"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே...
இயந்திரங்கள் வகுத்திடுவீரே...
அரும்பும் வேர்வை உதிர்த்திப் புவிமேல் ஆயிரந்தொழில் செய்திடுவீரே..!"
என்கிறார் மகாகவி.
"வெறுங்கை என்பது மூடத்தனம்...
உன் விரல்கள் பத்தும் மூலதனம்..."
என்கிறார் இன்னொரு கவிஞர் தாரா பாரதி.
கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை..!
உழைப்பே உயர்வு தரும்..!
செய்யும் தொழிலே தெய்வம்..!
- என்றெல்லாம் சொல்லிப் பழகிய நமக்கு, உழைப்பை மறுத்தால்தான் உயர்வு வரும் என்று ஒருமுறை உலகமே போராடியிருக்கிறது என்பது புதிதாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது.
ஆம்... நீண்ட காலமாய் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும், தினமும் பன்னிரண்டு மணிநேரம் முதல் பதினெட்டு மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்த மனிதர்கள் முதன்முதலாய் 18ம் நூற்றாண்டில் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.
நிர்வாகங்களும், மேல்தட்டு மக்களும், அரசும், தமது பணியாளர்களை "வேலை செய், வேலை செய்" என்று வேலை வாங்குவதால் யாருக்குப் பலன் என்று யோசித்த மக்கள் 'தொடர் உழைப்பை மறுப்போம்... என்ன ஆகும்?' என்று கேள்வியெழுப்பத் தொடங்கினார்கள்.
மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் எழுதிய பொதுவுடைமை அறிக்கையைப் பின்பற்றி உலகெங்கும்... குறிப்பாக இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில், 1880களில் தங்களது 18 மணிநேர வேலை நேரத்தைக் குறைப்பதற்காகப் போராடத் தொடங்கிய தொழிலாளர்கள், ஒருகட்டத்தில் அதை 'எட்டு மணிநேர இயக்கமாகவே' மாற்றினார்கள்.
"எட்டு மணிநேர உழைப்பு...
எட்டு மணிநேர ஓய்வு...
எட்டு மணிநேர வாழ்க்கை..."
என்பது சட்டமயமாக்கப்பட வேண்டும், அது உலகம் முழுவதும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் சென்றடைய வேண்டும்..."
என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திய அமெரிக்கத் தொழிலாளர்கள், 1886ம் ஆண்டு, மே 1 அன்று சிகாகோ நகரின் ஹே மார்க்கெட் வளாகத்தில் பெருந்திரளாகக் கூடினர். அவர்களை அடக்க இலினாய்ஸ் தேசியப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு, அதைத் தொடர்ந்த வெடிகுண்டு தாக்குதல், அதில் உயிரிழந்த தொழிலாளர்கள் என மாறியது இந்த 'ஹே மார்க்கெட் அடக்குமுறை'. மே 1 அன்று பற்றிய தீ, பிற்பாடு உலகெங்கும் வேகமாகப் பரவியது.
அமெரிக்காவைத் தொடர்ந்து உலகெங்கும் வலிமையுடன் நடந்த தொழிலாளர்களின் போராட்டங்கள், அது வென்றெடுத்த வெற்றி என்று உண்மையில் ஒரு வலிமிகுந்த வரலாற்றின் இனிப்பான முடிவுதான் இந்த மே தினம். அத்தனை இழப்புக்குப் பிறகுதான் அவர்கள் அடிமை ஸ்தானத்தில் இருந்து உழைப்பாளிகள் ஆனார்கள்!
ஆக... தினமும் பதினெட்டு மணிநேரம் வரை உழைத்த உழைப்பாளிகள், 'எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யமாட்டோம்' என உழைப்பை மறுத்த தினம்தான் இந்த மே தினம் என்பதும், அந்த வெற்றிதான் இன்றைய மே தினக் கொண்டாட்டங்களும். நமது நாட்டில், முதன்முதலாக மே தினக் கொண்டாட்டம் 1923ல் சென்னையில் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடந்தது என்பதும், அதனைத் தொடர்ந்துதான் கராச்சி, பாம்பே, மற்ற பிற இடங்களிலும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது..
அதீத உழைப்பை மறுத்த பின்னரே தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்த உழைப்பாளர்கள், அந்த ஓய்வில் யோசிக்க ஆரம்பித்து, அதைச் செயல்படுத்தும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையின் தரம் உயர்வதையும், தமது வாழ்வு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதையும் உலகெங்கும் உணரத் தொடங்கினார்கள்.
"ஆயிரந் தொழில் செய்திடுவீரே...
பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்..."
என்று மகாகவி போற்றும் உழைப்பாளிகள் அனைவரும் அடுத்த கட்டத்தை அடைய இந்த உழைப்பாளர் தினத்தில் வாழ்த்துகிறோம்.
source https://www.vikatan.com/government-and-politics/policies/the-story-and-the-history-behind-the-may-day-aka-labour-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக