நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹள்ளிகவுடர்.1929 ஆம் ஆண்டு பிறந்த இவர்,1947 ஆம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்துக்காக இவரை கைது செய்து, மைசூர் சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்கள் சிறையில் தண்டனையை அனுப்பிவைத்து பின்னர் விடுதலையானார்.
இவரது தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று, ஊட்டியில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு வரவழைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, சுதந்திரதினத்தில் இவர் பங்கேற்கவில்லை என்றாலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இவரது வீட்டுக்குச் சென்று உரிய மரியாதை செய்து வந்தனர்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக தியாகி ஹள்ளிகவுடர் நேற்று காலை தனது சொந்த ஊரான நஞ்சநாடு கிராமத்தில் காலமானார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டத்தில் கடைசியாக வாழ்ந்து வந்த ஒரே சுதந்திர போராட்ட வீரரும் தற்போது உயிரிழந்திருப்பது இந்த மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியாகி ஹள்ளி கவுடர் குறித்து நம்மிடம் பேசிய நஞ்சநாடு கிராம மக்கள், ``இவருக்கு தற்போது 92 வயது. இவரது மனைவி நஞ்சம்மாள், கடந்த சில ஆண்டுக்கு முன்பு, காலமானார். இவருக்கு, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இவருக்கு நம் தேசத்தின் மீதும், தேச தலைவர்கள் மீதும் பற்று அதிகம். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிக்கடி இளைஞர்களுக்கு சொல்லி வருவார். நாட்டின் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை ஊர் மக்களுக்கு உணர்த்த ஒரு போதும் இவர் தவறியதில்லை" என புகழஞ்சலி செலுத்துகின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/freedom-fighter-died-of-age-in-nilgiris
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக