதனால், தேவைப்படுவோர்க்கு உணவு கிட்டாமல் பசியுடன் வாழும் மக்கள்தொகையும் இங்கே அதிகமாயிருக்கிறது என்கின்றன ஆய்வுகள். அளவுக்கு அதிகமான உணவை உண்டு, வாழ்க்கைமுறை நோய்களால் அவதியுறும் மக்கள் அதிகம் இருக்கும் நமது நாடுதான் 'உலகப் பசி குறியீட்டு நிலையில்' (global hunger index) 103-ம் இடத்தில் இருக்கிறது.
உணவை வீணாக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
-
உணவுப் பொருட்களை வாங்கும்போதே தேவைக்கேற்ப வாங்குவது.
-
பழம், காய்கறி வகைகளை தேவைக்கேற்ப வாங்கி அவை கெடும் முன்னரே உபயோகிப்பது.
-
அளவாய் சமைப்பது மற்றும் அதிகம் சமைத்துவிட்டால் மீண்டும் முறையாக பயன்படுத்துவது.
-
சமைக்கப்படாத உணவுப்பொருட்களை உரமாக மாற்றிப் பயன்படுத்துவது போன்ற பல வழிமுறைகள் நமக்கானவை.
மேலும், இந்த ரம்ஜான் மாதத்தில், "உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை" என்று திருக்குர்ஆன் (7:31)-ல் இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இறைத்தூதர் முகம்மது நபியின் வழி மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
அதுதான் இந்த அவசர உலகத்தில் நாம் மறந்தே போன பகிர்ந்து உண்ணுதல்.
"ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானது. இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானது. நால்வரின் உணவு எட்டு பேருக்கு போதுமானது’' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது போல, ஒரு குடும்பத்தில் அனைவரும் கூடி பகிர்ந்துண்ணும் போது ஒருவருக்குப் பிடிக்காததை மற்றொருவர் உண்பதால் உணவு விரயம் குறைகிறது. அதேசமயம் திருப்தியும், மகிழ்ச்சியும் நிறைகிறது.
வீட்டை விட்டு வெளியே போக முடியாத இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' எனும் அறத்தை அனைவரும் கடைபிடிப்போம்.
உணவு வீணடிப்பைக் குறைப்போம்!
#உலக உணவு வீணடிப்பு விழிப்புணர்வு நாள்!
source https://www.vikatan.com/food/food/special-article-for-international-food-wastage-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக