Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

மகேந்திரன்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

அண்மை கால சட்டமன்ற தேர்தல்களில் திமுக - அதிமுக இடையே இருமுனை போட்டி கொண்டதாக இருந்த கோவை சிங்காநல்லூர் தொகுதி, இந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் போட்டியிட்டதால் மும்முனை போட்டியைக் கண்டது. 1967 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை இத்தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 முறையும், பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 2 முறையும் , ஜனதா கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருந்தது. திமுக வேட்பாளர் கார்த்திக் 75,459 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிங்கை. என். முத்து 70,279 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நந்தகுமார் 16,605 வாக்குகளும், மதிமுகவின் அர்ஜூன் ராஜ் 11,035 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் கல்யாண சுந்தரம் 4,354 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

கமல் , மகேந்திரன்

2016 தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றிய நிலையில், இந்த முறை இழந்த அந்தத் தொகுதியை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக மிகவும் துடிப்பாக களமிறங்கியது. அதிமுக வேட்பாளராக கே.ஆர்.ஜெயராம், திமுக வேட்பாளராக மீண்டும் என்.கார்த்திக் போட்டியிட்ட நிலையில், இவர்களுக்கு கடும் போட்டியைக்கொடுக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.மகேந்திரன் களமிறங்கினார். இவர் கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இதில் 28,634 வாக்குகள் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து கிடைத்தது. அந்த வாக்குகள் கொடுத்த உற்சாகத்தின் அடிப்படையிலேயே மகேந்திரன் இந்த தேர்தலில் சிங்காநல்லூரில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்றவற்றால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டதாக இத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பாஜக மீது கொண்டிருக்கும் அதிருப்தி, அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கு பாதகமான அம்சமாக பார்க்கப்பட்டது. எனவே சிபிஎம், சிபிஐ ஆகியவற்றின் உதவியுடன் இம்முறையும் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த திமுகவுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரான ஆர்.மகேந்திரன் கடும் போட்டியைக் கொடுத்ததால் மும்முனை போட்டிக் காணப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/r-mahendran-a-short-analysis-on-tamilnadu-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக