வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வில் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு களமிறங்கியுள்ளார். மாவட்ட தலைநகர் தொகுதி என்பதால் பிரசாரமும் அனல் பறக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வெற்றி பெற வேண்டிக்கொண்டு அக்கட்சியைச் சேர்ந்த 18 தொண்டர்கள் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மொட்டை அடித்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அப்புவும் கலந்து கொண்டு தனக்காக முடிக் காணிக்கைச் செய்த அ.தி.மு.க-வினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பி.காம்., எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ள அப்பு வணிகம் மற்றும் கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். முழு நேர அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். தற்சமயம், மாநகர மாவட்டச் செயலாளராக கட்சிப் பொறுப்பு வகிக்கிறார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 21-ம் தேதி அப்புவை ஆதரித்து வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். இந்த நிலையில், தேர்தல் பணியில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகளால் அ.தி.மு.க-வுக்குத் தலைவலி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சத்துவாச்சாரி மற்றும் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் தேர்தல் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.
பணம் செலவிடுவதற்குத் தயக்கம் காட்டுவதாலேயே அந்த நிர்வாகிகள் ஒதுங்கி நிற்பதாகவும், அப்படிப்பட்ட நபர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று இன்னொருத் தரப்பு குரல் கொடுத்துவருகிறது. மாநகராட்சி இரண்டாவது மண்டல குழுத் தலைவராக இருந்தவரும், தொகுதி செயலாளராக கட்சிப் பொறுப்பிலிருந்தவரும்தான் சத்துவாச்சாரியில் சுணக்கத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் கொதிக்கிறார்கள். இன்னொரு புறம் சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ளடி வேலை செய்து வருகிறார் ஐ.டி விங் நிர்வாகி ஒருவர் என்ற கருத்தும் நிலவுகிறது. இது அனைத்தையும் சமாளித்து அதிமுக வேட்பாளர் வெல்லுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/situation-of-admk-in-vellore-constituency
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக