``வரும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக பா.ஜ.க., தி.மு.க-வுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்ததையடுத்து, மீண்டும் தமிழக அரசியலில் கூட்டணி தொடர்பான பரபரப்புகள் பற்றியெரியத் தொடங்கியிருக்கின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில், `அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார்...’ என்ற அதிகாரப் போட்டி கடந்த சில வாரங்களாக அ.தி.மு.க-வை அலைக்கழித்துவந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையிலான இந்த அதிகாரப் போட்டிக்கு நேற்று முன்தினம்தான் விடை கிடைத்தது. அதாவது, `அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார்’ என்ற அதிரடி அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வமே அறிவித்து ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், இந்த அறிவிப்புச் செய்திகள் படபடத்துக்கொண்டிருந்த வேளையிலேயே, அ.தி.மு.க கூட்டணியிலுள்ள தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணி குறித்து தெரிவித்த கருத்து புதிய சர்ச்சைக்கு அச்சாரமிட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடையே பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ``தற்போதைய கூட்டணி என்பது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இனிமேல்தான் கூட்டணிகள் அமையும். தமிழக பா.ஜ.க தற்போதிருக்கும் கூட்டணியிலேயே தொடரலாம் அல்லது தி.மு.க-வோடு கூட்டணி அமையலாம். இந்த இரண்டு கூட்டணியும் இல்லாமல் புதிதாக நாங்களேகூட ஒரு கூட்டணியை அமைக்கலாம். இவையெல்லாமே அந்தந்தச் சூழல்களைப் பொறுத்தது'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
பொன்.ராதாகிருஷ்ணனின் இந்தப் பேட்டியால், `தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணியா?' என்ற அதிர்ச்சி ஒருபக்கம் ஏற்பட்டிருப்பதோடு, `அ.தி.மு.க முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டவுடன், இப்படியொரு கருத்தை தமிழக பா.ஜ.க தலைவர் ஒருவர் தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியின் வெளிப்பாடா...’ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.
இந்தநிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலடியாக, அ.தி.மு.க தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார், ``நாங்கள் கூட்டணியை மதிப்பவர்கள். கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அல்லது அந்தக் கட்சியின் தமிழகப் பொறுப்பாளராக இருக்கக்கூடிய தேசிய அளவிலான தலைவர்கள் சொல்லும் கருத்துகளுக்குத்தான் நாங்கள் பதில் சொல்ல முடியும். மற்றபடி கட்சியில் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்வார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது'' என்று காட்டமாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். கூடவே, ```கூட்டணியில் எவன் இருப்பான், எவன் போவான் என்பதெல்லாம் தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியவரும்’ என்று தி.மு.க பொதுச்செயலாளர் மரியாதைக் குறைவாக சொன்னதுபோல், நாங்கள் கூட்டணிக் கட்சியை மரியாதைக் குறைவாகப் பேச மாட்டோம்'' என்று தி.மு.க-வுக்கும் ஒரு குட்டு வைத்திருக்கிறார்.
Also Read: அ.தி.மு.க: வழிகாட்டும் குழுவில் `அந்த' 2 பேர்! - அறிக்கை கிளப்பிய அனல்!
இந்தநிலையில், `திடீரென தமிழக பா.ஜ.க., கூட்டணி குறித்து இப்படியோர் அதிரடி அறிவிப்பை வெளியிடவேண்டிய அவசியம் என்ன?’ என்று பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம்... ``அரசியலில், ஒரேயொரு வாய்ப்பு-இலக்குடன் கட்சிகள் செயல்பட்டுவிட முடியாது என்ற அடிப்படை உண்மையைச் சொல்லும் சாதாரண கருத்தைத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதை வைத்துக்கொண்டு, அ.தி.மு.க-வுடன் அதிருப்தி, தி.மு.க-வுடன் கூட்டணி என்றெல்லாம் ஊதிப் பெரிதாக்குவது சரியல்ல. கற்பனையான, தேவையற்ற விஷயங்களை வைத்துக்கொண்டு விவாதிப்பதில் பயனில்லை. எனவே, பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கும் கருத்துமீது எனக்கு எந்தவிதக் கருத்தும் இல்லை'' என்றார் தெளிவாக.
தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``எந்த அடிப்படையில் பொன்.ராதாகிருஷ்ணன் அப்படியொரு கருத்தை வெளியிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. `அ.தி.மு.க கூட்டணியில்தான் தொடர்கிறோம்’ என்று தமிழக பா.ஜ.க தலைவரே இது குறித்துத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, என் கருத்தும் அதுதான்’’ என்றார் மிகச் சுருக்கமாக.
Also Read: முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு... சைலன்ட் மோடில் தேனி அ.தி.மு.க நிர்வாகிகள்!
இதற்கிடையே, `தி.மு.க-வுடனும் தமிழக பா.ஜ.க கூட்டணி அமையலாம்’ என்ற பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து குறித்துப் பேசும் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி, ``பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கும் கருத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், `அ.தி.மு.க-வோடு அவர்கள் சுமுகமாக இல்லை; எந்த நேரத்திலும் அந்தக் கூட்டணி முறியலாம்’ என்பதுதான்.
மோதல்கள், உரசல்களால் அவர்களது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்பதை பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவாக விளக்கியிருக்கிறார். கூடவே, இதற்கான மாற்று ஏற்பாடுகளையும்கூட பொன்னாரே சொல்லியிருக்கிறார். ஆனால், அது அவர் சொல்லியிருக்கும் கட்சிகளின் மனநிலையைப் பொறுத்தது.
தி.மு.க கூட்டணியில் தமிழக பா.ஜ.க-வை இணைக்க வேண்டுமா என்பதை எங்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தி.மு.க கூட்டணியில் இணைவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், கடைசி கட்டத்தில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. ஆக, தேர்தல் தேதி முடிவாகி, கூட்டணிக் கட்சிகள் குறித்த இறுதி முடிவை அறிவிக்கும் வகையில், எந்தெந்தக் கட்சிகள், எந்தெந்தக் கூட்டணியில் இருக்கும் என்பதை நாம் தெளிவாகச் சொல்ல முடியாது. கூட்டணிக்குத் தலைமை வகிக்கக்கூடிய கட்சிகளின் தலைவர்களின் மனநிலையைப் பொறுத்துதான் கூட்டணிகள் அமையும்.
என்னைப் பொறுத்தவரையில், தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் இல்லை என்பதுதான். காரணம்... நீட் தேர்வில் ஆரம்பித்து, சுற்றுச்சூழல் வரைவறிக்கை, குடியுரிமைத் திருத்த சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைப்பது எனத் தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருபவர்கள் மத்திய பா.ஜ.க-வினர்.
குறிப்பாக தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான போக்கைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்துவருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் தமிழைப் புறக்கணித்து, இந்தி-சம்ஸ்கிருத மொழிகளைத் திணிக்கிறார்கள். பலகட்டங்களில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், ஆரம்பக் கல்வியிலேயே பொதுத்தேர்வை திணிப்பது எனக் கல்வியை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கும் வேலையையும் செய்கிறார்கள். இப்படி தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாகச் செயல்பட்டுவரும் பா.ஜ.க., தி.மு.க கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவு என்பதே என் கருத்து!'' என்கிறார் உறுதியாக.
source https://www.vikatan.com/news/politics/dmk-reactions-on-pon-rathakirishnan-statement-regarding-alliance-in-2021-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக