இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேலான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த அறிவிப்பு பலருக்கும் பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மாதவிடாய் நேரத்தில் தடுப்பூசி போடக்கூடாது என்கிற வதந்திகளும், கர்ப்பகாலத்தில் தடுப்பூசி போடலாமா கூடாதா என்கிற குழப்பங்களும் எழுந்திருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் டாக்டர் சசித்ரா தாமோதரன்.
‘’இதுவரை எந்த நோய்க்கும், எந்த ஒரு தடுப்பு மருந்துக்கும் ஏற்படாத சந்தேகங்கள், கேள்விகள் இந்த கோவிட் தடுப்பு மருந்துக்கு மட்டும் வந்துகொண்டே இருக்கிறது. இதில் புதிதாக சேர்ந்திருக்கும் சந்தேகம்தான் ‘மாதவிடாய் காலத்தில் ஒரு பொண்ணு பலவீனமா ஆகிடுவா… அந்த நேரத்துல தடுப்பூசி போட்டுக்கக்கூடாது’ என்கிற தகவல். இந்தத் தகவலின் உண்மை நிலையை தெரிந்துகொள்வதற்கு முன்பு மாதவிடாய் சுழற்சியைப் பற்றி ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் இயல்பாக, சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம்தான் மாதவிடாய் சுழற்சி. ஒரு பெண்ணின் சினைப்பையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள், அதைக்கட்டுப்படுத்துக்கூடிய மூளையில் இருக்கக்கூடிய FSH, LH ஹார்மோன்கள் சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான விகிதத்தில், சரியான கால இடைவெளியில் சரியாகச் சுழன்று ஒரு பெண்ணின் கர்ப்பப்பையை கருத்தரிக்க தயார்படுத்துகிறது. இதில் கருத்தரித்தல் ஏற்படாதபோது மாதவிடாய் ஏற்படுகிறது. இதுதான் மாதவிடாய் சுழற்சி.
‘ஒரு பெண் மாதவிடாய்க்கு 5 நாள் முன்பும், 5 நாள் பின்பும் நோய் எதிர்ப்பு சக்தி குறையுது, இந்த நாட்களில் பெண்கள் பலவீனமாகிவிடுகிறார்கள், அதனால் தடுப்பூசி போடவேண்டாம்’ என சிலர் வதந்திகளைப் பரப்புகிறார்கள். இதில் சுத்தமாக உண்மை இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
அப்படியானால் மாதவிடாய் நேரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையா டாக்டர் என்றால், நிச்சயம் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அதை என்ன சொல்கிறோம் என்றால் Cellular Inflamation. அதாவது செல்களில் நடக்கக்கூடிய வளர்ச்சி. இதில் என்ன ஆகிறது என்றால் ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் அளவு குறைகிறது. ப்ரோஸ்டோகிளாண்டின்ஸ் என்கிற கெமிக்கல் சுரக்கிறது. அது சுரந்து கர்ப்பப்பையை சுருக்குவதால் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால் கட்டாயம் உடல் வலி, சோர்வு, உற்சாகமின்மை தற்காலிகமாக ஏற்படுகிறது. ஆனால், ஒரு பெண்ணின் உடல் அதைத் தன்னைத்தானே சரிசெய்து அடுத்து சுழற்சிக்கு தயாராகிக்கொள்கிறது. அப்படி தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் உடல் பெண்ணுக்கு இருக்கும்போது இப்படி 5 நாளுக்கு முன், 5 நாளுக்குப்பின் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதைகளே. இது எதையும் நம்பாதீர்கள். தயவுசெய்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் மருத்துவராக நான் சொல்லும் ஆலோசனை.
கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் பெண்கள், குழந்தைப்பேறுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்கிற கேள்விக்கு வருவோம். அமெரிக்கா, லண்டனில் இருந்து சில பரிந்துரைகள் இதற்கு பதில் சொல்கின்றன. அமெரிக்காவில் வழங்கப்படும் Pfizer, Moderna தடுப்பூசிகள் கர்ப்ப காலத்தில் போடலாம். பாலூட்டும் பெண்கள், குழந்தைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போடலாம் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நம் நாட்டில் வழங்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் போடலாமா என்பதற்கு இந்த தடுப்பூசிகளே பதில் சொல்கின்றன.
கோவிஷீல்டு என்பது Live Attenuated Vaccine. அதவாது வீரியம் குறைவாக இருக்கிற ஆனால் உயிரோடு இருக்கிற வைரஸ் வேக்ஸின். உயிரோடு இருக்கிற எந்த வைரஸ் தடுப்பூசியுமே கர்ப்பகாலத்தில் வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அதேப்போல் கோவாக்ஸின் என்பது Killed Virus. அதாவது உயிரற்ற வைரஸ் வேக்ஸின். கர்ப்பணி பெண்கள் உள்பட எல்லோருக்கும் இந்த தடுப்பூசி போடப்படவேண்டும் என்பதால்தான் இந்த தடுப்பூசியை மத்திய அரசு தயார் செய்திருக்கிறது. ஆனால், இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் இதன் க்ளினிக்கல் ட்ரையல் அதாவது முழுமையான பரிசோதனைகள் இன்னும் முடிவடையவில்லை. அதனால் இந்த இரு தடுப்பூசிகளும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைப்பேறு சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் போடுவதில்லை.
இந்தப் பெண்களைத்தவிர மற்ற எல்லா பெண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். தயவுசெய்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தடுப்பூசிகளை பரிந்துரைப்பது அனுபவமிக்க மருத்துவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இரண்டாவது தடுப்பூசி போட்டப்பிறகும் மாஸ்க் அணிவது, கைகளை முறையாகக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என எல்லாமே அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள். லட்சத்தில் ஒருவருக்கு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஊதிப்பெரிதாக்காதீர்கள். வதந்திகளைத் தேவையில்லாமல் பரப்பாதீர்கள். தடுப்பூசி ஒவ்வொரு மனிதனின் கடமை. அதனால் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கொரோனா எனும் அரக்கனிடம் இருந்து மீண்டெழுவது நம் கைகளில்தான் இருக்கிறது.’’
source https://www.vikatan.com/health/healthy/covid-vaccination-during-pregnancy-and-lactation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக