மதுரை தெற்குவாசல் மார்க்கெட் பகுதியில இருக்கிறது `சுகன்யா ஹோட்டல்'. வலது பக்கம் பூக்கடை, இடது பக்கம் கருவாட்டுக் கடை. இடையில் கறிக்குழம்பு வாசத்தோட பரபரத்துக்கொண்டிருக்கிறது அந்த அசைவ உணவகம். `வாங்க தம்பி’ என்று சிரித்தபடி கடைக்குள் வரவேற்றார் ஹோட்டல் உரிமையாளர் சங்கர். சொகுசு சேரை ஓரமாகத் தள்ளிவிட்டுவிட்டு, கால்கடுக்க கஸ்டமர்களைக் கவனித்தபடி பில்போடும் உழைப்பாளி.
``1990-ல இருந்து நான் ஹோட்டல் பிசினஸ் செய்றேன் தம்பி. அப்போயெல்லாம் தள்ளுவண்டிக் கடைதேன். மூட்ட தூக்குற தொழிலாளியில இருந்து அம்பாசிடர் கார்ல போற ஓனருங்க வரைக்கும் நமக்குக் கஸ்டமரா இருப்பாங்க. ஆண்டவன் புண்ணியத்துல இன்னைக்கு ஏசி ரூம்ல சாப்பாடு கொடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன்.
30 வருஷமா நமக்கு ரெகுலர் கஸ்டமரா இருக்குறவுகயெல்லாம் உண்டு. 3 ரூவாய்க்குக் குறைவா இதே ஏரியாவுக்குள்ள பரோட்டா போட்ருக்கேன். ஆனா, இப்ப நம்ம கடையில ஒரு பரோட்டா 17 ரூவா. நம்ம கடைய சுத்தி இருக்குற கடைகள்ல எல்லாம் பரோட்டா வில கம்மிதேன். ஆனாலும், நம்ம கடைக்கு வர்றவுக குறையல. எல்லாம் டேஸ்ட்டுதேன் காரணம் வேறென்ன..?!
நம்மகிட்ட 17 ரூவா, 22 ரூவா, 40 ரூவானு பல அயிட்டங்கள்ல பரோட்டா இருக்கு. நம்ம கடை பரோட்டாவையும் கறிக்குழம்பையும் அடுச்சா, அப்புடித்தேன் இருக்கும்'' என்றார் சங்கர்.
ஒரு வாடிக்கையாளராக டேபிள்களைக் கவனித்தோம்.
சிக்கன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி கமகமத்தது. ``இங்க, மதியம் போட்ட பிரியாணியவே நைட்டுக்கும் போடுற வழக்கமெல்லாம் கெடையாது. அப்பப்பதேன் செய்வாக. அதனால பிரியாணி எல்லாம் ஃபிரெஷ்ஷா, சூடா இருக்கும். மட்டன் பிரியாணிய எல்லாம் சைட் டிஷ்கூட தேடாம அல்வா மாதிரி அப்புடியே வாய்ல அள்ளிப் போட்டுச் சாப்புடலாம். அதுல சிக்கன் குழம்பும், மட்டன் குழம்பும் ஊத்திச் சாப்பிட்டா... சொல்லவா வேணும்... ருசிக்குக் கைகழுவவே மனசு வராது'' என்றார் பிரியாணி சூடு குறைவதற்குள் ப்ளேட்டை காலிசெய்துகொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவர். ஸொமாட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் கடைக்குள் வந்து போனபடி இருந்தார்கள்.
``நம்ம கடையில கறிக்குழம்போட முழு சாப்பாடும் போட்டோம். கொரோனா ஆரம்பிச்சதுல இருந்து மதிய சாப்பாட நிப்பாட்டிட்டோம். தை மாசத்துக்கு அப்புறம்தான் மறுபடியும் ஆரம்பிக்கணும். கடையில பார்சலும் கூட்டமாதேன் இருக்கும். அதனால சொகுசு சேர்ல எல்லாம் உக்காந்து கஷ்டமருக்கு திருப்தியா பில்லு போட முடியாது'' என்கிறார் சங்கர்.
கல்லாபெட்டிக்கு ரெண்டடி தூரத்தில் போடப்பட்டிருக்கும் சேர்களில் பார்சல் கஸ்டமர்களும், ஃபுட் டெலிவரி ஊழியர்களும் காத்திருக்கிறார்கள். விதவிதமான உணவு பார்சல்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன.
பார்சலுக்குக் காத்திருந்தவர்களில் ஒருவர், ``இந்தக் கடையில கிச்சன்லாம் ஓப்பன்தான். பார்சல் வாங்குற எடத்துல இருந்தே நாம எல்லாத்தையும் பாக்க முடியும்ங்கிறதால, அந்த வேடிக்கையில நேரம் போறது தெரியாது. இந்தக் கடை எலும்புக் கொழம்புக்காகவே இங்க வர்றவுக நெறைய பேரு. அதை மட்டும் பார்சல் வாங்கிட்டுப் போறவங்களும் உண்டு. 40 ரூவா. எலும்பை நல்லா தெரக்கி பார்சல் பண்ணிக் கொடுப்பாக'' என்றார் இங்கு தன் அனுபவம் பகிர்ந்து.
Also Read: `கமகமனு மஞ்ச சீரகம் நாட்டுக்கோழி குழம்பு!' - மேலூர் `சேகர் கடை' ஸ்பெஷல் #Recipe
``நாக்குக்கு ருசியா தேடித் தேடி சாப்புடுற மதுரக்காரய்ங்க லிஸ்ட்ல இந்த ஹோட்டலும் ஒண்ணு. புதுசா சாப்பிடுற உள்ளூருக்காரங்களும் வெளியூருக்காரங்களும் நிச்சயமா இங்க ஏமாந்துபோக மாட்டாக'' என்பது மதுரை உணவுப் பிரியர்களின் ரிவ்யூ.
ஹோட்டலில் பரோட்டா, பிரியாணி என்று எல்லாமே சுவையாக இருந்தது. அதற்குக் கொடுக்கும் குழம்புகளும் அதகளம். மாஸ்டர் நுணுக்கி நுணுக்கிக் கொத்திய கைவண்ணத்தில் கொத்து பரோட்டா பூவாக இருந்தது. ஓர் அசைவ சாப்பாட்டை சாப்பிட்டு முடித்த பின்னர், திக்குமுக்காடுவது, திகட்டுவது என்றில்லாமல் திருப்தியாக இருந்தது சிறப்பு. அங்கு கொடுத்த பாக்கு, வெத்தலை போட்ட பின்னர் வயிற்றுக்கும் மனதுக்கும் முழு நிறைவு.
``காரசாரமா சாப்புடுறவுக நாக்குக்கு நம்ம கடையில விருந்து வெயிட்டா இருக்கும். நான் ஒரு தீவிர ரஜினி ஃபேன். அவர் பேர சொல்லி என்னால முடிஞ்ச சில நல்ல காரியங்களையும் செஞ்சுட்டு இருக்கேன்” என்கிறார் சங்கர்.
பின்குறிப்பு: ஆசைக்குச் சாப்பிடும் பரோட்டாவை அளவோடும் சாப்பிடணும்னு மனசுல வெச்சுக்குவோம்!
source https://www.vikatan.com/food/food/spot-visit-to-madurai-suganya-hotel-which-famous-for-parotta-and-elumbu-kuzhambu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக