பெரியார் குறித்த ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் யாரும் முதலில் எடுக்கும் புத்தகம் வே.ஆனைமுத்து தொகுத்த 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்' மூன்று தொகுதிகள். ஆனைமுத்து உழைப்புக்கான அடையாளம் அது. ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த பெரியார் பெருந்தொண்டர், சமூகநீதிப்போராளி ஆனைமுத்து மறைந்தார். காலம் அவரது பணிகளைக் கணக்கிட்டு நினைவுகூரும்.
நான் சென்னைக்கு வந்து வேலை தேடிய நாள்களில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்தபோது அவரை அடிக்கடி காண நேரிடும். பெரியாருடனான பழைய நினைவுகளை அசைபோடும் தோழர் ஆனைமுத்து, தமிழகத்தில் சாதியின் இயக்கம் குறித்த கூர்மையான தன் கருத்துகளை முன்வைப்பார். அப்போதே எண்பதைத் தாண்டியவர் என்றாலும் உடலில் அதற்கான அறிகுறியே இருக்காது. பெரியாரைப் போன்றே நீண்ட தாடியுடன் அவரைத் திருவல்லிக்கேணி வீதிகளில் பார்த்துப் பழகியவர்களுக்கு அவர் நடையின் வேகம் வயதைத் தாண்டியது என்பது தெரியும்.
பள்ளியில் படிக்கும்போது அவரைப் பெரியார் சிந்தனைகளின்பால் ஆற்றுப்படுத்தியவர் ஆசிரியர் ந.கணபதி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே 'திராவிடநாடு' போன்ற இதழ்களில் எழுதிய ஆனைமுத்து, கல்லூரிப்படிப்பை முடித்ததும் திருக்குறள் முனுசாமி ஆசிரியராக இருந்த 'குறள் மலர்' என்னும் இதழில் இணை ஆசிரியராக இருந்தார். தந்தை பெரியாரின் இயக்கப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஆனைமுத்து, 1957ல் பெரியாரின் அழைப்பையேற்று சாதி காக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரித்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறைக்குச் சென்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆனைமுத்து 18 மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போன்றவர்கள் நேரடியாக திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட முடியாத சூழலில் அவர்களுக்காக ஆனைமுத்து முயற்சியில் உருவாக்கப்பட்டதே 'சிந்தனையாளர்கள் கழகம்'. பின்னாளில் அது 'பகுத்தறிவாளர் கழக'மாக மாறியது. ஆனைமுத்துவின் வாழ்நாள் பணிகளில் மிக முக்கியமான இரு பங்களிப்புகள் 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்' தொகுப்பு நூற்கள் மற்றும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக அவர் மேற்கொண்ட இந்திய அளவிலான பணிகள்.
பெரியார் சிந்தனைகளைத் தொகுக்கும் பணி பெரியார் உயிருடன் இருக்கும் காலத்திலேயே தொடங்கியது. ஆனால் பெரியார் இறந்தபிறகு 1974ல்தான் அந்த நூற்கள் வெளியாகின. அரைநூற்றாண்டுக்காலத்துக்கும் மேல் இயங்கிய பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் அந்நூல்களாக உருவாகின. ஆனால் 2000 வரையிலுமே அந்த நூற்களை மிஞ்சும் வகையில் பெரியார் தொகுப்பு நூற்கள் வரவில்லை. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, அ.மார்க்ஸ், ராஜன்குறை, எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ரவிக்குமார் என்று எத்தனையோ ஆய்வாளர்களுக்கு முதல்நூலாக இருந்தது ஆனைமுத்து தொகுத்த நூற்களே. 2000க்குப் பின் அதைத் தாண்டிய பெரியார் சிந்தனைகளின் தொகுப்பு நூற்கள் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டன. ஆனைமுத்துவும் பெரியாரியல் இரண்டு தொகுதிகளைக் கலைஞர், கி.வீரமணியைக் கொண்டு வெளியிட்டார்.
சமூகநீதி இட ஒதுக்கீட்டுக்கான அவரது பணிகள் தமிழ்நாட்டுடன் சுருங்கிவிடவில்லை. மத்திய அரசுப் பணிகளிலும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி 1978ல் அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டியிடம் வலியுறுத்தினார். தொடர்ச்சியாக 'பகுஜன்' என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்த கன்ஷிராம் மற்றும் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மாயாவதி போன்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தலைவர்களிடம் சமூகநீதிச் சிந்தனை உரையாடல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டார். 1978ல் உ.பி. மாநிலம் முசாபர் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு ஆனைமுத்துவுக்குக் கிடைத்தது.
1979ல் பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இட ஒதுக்கீடு குறித்த பெரியாரின் கருத்துகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளிவரக் காரணமாக இருந்தார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர எம்.ஜி.ஆரைச் சந்தித்து வலியுறுத்தினார். மண்டல்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதற்கும் ஆனைமுத்து வட இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கொடுத்த அழுத்தம் மிக முக்கியமான காரணம்.
திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறியபின் ஆனைமுத்து 'பெரியார் சமவுரிமைக் கழகம்' என்னும் அமைப்பை நடத்தினார். பிறகு 'மார்க்சிய சிந்தனைகளையும் பெரியாரிய சிந்தனைகளையும் இணைத்தாலே சமூக விடுதலை சாத்தியம்' என்னும் முடிவுக்கு வந்த ஆனைமுத்து அமைப்பின் பெயரை 'மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி' என்று மாற்றினார். கறுப்புக்கொடியில் சிவப்பு அரைவட்டத்தில் அரிவாள்-சுத்தி சின்னம் இடம்பெற்றது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், பெரியார், அம்பேத்கர், ஜோதிபா பூலே ஆகியோரைத் தன் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். ஆனைமுத்துவின் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வெளியாகும் 'சிந்தனையாளன்' இதழ் முக்கியமான அரசியல் இதழ். சமகாலச் சூழலைப் பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய வெளிச்சத்தில் அலசும் பல முக்கியமான கட்டுரைகளைத் தாங்கிவரும் இதழ். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் பெற்ற பங்கு குறித்த புள்ளிவிபரங்களை விரல்நுனியில் வைத்திருப்பார் ஆனைமுத்து.
நிறைவாழ்வு வாழ்ந்து 96 வயதில் மறைந்திருக்கிறார் ஆனைமுத்து. சிலமாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்ட ஆனைமுத்து முதுமை காரணமாகத் தற்போது மறைந்துவிட்டார். கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்ற கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரில் பலர் அதற்குக் காரணமான ஆனைமுத்துவின் உழைப்பை அறியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் கலந்திருக்கிறார் ஆனைமுத்து.
பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்தளித்த முன்னோடி என்றவகையில் பெரியார் பேசப்படும் காலம்வரை ஆனைமுத்துவும் வாழ்வார்.
source https://www.vikatan.com/arts/literature/periyars-follower-vanaimuthu-life-history-and-his-achievements
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக