சென்னை அம்பத்தூரை அடுத்த முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (75). இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி (68). இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள் உள்ளனர். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியரான மூர்த்தி தன் மனைவி மக்களுடன் முகப்பேர் முதலாவது பிளாக்கில் வசித்து வந்தார். மூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு உடல்நிலை உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
மனைவியின் மரணம் மூர்த்தியின் மனதை நொறுக்கிப் போட்டது. அவரின் மகன்கள் மற்றும் மகள்கள் சேர்ந்து ராஜேஸ்வரியின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் குறைவான அளவிலேயே ராஜேஸ்வரியின் மறைவிற்கு உறவினர்கள் வந்தனர். கிட்டதட்ட 50 வருடங்களாக தன் அன்புக்குப் பாத்திரமாய் விளங்கிய மனைவி ராஜேஸ்வரியின் பிரிவினை ஏற்றுக்கொள்ள முடியாமல் பரிதவித்த மூர்த்தி அழுதபடியே இறுதிச் சடங்குகள் அனைத்தையும் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, நேற்று மதியம் 12.30 மணியளவில் முகப்பேரை அடுத்த சத்யா நகர் மாநகராட்சி இடுகாட்டிற்கு ராஜேஸ்வரியின் உடலானது ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மனைவியின் சடலத்தின் முன்பாக வேதனையுடன் நடந்து சென்ற மூர்த்தி திடீரென்று மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மூர்த்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மூர்த்தி உயிரிழந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரியின் சடலத்தை சத்யா நகர் இடுகாட்டிலேயே வைத்துவிட்டு மூர்த்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து அதே இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்குத் தாய் தந்தை இருவரது உடல்களையும் ஒரே நேரத்தில் அவர்களது பிள்ளைகள் கதறி அழுதபடி தகனம் செய்தனர்.
சாவிலும் இணை பிரியாத கணவன் - மனைவியின் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/husband-died-in-shock-at-the-funeral-of-his-wife
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக