Ad

புதன், 23 டிசம்பர், 2020

சிறை : `தளர்வே இல்லாத ஒன்பது மாதத் துயரம்!' - வழி ஏற்படுத்திக் கொடுத்த அற்புதம்மாள் வழக்கு

கொரோனா பரவலால் உறவினர்களைச் சந்திக்க முடியாமல் தவித்துவந்த கைதிகளுக்கு, சற்று நிம்மதியை அளித்திருக்கிறது அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கு. `ஒன்பது மாதங்களாக பெற்றோர், மனைவி, குழந்தைகளைப் பார்க்க முடியாமல் கைதிகள் பலரும் கடும் மனஅழுத்தத்தில் இருந்தனர். அற்புதம்மாள் வாங்கிய உத்தரவு மிக முக்கியமானது' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்

சென்னை, புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவு காரணமாக பரோலில் வெளியில் வந்தார். இருப்பினும், சிகிச்சை நிறைவடையாததால் மேலும் சில வாரங்கள் பரோலில் இருந்தார். இதையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்கான விடுப்பு முடிந்து, கடந்த 07.12.2020 அன்று மீண்டும் சிறை திரும்பிய நிலையில் அவரை நேரில் பார்த்துப் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் அற்புதம்மாள். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைத்துறை தரப்பில், `கொரோனா காலம் என்பதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரைக் காணொலிக் காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க முடியும். ஆனால், பேரறிவாளனின் வழக்கறிஞர் எனக் கூறி பலர் கும்பலாகச் சந்திக்க வருகின்றனர்' எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, `உறவினர்கள், நண்பர்களைக் கணொலிக் காட்சி வாயிலாகச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞர்களைப் பொறுத்தவரை அவர்களின் பெயர்ப் பட்டியலை, சிறை நிர்வாகத்திடம் கொடுக்கும்பட்சத்தில் அவர்களில் யாரை அனுமதிப்பது என்பதை சிறைத்துறைக் கண்காணிப்பாளர் முடிவு செய்வார்' என நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, `அற்புதம்மாள், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வருகிற ஜனவரி 19-ம் தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும்' எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்பது மாதங்களாகக் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவின் மூலம் பிற கைதிகளின் உறவினர்களும் சிறைக்குச் சென்று சந்திக்க வழிவகை பிறந்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நம்மிடம் பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார், `` கொரோனா தொற்று காரணத்தால் கடந்த 17.03.2020 முதல் சிறைவாசிகளை சந்தித்துப் பேச அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தண்டனை சிறைவாசி, விசாரணை சிறைவாசி என ஒருவரையும் சந்திக்க முடியவில்லை. அதிலும், நோய்வாய்ப்பட்ட கைதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கும் சிறைத்துறை அனுமதி மறுத்தது. அதேநேரம், கைதிகள் தங்கள் உறவினர்களிடம் போனில் மட்டும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் கைதிகளைச் சந்திக்க முடியாமல் அவர்களது உறவினர்கள் பெரும் துன்பத்தை அனுபவித்தனர். இந்தநிலையில், பேரறிவாளனின் உடல்நிலை குறித்து அற்புதம்மாள் கவலைப்பட்டார். இதையடுத்து, தனது மகனின் உடல்நிலை குறித்து விசாரிக்கும் வகையில் நேரில் சந்திக்க அனுமதி வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவர் உடனடியாகச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறையில் நேர்காணலுக்குச் செல்லும் முன் கொரோனா பரிசோதனை செய்யுமாறு தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஒன்பது மாதங்களாகக் கைதிகளைப் பார்க்க முடியாத பெற்றோர், உறவினர், மனைவி, மகள் ஆகியோருக்கு இந்த உத்தரவு நிம்மதியளித்திருக்கிறது" என்றார் உற்சாகத்துடன்.

Also Read: `மறுப்பே சொல்லாமல் மௌனம் காத்தார்!' - ஏழு பேர் விடுதலையில் மாநில அரசு வழக்கறிஞர் கொடுத்த அதிர்ச்சி

இது குறித்து வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். ``தமிழகத்திலுள்ள மத்திய மற்றும் கிளைச் சிறைகளில் 14,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். புழல் மத்தியச் சிறை 2-ல் 2,300 கைதிகள் இருக்கிறார்கள். ஆனால், 1,250 கைதிகளை மட்டும்தான் அடைக்க முடியும். அங்கு மட்டும் கூடுதல் எண்ணிக்கையில் கைதிகள் இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்து, பின்னர் அதிகரித்துவிட்டது. சிறைச்சாலைகளைப் பொறுத்தவரையில் விசாரணைக் கைதிகள், தண்டனைச் சிறைவாசிகள், தடுப்புக் காவல் சிறைவாசிகள் என மூன்று வகையாக இருக்கிறார்கள். விசாரணைச் சிறைவாசிகளை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் தண்டனை மற்றும் தடுப்புக் காவல் சிறைவாசிகளையும் செவ்வாய், வியாழன் ஆகிய நாள்களிலும் சந்திக்கலாம். தண்டனைக் கைதிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை மூன்று பேர் சந்திக்கலாம். காலையில் மனுப் போட்டால், மாலைக்குள் சந்திக்க முடியும். கைதிகளை, அவர்களின் உறவினர்கள் சந்திப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. இதன் மூலம், கைதிகளின் மன அழுத்தம் குறைந்து மனநோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

வழக்கறிஞர் கண்ணதாசன்

சிறைத்துறை டி.ஜி.பி-யாக நடராஜ் இருந்தபோது, `ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிக் குழந்தைகள் வந்து சந்திக்கலாம்' என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்தார். கொரோனா காலத்தில் இந்த நடைமுறைகள் முற்றாக நிறுத்தப்பட்டன. புழல் சிறையில் மட்டும் வீடியோ காலில் பேசுவதற்கு அனுமதியளித்தனர். அவ்வாறு பேச விதிகள் இல்லை என்றாலும், கைதிகளின் மனநலனுக்காகச் செய்து கொடுத்தனர். இதனால் கைதிகள் மத்தியில் சற்று நிம்மதி ஏற்பட்டது. பின்னர், அந்த நடைமுறைகளையும் நிறுத்திவிட்டனர். இதனால் பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் பேச முடியாமல் கைதிகள் தவித்துவந்தனர்.

இது குறித்து சிறைத்துறை நிர்வாகத்துக்குப் பலமுறை எடுத்துக் கூறியும் எதுவும் நடக்கவில்லை. வழக்கறிஞர்களையே சிறைக்குள் அனுமதிக்கவில்லை. மேலும், உள்ளே இருக்கும் காயின் பூத்துகளில் இருந்து உறவினர்களிடம் பேசுவதற்கு அனுமதி இருக்கிறது. இதற்காக செல்போன் நம்பரைக் கொடுத்து வைக்க வேண்டும். இது பதிவு செய்யப்படுவதால் உறவினர்களிடம் பேசுவதற்கே கைதிகள் தயக்கம் காட்டுகின்றனர். `யாரும் வரவே கூடாது, வழக்கறிஞர்களுக்கும் அனுமதியில்லை' என்பதெல்லாம் மிகப்பெரிய கொடுமை. இதை உடனடியாக மாற்றி, கொரோனா தொற்று விதிகளைப் பின்பற்றி உறவினர்களை அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். அற்புதம்மாள் வாங்கிய உத்தரவின் மூலம் கைதிகளுக்கு வழி பிறந்திருப்பது முக்கியமான ஒன்று" என்றார் நெகிழ்ச்சியுடன்.

வேலூர் சிறை

நீதிமன்ற உத்தரவு மூலம், தங்களையும் சிறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி மற்ற கைதிகளின் உறவினர்கள் சட்டப் போராட்டத்தைத் தொடங்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/judiciary/chennai-hc-ordered-to-prison-officials-to-allow-arputham-ammal-to-meet-perarivalan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக