உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் 26-ம் தேதி மாலை மரணமடைந்தார். இது அவர் குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியது.
``எம்.ஜி.ஆர் ரசிகரான ஆர்.போஸ், சிறு வயதிலிருந்து அவனியாபுரம் பகுதியில் அதிமுக நிர்வாகியாகப் பணியாற்றியவர். தன்வழியில் மூத்த மகனான ஆர்.பி.உதயகுமார், அதிமுக-வில் நுழைந்தது அவருக்கு மகிழ்ச்சி. அதிலும், கட்சியில் படிப்படியாக வளர்ந்து அமைச்சராக உயரும்வரை அருகிலிருந்து பார்த்தவர்.
குடும்பத்தினர் தொடங்கிய அம்மா சேரிடபிள் டிரஸ்ட் மூலம் பல்வேறு நலப்பணிகளையும், கொரோனாகால உதவிகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். அம்மா கோயில் கட்டுமானப் பணி நடக்கும்போது அங்கேயே தங்கியிருந்தார்.
அதேநேரம், அமைச்சரின் தந்தை என்ற பந்தா இல்லாமல் வீட்டுக்கு வரும் கட்சியினரிடம் நன்றாகப் பேசிப் பழகுவார். கட்சி நிகழ்ச்சிகளில் ஓடியாடி வேலை செய்வார். சாப்பாடு பரிமாறுவார். யாரிடமும் அதிகாரம் செய்ய மாட்டார்.
இப்படி ஆக்டிவாக இருந்தவரின் திடீர் மரணம் ஆர்.பி.உதயகுமாரையும் அவர் குடும்பத்தினரையும், கலங்க வைத்திருக்கிறது’’ என்றார்கள் நம்மிடம் பேசிய அதிமுக-வினர்.
அவருடைய உடல் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வராமல், ஆர்.பி.உதயகுமாரிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியிருக்கிறார்.
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க., பா.ஜ.க., மதிமுக நிர்வாகிகள் நேரிலும், தொலைபேசி மூலமும் ஆர்.பி.உதயகுமாருக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.
source https://www.vikatan.com/news/politics/rb-udhayakumar-father-died-ministers-paid-last-respect
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக