மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நள்ளிரவில் நடந்த கொலை, கொள்ள வழக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது சாட்சி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட 9 பேரை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் பரபரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய எதிர் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முனிரத்தினம், "கொடநாடு பங்களாவில் நடந்த மர்மத்தை வெளிக்கொண்டுவர வேண்டுமானால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, சுதாகரன், இளவரசி, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜர், அதிமுகவைச் சேர்ந்த சஜ்ஜீவன் மற்றும் அவரது சகோதரர் சுனில் ஆகிய 9 நபர்களிடமும் சாட்சியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த மனு தொடர்பாக வருகின்ற 29-ம் தேதி விசாரணை நடைபெறும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/the-opposition-party-asks-cm-palanisamy-sasikala-to-attend-the-kodanad-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக