Ad

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

சென்னை: வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனிடம் பணம் பறித்த விவகாரம்! - காவலர்கள் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம். இவருக்கு 17 வயதில் மகன் உள்ளார். அவர், பிளஸ் -1 படித்து வருகிறார். பெற்றோருடன் சண்டைப்போட்ட மாணவன், வீட்டிலிருந்து 63,500 ரூபாயைக் எடுத்துக் கொண்டு பஸ் மூலம் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து எங்குச் செல்வது எனத் தெரியாமல் மாணவன் விழிபிதுங்கினார்.

மாயம்

இந்தச் சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட கோயம்பேடு காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக், தனியாக நின்றுக் கொண்டிருந்த மாணவனிடம் விசாரித்தனர். அப்போது மாணவன், வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்குத் தனியாக வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார். அதைக்கேட்ட போலீஸார் மாணவனை வீட்டுக்கு திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினர். அப்போது, மாணவன் வீட்டுக்குச் செல்ல மறுத்திருக்கிறார். அதனால் போலீஸார் மாணவன் வைத்திலிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் காவலர்கள் மாணவனை எச்சரித்துவிட்டு சென்றுவிட்டனர்.

பணத்தைப் பறிக்கொடுத்ததால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மாணவன் தவித்தார். பின்னர் தந்தை அந்தோணி செல்வத்துக்கு போன் மூலம் மாணவன் தகவல் தெரிவித்தார். ஏற்கெனவே மகனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தோணி செல்வம், உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தார். பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்தில் அந்தோணி செல்வம் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மாணவனிடம் பணம் பறித்துச் சென்ற காவலர்கள் யாரென்று கோயம்பேடு போலீஸார் விசாரித்தனர்.

Also Read: சென்னை: திருமண நாளில் மணமகன் மாயம் - மணமகள் குடும்பத்தினர் மறியல்!

போலீஸ்

இதற்கிடையில் மாணவனின் தந்தையிடம் போனில் பேசிய காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக், புகாரை வாபஸ் பெறுங்கள், பணத்தை திரும்ப தந்துவிடுகிறோம் என்று கூறியிருக்கின்றனர். அந்தத் தகவலையும் அந்தோணி செல்வம் உதவி கமிஷனர் ரமேஷ்பாபுவிடம் கூறினார். அதையடுத்து உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாணவனிடம் பணம் பறித்த குற்றச்சாட்டின்பேரில் காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். அதன்பேரில் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மாணவனிடம் பணம் பறித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.



source https://www.vikatan.com/news/crime/chennai-cop-suspended-in-money-fraud-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக