ஐகோர்ட் கண்காணிப்பு,144 தடையுத்தரவு, பக்தர்களுக்கு அனுமதியில்லை, போலீஸ் கெடுபிடி - இத்தனையும் தாண்டி, 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நவகிரகங்களில் செவ்வாய் தலமாகக் கருதப்படும் இந்தக் கோயிலை சைவத்திருமடமான தருமை ஆதீனம் நிர்வகித்துவருகிறது. இங்கு மூலவராக வைத்தியநாதசுவாமியும், தையல்நாயகி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த ஆலயத்தின் குடமுழுக்கு கடைசியாக 1998-ம் ஆண்டு செய்யப்பட்டது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும். ஆனால், 20 வருடங்களுக்கு பிறகு, கடந்த ஆண்டு சித்தியடைந்த தருமை ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் 12.9.2019 அன்று அடிக்கல் நாட்டி திருப்பணிகளைத் துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து 2 ஆண்டுகளாக திருப்பணிகள் ராஜகோபுரம் முதல் திருக்குளம் வரை பழைமை மாறாமலும், புதுமையுடனும் இணைத்து பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டன. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற கோயில் திருப்பணிகள் சிறப்புற நிறைவுற்று, தற்போதுள்ள தருமை ஆதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமச்சார்ய சுவாமிகளின் தலைமையில் 29-4-2021 இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.
சிவபெருமான் வைத்தியநாதராக எழுந்தருளி தீராதநோய்களைத் தீர்த்தருளி அருள்பாலிக்கும் தலம் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் நீராடி இறைவனையும் வணங்கி தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் செவ்வாய்க்கு தீபமேற்றி தரிசனம் செய்ய எத்தனை கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கபெரும் என்பது ஐதிகம்.
இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிராகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம்.
ஜடாயு குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. திருச்சாந்துருண்டை வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்வர் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகம் பற்றி மயிலாடுதுறை சிவத்தொண்டர் அப்பர்சுந்தரம் கூறுகையில்,
“தையல்நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவோருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். இப்பேற்பட்ட வைத்திநாதசுவாமிக்குக் கும்பாபிஷகம் நிறைவேற்றியுள்ள நிலையில் நிச்சயமாகத் திருவருள் புரிந்து பூவுலகை காப்பார். கொரோனா என்னும் கொடிய நோய், நாடு முழுவதும் பரவி தன்னுடைய வீரியத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்ற இவ்வேளையில், உலக மக்களின் ஷேமத்திற்கு அச்சாரமாக காலங்காலமாக போற்றிப் புகழப்படுகின்ற ஆலயமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ வைத்திநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதால் கொரோனா நோய், படிப்படியாய் விலகிவிடும் என்னும் அதீத நம்பிக்கை ஆன்மிகவாதிகளின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
source https://www.vikatan.com/spiritual/news/vaitheeswaran-kovil-vaithiyanathaswamy-temple-kumbabhishekam-happened-today
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக