1977ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆரை தேர்ந்தெடுத்து தமிழக முதல்வராக்கிய சிறப்பு பெற்றது அருப்புக்கோட்டை தொகுதி. இத்தொகுதியில் அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும், 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. திருச்சுழி தொகுதி உருவாக்கப்பட்டதற்கு முன் அருப்புக்கோட்டை தொகுதியில் 2006ல் திமுகவில் தங்கம் தென்னரசும், 2011ல் அதிமுகவைச் சேர்ந்த வைகைசெல்வனும் வெற்றிபெற்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இந்த முறையும் மீண்டும் அங்கு தி.மு.க சார்பில் களமிறங்கினார். விருதுநகரில் தங்கியிருந்தாலும் அடிக்கடி தொகுதிக்குள் வலம் வந்த ராமச்சந்திரன், கடந்த காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடான பகுதிகளில் சொந்தச் செலவில் லாரியில் குடிநீர் விநியோகம் செய்தது, கொரோனா காலத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணம் அளித்தது, மக்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் கலந்துகொண்டது போன்றவை அவரது வெற்றிக்குச் சாதகமான அம்சங்களாக இருந்தன. அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மூன்றாம் முறையாகக் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மீது தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதிக்குள் தலைகாட்டுகிறார் என்றும், கொரோனா காலத்தில்கூட எட்டிப் பார்க்கவில்லை என்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ராமச்சந்திரனுக்குக் கூடுதல் ப்ளஸ் பாயின்டாக பார்க்கப்பட்டது.
மக்கள் நீதி மய்ய வேட்பாளராக போட்டியிட்ட ஜெயவிலாஸ் நூற்பாலை நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான உமாதேவிக்கு அவர் சார்ந்த நாயக்கர் சமுதாய மக்கள் மற்றும் அந்த நிறுவன தொழிலாளர்களின் வாக்குகள் மட்டுமே சாதகமாக இருந்தன. கடந்த காலங்களில் சாத்தூர் தொகுதியில் ஆறு முறையும், விளாத்திகுளம் மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதிகளில் தலா ஒரு முறையும் என அ.தி.மு.க.,தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் சார்பாகவும் எட்டு முறை எல்.எல்.ஏ-வாகியிருக்கிறார் ராமச்சந்திரன்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kkssr-ramachandran-a-short-analysis-on-tamilnadu-assembly-elections-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக